திருச்சூரில் பாரம்பரியமான மங்களம் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஜோஜு ஜார்ஜ். அதிரடியான தாதாவும் கூட. இவரோடு கல்லூரியில் படித்த நண்பர்கள் சிலரும் அதே செல்வாக்கோடு வேறு வேறு பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். அவர்களை கேட்காமல் போலீஸ் கூட ஏரியாவில் எந்தவித நடவடிக்கையும் எடுக்க முடியாத அளவுக்கு மிரட்டுகிறார்கள். அதே நேரத்தில் மிகவும் கொடூரமாக கொலை செய்யும் புதிய இளம் குற்றவாளிகள் வளர்ந்து வருகிறார்கள்.
ஜோஜு ஜார்ஜ் மனைவி அபிநயாவை இந்த குற்றவாளிகள் வம்பிழுக்க, அவர்களை அடித்து துவைக்கிறார் ஜோஜு ஜார்ஜ். இதனால் அவரை பழி வாங்க, பாரம்பரியமான அந்த பங்களாவில் அவர் இல்லாத நேரம் பார்த்து அபிநயாவை பாலியல் துன்புறுத்தல் செய்கிறார்கள். இதனால் ஜோஜு ஜார்ஜ் அவருடைய தாதா நண்பர்கள், போலீஸ் இரு தரப்பும் வலை போட்டு தேடுகிறது. அவர்களிடம் எப்படி சிக்குகிறார்கள் என்பதே படம்.
ஜோஜூ ஜார்ஜ் செல்வாக்கு, அவரது அதிரடி எல்லாவற்றுக்கும் ஆரம்பத்திலேயே காட்சிகளை வைத்து படத்தை ஹைப் ஏற்றி காட்டியிருக்கிறார்கள். அதிலேயே படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு கூடி விடுகிறது. ஒவ்வொரு காட்சியிலும் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அதிரடியாக தாக்கும் காட்சியிலும், பாதிக்கபப்ட்ட மனைவியை பார்க்கும் குற்றவுணர்ச்சியிலும், குடும்பத்தைப் பாதுகாக்கும் பதட்டத்திலும் உடல்மொழியில் அசத்துகிறார் ஜோஜு ஜார்ஜ்.
அபிநயா அழகு பதுமையாக வருகிறார். அதுவே அவரது கதாபாத்திரத்திற்கான காரணமாக அமைந்து விடுகிறது. குற்றவாளிகளாக வரும் கதாபாத்திரங்கள் பயமுறுத்துகிறார்கள். அவரது நண்பர்கள் தாதாக்களாக வந்து அட்டகாசமாக அச்சுறுத்துகிறார்கள்.
ஜோஜு ஜார்ஜ் மற்றும் அந்த கும்பலை உருவாக்கும் பிரசாந்த் அலெக்சாண்டர், பாபி குரியன், சுஜித் சங்கர் மற்றும் அபயா ஹிரண்மயி ஆகியோர் நடித்த கதாபாத்திரங்கள், பல வருடங்கள் ஒன்றாக சுற்றித் திரிந்ததில் இருந்து மட்டுமே ஒருவரோடு ஒருவர் எளிதாக இருப்பது போல் தெரிகிறது. ஜோஜு தனது கூட்டாளியான கௌரி (அபிநயா) உடனான உறவின் தீவிரமும் ஒரு சில காட்சிகளில் ஆழத்தை அளிக்கிறது.
சீமா, சாந்தினி ஸ்ரீதரன், பிரசாந்த் அலெக்சாண்டர் மற்றும் சுஜித் சங்கர் ஆகியோர் அடங்குவர், இவர்கள் அனைவரும் கதையை உள்வாங்கி நடிப்பில் படத்தை தாங்கி நிற்கிறார்கள்.
வேணு மற்றும் ஜிண்டோ இருவரின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரிய பலமாக அமைந்திருக்கிறது. சூழலின் பயங்கரத்தை முகபாவனையில் பதிவு செய்து நம்மை காட்சிகளில் ஆழ்த்துகிறார்கள்.
மனு ஆண்டனியின் படத்தொகுப்பு கச்சிதமாக இருக்கிறது. குறிப்பாக சேஸிங் காட்சியில் சீட் நுனிக்கு நம்மை நகர்த்துகிறார்.
முதல் முறையாக கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஜோஜு ஜார். அனைத்திலும் வெற்றி கிடைத்திருக்கிறது.