லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில வாரங்களில் படப்பிடிப்பு நிறைவடைய உள்ளது. மே 1ம் தேதி கோடை விடுமுறைக்கு படம் ரிலீஸ் என்று கூறப்பட்டநிலையில், தீபாவளிக்கு அல்லது இந்த ஆண்டு கடைசியில்தான் படம் வெளியாகும் என்று படக்குழு தரப்பில் சொல்லப்படுகிறது.
ரஜினி நடிக்கும் 171வது படம் கூலி, அனிருத் இசையமைக்கிறார். இந்த படத்துக்கு தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க பெரிய எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது. காரணம், படத்தில் நடிக்கும் நட்சத்திர பட்டாளங்கள். பான் இந்தியா படம் என்ற கான்செப்ட்டில் கூலி உருவாகிறது. அதாவது, படத்தில் அனைத்து மொழி நடிகர்களும் இருக்க வேண்டும். அனைத்து மொழிகளிலும் படம் ஹிட்டாக வேண்டும் என்ற கான்செப்டில் படத்தை பிரம்மாண்டமாக உருவாக்கிறது சன் பிக்சர்ஸ்.
அதன்படி, மலையாளத்தில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமான ஷாபின்சாகீர் முக்கியமான வேடத்தில் வருகிறார். கன்னடத்தின் பிரபலமான ஹீரோவான உபேந்திராவும் படத்தில் இருக்கிறார். தெலுங்கு ஹீரோவான நாகர்ஜூனாவும் நடித்து வருகிறார். இவர்களை தவிர, இந்தி சூப்பர்ஸ்டாரான அமீர்கானும் கவுரவ வேடத்தில் வருவதாக தகவல். மேலும், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் உட்பட ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் இருக்கிறார்கள். ஒரு பாடலுக்கு பூஜாஹெக்டே ஆடுகிறார்.
இந்த காம்பினேசனை பார்க்கும்போது படம் இந்தியா முழுக்க சில ஆயிரம் தியேட்டர்களிலும், உலகம் முழுக்க பல மொழிகளிலும் வெளியாகும் என தெரிகிறது.. ஆக, இந்த படத்தின் வசூல் ஆயிரம் கோடியை எட்டும், எட்ட வேண்டும் என்று படக்குழு நினைக்கிறதாம். இதற்குமுன்பு, தமிழ் சினிமாவில் ரஜினி நடித்த 2.0 படம்தான் தமிழில் அதிக வசூலை ஈட்டிய படம். அந்த படம் 700 முதல் 800 கோடி வசூலை ஈட்டியுள்ளது. அந்த சாதனையை இன்னும் எந்த படமும் முறியடிக்கவில்லை. இந்தி நடிகரான அக் ஷய்குமார் இணைந்து நடித்ததால் அந்த படம் இவ்வளவு வசூலை எட்டியது. இந்தியில், மற்ற மாநிலங்களிலும் படத்துக்கு வசூல் அதிகரித்ததாக கூறப்படுகிறது.