அமெரிக்கா பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தக யுத்தத்தை வலுப்படுத்தியுள்ளது. அமெரிக்க வரிவிதிப்பால் இந்தியாவுக்கு பல்வேறு பாதகங்கள் இருந்தாலும் கூட, ஜவுளித் துறையில் பெரும் பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் தெரிகிறது.
உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் வெளியிட்டார்.
ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்பு முடிவு உலக நாடுகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பது குறித்து பல்வேறு நாடுகளின் வர்த்தக அமைச்சகங்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்காவின் இந்த முடிவு உலகளவில் வர்த்தகப் போருக்கு வழிவகுக்கும் என்பது பல்வேறு துறைகளைச் சேர்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நடவடிக்கையின்படி, சீனாவுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன வணிக துறை அறிவித்துள்ளது. இதுவே வர்த்தகப் போரின் தீவிரத்துக்கு அடித்தளம் இடுவதாக அமைந்துள்ளது.
‘சீனாவில் இருந்து அரிய வகை தனிமங்கள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. அந்த தனிமங்களின் ஏற்றுமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்படும். இதனால் அமெரிக்காவின் கணினி சிப் மற்றும் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி உற்பத்தி பாதிக்கப்படும். மேலும், 27 அமெரிக்க நிறுவனங்களுக்கு தடை விதிக்கவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
அமெரிக்க அரசின் வரி விதிப்பை எதிர்த்து உலக வர்த்தக அமைப்பில் வழக்கு தொடரவும் முடிவு செய்துள்ளோம். எங்கள் நாட்டின் மீது அமெரிக்கா 34 சதவீத வரியை விதித்திருக்கிறது. அதே அளவு வரியை நாங்களும் விதித்திருக்கிறோம். இந்த புதிய வரிவிதிப்பு ஏப்ரல் 10-ம் தேதி முதல் அமலுக்கு வரும்’ என சீன அரசு தரப்பு தெரிவிக்கிறது.
இந்திய ஜவுளித் துறைக்கு ஏற்றம்: ட்ரம்ப் தொடங்கி வைத்துள்ள வரிவிதிப்பு யுத்தம் குறித்து சர்வதேச பொருளாதார நிபுணர்கள் கூறும்போது, ‘அமெரிக்க வரி விதிப்புக்கு பிரான்ஸ், கனடா உள்ளிட்ட நாடுகள் பகிரங்கமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அமெரிக்காவில் முதலீடு செய்ய மாட்டோம் என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
வரி விதிப்பால் அமெரிக்கா, சீனா இடையிலான வர்த்தக போர் தீவிரமடைந்திருக்கிறது. இனிமேல் சீன பொருட்கள், இந்திய சந்தையை நோக்கி திரும்ப வாய்ப்பிருக்கிறது. இந்திய பொருட்களுக்கு 27 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. இதன் காரணமாக இந்திய வைரங்கள், தங்க நகைகள், மருந்து பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கப்படும். அதேநேரம் இந்திய ஜவுளி ஏற்றுமதி ஊக்கம் பெறும்.
அதாவது, சர்வதேச ஜவுளி ஏற்றுமதியில் இந்தியா, வங்கதேசம், வியட்நாம் ஆகிய நாடுகளிடையே கடுமையான போட்டி நிலவுகிறது.
தற்போது வங்கதேச பொருட்களுக்கு 37%, வியட்நாம் பொருட்களுக்கு 46% இறக்குமதி வரியை அமெரிக்கா விதித்திருக்கிறது. இதன் காரணமாக இரு நாடுகளின் ஜவுளி ஏற்றுமதி கணிசமாக பாதிக்கப்படும். அதேநேரம் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அதிக அளவில் ஜவுளி ஏற்றுமதி செய்யப்படும்’ என்கின்றனர்.
இந்தியப் பங்குச் சந்தை வீழ்ச்சி: அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு தொடர்பான குழப்ப நிலை சர்வதேச சந்தைகளில் எதிரொலித்தது. குறிப்பாக, அதன் தாக்கத்தால் இந்திய பங்குச் சந்தைகளில் நேற்றைய வர்த்தகம் கடும் சரிவுடன் முடிவடைந்தது. பிஎஸ்இ சென்செக்ஸ் 931 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு (-1.22%) 75,365 புள்ளிகளில் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டெண் நிஃப்டி 346 புள்ளிகள் குறைந்து (-1.49) 22,904 புள்ளிகளில் நிலைத்தது.