தமிழ்நாட்டில் ஒவ்வொரு நாடாளுமன்றத் தேர்தலின் போதும், அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் முக்கிய தொகுதியாக பார்க்கப்படுபவற்றில் ஒன்று, சிவகங்கை. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவதால் இம்முறையும் நட்சத்திர அந்தஸ்தை பெற்றுள்ளது. சிவகங்கையில் வெற்றி வாய்ப்பு யாருக்கு? பார்க்கலாம்…
இதுவரை யார், யார் வெற்றிபெற்றுள்ளார்கள்?
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் 1967ஆம் ஆண்டு முதல் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 14 நாடாளுமன்றத் தேர்தல்களை இத்தொகுதி சந்தித்துள்ளது. இப்போது நடைபெறுவது 15ஆவது தேர்தல்.
தொடக்கத்தில் இத்தொகுதியின் கீழ் திருமயம், திருப்பத்தூர், காரைக்குடி, திருவாடனை, இளையான்குடி, சிவகங்கை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன. இந்நிலையில் முதலில் நடைபெற்ற 1967, 1971 இரண்டு தேர்தல்களிலும் திமுகவின் தா. கிருட்டிணன் இங்கு வெற்றி பெற்றார்.
1980ஆம் ஆண்டு நடைபெற்ற மூன்றாவது தேர்தலில் அதிமுகவின் பெரியசாமி தியாகராஜன் வெற்றிபெற்றார்.
அதன்பின்னர் 1984 தொடங்கி 2009 தொகுதி மறு சீரமைப்பு வரையான எட்டு தேர்தல்களிலும் காங்கிரஸ் கட்சியே தொடர்ந்து வென்றுள்ளது. 1980இல் காங்கிரஸ் சார்பில் ஆர்.வி. சுவாமிநாதன் வெற்றிபெற்றார். அதன்பின்னர் 1984, 1989, 1991, 1996, 2004, 1996, 1998 ஏழு தேர்தல்களிலும் ப. சிதம்பரம் தொடர்ந்து வெற்றிபெற்றார். இதில் 1996, 1998 ஆகிய இரு முறை ப. சிதம்பரம் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி சார்பில் களமிறங்கி வெற்றி பெற்றார்.
1999 தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் சுதர்சன நாச்சியப்பன் வென்றார். இந்தத் தேர்தலில் தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர் ப. சிதம்பரத்தை மூன்றாவது இடத்துக்கு தள்ளி, இரண்டாவது இடத்தை பாஜகவின் ஹெச். ராஜா பிடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
காங்கிரஸுடன் தமிழ்மாநில காங்கிரஸ் இணைந்த நிலையில் 2004இல் மீண்டும் காங்கிரஸ் சார்பில் ப. சிதம்பரம் போட்டியிட்டு வென்றார்.
2009 தேர்தலில் தொகுதி சீரமைப்புக்குப் பின்னர் சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி), புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த திருமயம், ஆலங்குடி ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளதாக சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதி மாறியது. இந்நிலையில் நடைபெற்ற 2009 தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மீண்டும் ப. சிதம்பரம் வெற்றிபெற்றார்.
அதனைத் தொடர்ந்து 2014இல் அதிமுகவின் பி.ஆர். செந்தில்நாதனும் 2019இல் காங்கிரஸின் கார்த்தி சிதம்பரமும் வெற்றி பெற்றனர்.
மொத்தமாக 14 முறை நாடாளுமன்ற தேர்தலை சந்தித்த சிவகங்கைத் தொகுதியில் 8 முறை தேசிய காங்கிரஸ், 2 முறை தமிழ் மாநில காங்கிரஸ், 2 முறை திமுக, 2 முறை அதிமுக வெற்றி பெற்றுள்ளது. இங்கு அதிக முறை காங்கிரஸ் வெற்றி பெற்று சிவகங்கை என்றால் காங்கிரஸ் கோட்டை என்ற பெயர் பெற்றிருந்தாலும் இந்த வெற்றி அனைத்தும் அதிமுக அல்லது திமுக கூட்டணியில் இருக்கும்போதே பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக அல்லது திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கும்போது அந்தக் கட்சிக்கே ஒதுக்கப்பட்டதால் சிவகங்கை காங்கிரஸ் தொகுதியாக மாறிப் போனது.
2014இல் நடைபெற்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ் என நான்கு முனைப் போட்டி இருந்தது. அப்போது முதன் முறையாக கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக நிறுத்தப்பட்டார். அந்தத் தேர்தல் முடிவில் அதிமுக வேட்பாளர் செந்தில்நாதன் 4,75,993 வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். 2ஆவது இடத்தில் திமுக வேட்பாளர் துரைராஜ் 2,46,608 வாக்குகளும், 3ஆவது இடத்தில் பாஜகவின் ஹெச்.ராஜா 1,33,763 வாக்குகளையும் பெற்றிருந்தனர். காங்கிரஸுக்கு நான்காவது இடம்தான் கிடைத்தது. கார்த்தி சிதம்பரம் அந்தத் தேர்தலில் 10,4678 வாக்கை மட்டுமே பெற்றிருந்தார்.
ஆனால், 2019இல் நடைபெற்ற தேர்தலில் திமுக – காங்கிரஸ் கூட்டணி சார்பில் மீண்டும் போட்டியிட்ட கார்த்தி சிதம்பரம் 5,66,104 வாக்குகளைப் பெற்று 3,32,244 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து அதிமுக கூட்டணியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ஹெச்.ராஜா 2,33,860 வாக்குகள் மட்டுமே பெற்றார். டிடிவி தினகரனின் அமமுக சார்பில் பேட்டியிட்ட தேர்போகி பாண்டி 1,22,534 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட சக்தி பிரியா 72,240 வாக்குகள், மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட்ட கவிஞர் சிநேகன் 22,931 வாக்குகளும் பெற்றனர்.
இப்போது யார், யார் போட்டியிடுகிறார்கள்?
சிவகங்கைத் தொகுதி 15வது முறையாக இப்போது நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்கிறது. ஆண் வாக்காளர்கள் 8,02,283; பெண் வாக்காளர்கள் 8,31,511; இதர வாக்காளர்கள் 63 பேர் இந்த தொகுதியில் உள்ளனர். முக்குலத்தோர், யாதவர் முத்திரையர், பட்டியல் பிரிவினர், உடையர், கிறிஸ்தவர், இஸ்லாமியர்கள், செட்டியார் சமூகத்தினர் இங்கு வசிக்கின்றனர்.
திமுக கூட்டணியில் இந்த முறையும் காங்கிரஸ் சார்பில் கார்த்தி சிதம்பரமே மீண்டும் போட்டியிடுகிறார். அதிமுகவில் சேவியர்தாஸ், பாஜக கூட்டணியில் இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவனத் தலைவர் தேவநாதன், தனித்து நிற்கும் நாம் தமிழர் கட்சி சார்பில் எழிலரசி உள்ளிட்ட 20 பேர் போட்டியிடுகின்றனர்.
யாருக்கு வெற்றி வாய்ப்பு?
சிவகங்கையில் காங்கிரஸுக்கு என்று தனியாக பெரும் வாக்கு வங்கி இல்லாத நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் வாக்குகளை நம்பியே கார்த்தி சிதம்பரம் களம் இறங்கியுள்ளார்.
ஆனால், முன்னதாக இந்தியா கூட்டணியின் சார்பில் மீண்டும் கார்த்தி சிதம்பரத்திற்கு வாய்ப்பு கொடுக்கக்கூடாது என எதிர்ப்புக் குரல் இருந்தது. வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பாக கடந்த பிப்ரவரி மாதம் முன்னாள் அமைச்சர் சுதர்சன் நாச்சியப்பன், கங்கிரஸ் மூத்தத் தலைவர் கே.ஆர். ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம் உட்பட சில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் நடத்தி காங்கிரஸ் தலைமைக்கு கார்த்திக் சிதம்பரத்திற்கு சீட் கொடுக்கக்கூடாது எனத் தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி வைத்தனர்.
அதேபோல், திமுக சார்பிலும் அந்த கட்சியைச் சேர்ந்தவர்களுக்கே சிவகங்கைத் தொகுதியைக் கொடுக்க வேண்டுமெனக் கேட்டனர். இந்நிலையில் காங்கிரஸ், திமுக இரு கட்சியினர் எதிர்பார்ப்பை மீறி மீண்டும் கார்த்தி சிதம்பரத்துக்கு வாய்ப்பு கொடுத்திருப்பதால் எப்படி வேலை செய்து வாக்கை வாங்குகிறார்கள் என்பதைப் பொறுத்தே முடிவுகள் அமையும் எனச் சொல்கிறார்கள்.
அதிமுக சார்பில் சிவகங்கைத் தொகுதியில் போட்டியிட 40 பேர் விண்ணப்பித்து இருந்தனர். இதில் மாவட்டச் செயலாளரும் முன்னாள் எம்பியுமான பி.ஆர். செந்தில்நாதனின் ஆதரவாளரான கல்லல் ஒன்றியச் செயலாளரான அ.சேவியர் தாஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. புது முகமாக இருந்தாலும் தொகுதியில் அதிகமாக இருக்கும் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது அதிமுகவுக்கு சாதகமான அம்சம் என கூறப்படுகிறது. அதிமுகவின் பாரம்பரிய வாக்கு பலத்துடன் பாஜக எதிர்ப்பு வாக்குகளும் கார்த்தி சிதம்பரம் எதிர்ப்பு வாக்குகளும் அதிமுகவுக்கே வரும் என நம்பிக்கையுடன் உள்ளார்கள் அதிமுகவினர்.
பாஜக கூட்டணியில் போட்டியிடும் தேவநாதனும் சமூக பலம் உள்ளவர்தான். இவர் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக சார்பில் ராமநாதபுரம் திருவாடனைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்தவர். இந்நிலையில், சிவகங்கை தொகுதியில் 2 லட்சத்திற்கும் அதிகமான யாதவர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் இருப்பதால் அவர்களின் கணிசமான வாக்குகள் தனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையிலேயே இந்த தொகுதியை தேவநாதன் தேர்ந்தெடுத்துள்ளார்.
கூட்டணியின்றி தனித்து களம் காணும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எழிலரசி, சின்னம் புதிது என்றாலும் தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். ஏற்கெனவே சீமான் தொகுதிக்கு வந்து எழிலரசிக்காக பிரச்சாரம் செய்தது நாம் தமிழர் கட்சியினருக்கு புதிய உற்சாகத்தை தந்துள்ளது.
“பாஜகவின் வாக்கு வங்கி, யாதவர் சமூக ஓட்டுகளுடன் அமமுக, ஓபிஎஸ், தமிழ் மாநில காங்கிரஸ் ஆதரவாளர்களும் இங்கே அதிகம் இருப்பதால் காங்கிரசுக்கு கடும் நெருக்கடியைக் கொடுத்து வெற்றி வாய்ப்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன,” என்று பாஜகவினர் நம்பிக்கையுடன் உள்ளனர்.
ஆனால் டிடிவி தினகரன், ஓபிஎஸ் ஆதரவு ஓட்டுகள் முக்குலத்தோர் சமூக ஓட்டுகள்தான். முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரே அதிமுக சார்பில் நிற்கும்போது யாதவர் சமூகத்தைச் சேர்ந்தவரும் வெளியூர்க்காரருமான தேவநாதனை அவர்கள் ஆதரிக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் சிவகங்கையில் காங்கிரஸ் – அதிமுக இடையே தான் கடுமையான போட்டி நிலவுகிறது.