ஹுருன் குளோபல் என்ற அமைப்பு உலகின் பணக்கார பெண்கள் குறித்த லிஸ்டை வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் அமெரிக்காவைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில், முதல்முறையாக இந்தியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் டாப் 10ல் இடம்பெற்றுள்ளார். அவர் வேறு யாரும் இல்லை ஹெச்.சி.எல் நிறுவனத்தின் தலைவர் ரோஷினி நாடார் தான். 40 பில்லியன் டாலர் மதிப்புடன் அவர் உலகின் 5வது பணக்கார பெண்ணாக இருக்கிறார்.
ஐடி துறையில் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மிக முக்கிய இடம் இருக்கிறது. ஐடி துறையில் இந்திய நிறுவனங்கள் முக்கிய இடத்தில் இருக்கிறது. அப்படி இந்தியாவில் உள்ள டாப் ஐடி நிறுவனங்களில் ஒன்றுதான் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ். தமிழகத்தைச் சேர்ந்த ஷிவ் நாடாரின் ஹெச்.சி.எல் டெக்னாலஜிஸ் நிறுவனம் சர்வதேச அளவில் முக்கிய நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.
ரோஷினி நாடார் இப்போது HCL டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைவராக ஷிவ் நாடாரின் மகள் ரோஷினி நாடார் இருக்கிறார். இவர் தற்போது மற்றொரு உலக சாதனையைப் படைத்துள்ளார். ரூ.3.5 லட்சம் கோடி (US$40 பில்லியன்) நிகர சொத்து மதிப்புடன் உலகின் முதல் 10 பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். இதன் மூலம் உலகின் பெரும் பணக்கார பெண்கள் பட்டியலில் இடம்பிடித்த முதல் இந்தியர் என்ற சிறப்பையும் அவர் பெற்றுள்ளார். ஹுருன் குளோபல் என்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் உலகின் பணக்கார பெண்கள் குறித்த லிஸ்ட்டை வெளியிடும். அதில் தான் ரூ.3.5 லட்சம் கோடி சொத்துக்களுடன் ரோஷினி நாடார் 5வது இடத்தை பிடித்துள்ளார். அவரது தந்தை ஷிவ் நாடார், HCL டெக்னாலஜிஸில் தனக்கு இருந்த 47% பங்குகளைச் சமீபத்தில் தான் ரோஷினி நாடாரின் பெயருக்கு மாற்றினார். அதன் மூலமே டாப் 10 பட்டியலில் ரோஷினி நாடார் நுழைந்துள்ளார்.
பணக்கார பெண்கள் உலகின் டாப் 10 பணக்காரர்கள் லிஸ்டில் முதலிடத்தில் பிரபல அமெரிக்க நிறுவனமான வால்மார்ட்டின் நிறுவனர் சாம் வால்டனின் மகள் ஆலிஸ் லூயிஸ் வால்டன் (102 பில்லியன் டாலர்) இருக்கிறார். இரண்டாவது இடத்தில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் (67 பில்லியன் டாலர்), மூன்றாவது இடத்தில் ஜூலியா கோச் (அமெரிக்கா- 60 பில்லியன் டாலர்), 4வது இடத்தில் ஜாக்குலின் மார்ஸ் (அமெரிக்கா- 54 பில்லியன் டாலர்) உள்ளனர். அதைத் தொடர்ந்து 40 பில்லின் டாலர் சொத்து மதிப்புடன் ரோஷினி நாடார் 5வது இடத்தில் இருக்கிறார். முதல் இந்தியர் இந்த டாப் 10 இடங்களில் அமெரிக்க நிறுவனங்களின் பெண்களை ஆதிக்கம் செலுத்துகிறார்கள். டாப் 10இல் 8 பேர் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் ஆவர். பிரான்ஸ் நாட்டை சேர்ந்த பிரான்சுவா பெட்டன்கோர்ட் மேயர்ஸ் மற்றும் நமது ரோஷினி நாடார் ஆகியோர் மட்டுமே அமெரிக்கா அல்லாதவர்கள் ஆவர். மேலும், இதன் மூலம் உலகின் பணக்கார பெண்கள் லிஸ்டில் இடம்பெற்ற முதல் இந்தியர் என்ற சாதனையையும் ரோஷினி படைத்துள்ளார்.
யார் இந்த ரோஷினி நாடார் 1982ஆம் ஆண்டு பிறந்த ரோஷினி நாடார், 2020ஆம் ஆண்டு முதலே HCL நிறுவனத்தை வழிநடத்தி வருகிறார். அமெரிக்காவின் இல்லினாய்ஸில் உள்ள நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டம் பெற்ற ரோஷினி, பின்னர் கெல்லாக் மேலாண்மைப் பள்ளியில் எம்பிஏ பட்டம் பெற்றார்.