மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை கண்டித்து தமிழக எம்பிக்கள் இன்று நாடாளுமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று 2024-25-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழகத்தில் தற்போது நடந்துகொண்டிருக்கும் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் பல்வேறு திட்டப் பணிகளுக்கு நிதி ஒதுக்குமாறு மத்திய அரசை கேட்டுக்கொண்டிருந்தார்.
ஆனால் முதல்வரின் கோரிக்கை மற்றும் தமிழக மக்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தமிழகத்துக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் தமிழகம் என்ற வார்த்தைகூட யே இந்த பட்ஜெட்டில் பயன்படுத்தப்படவில்லை. தமிழக மக்கள் மற்றும் அரசியல் தலைவர்களிடையே இது கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதேநேரத்தில் ஆந்திரா மற்றும் பிஹார் மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அதிருப்தியை அதிகரித்துள்ளன. மத்திய அரசு தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தை நம்பியிருப்பதால் அம்மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.
முதல்வர் ஸ்டாலின் அதிருப்தி
மத்திய பட்ஜெட்டில் தமிழகம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், இதைக் கண்டித்து நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போவதாக தெரிவித்துள்ளார். இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “இந்த ஆண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கான நிதிநிலை அறிக்கையாகத் தெரியவில்லை. மாறாக, அரசியல் காரணங்களுக்காக பிகார் மற்றும் ஆந்திரா மாநிலங்களை ஆளுவோருடன் மேற்கொள்ளப்பட்ட கூட்டணி ஒப்பந்தம் போன்றே உள்ளது.
இந்த வரவு – செலவு அறிக்கை வடமாநிலங்களையும் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களையும் திருப்திப்படுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதே தவிர, ஒட்டுமொத்த இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியை சமநிலையோடு ஊக்குவிக்கக்கூடிய அறிக்கையாக இது இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
பாஜகவின் கூட்டணி கட்சியான பாமகவும் இந்த பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டிருப்பதை விமர்சித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஆந்திரப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களுக்கு பல சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் தமிழ்நாட்டிற்காக சிறப்புத் திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படாதது வருத்தம் அளிக்கிறது. நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் கோதாவரி & காவிரி இணைப்புத் திட்டம் குறித்தும் எந்த அறிவிப்பும் செய்யப்படாதது ஏமாற்றம் அளிக்கிறது. தமிழகத்தின் வளர்ச்சிக்கான தேவைகளை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டிற்கு தேவையான உட்கட்டமைப்புத் திட்டங்கள், பாசனத் திட்டங்கள் போன்றவற்றையும் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை நிறைவேற்றப்படும் போது சேர்க்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளும் மத்திய பட்ஜெட்டில் தமிழகம் புறக்கணிக்கப்பட்டதை விமர்சித்துள்ளன.
நிர்மலா சீதாராமன் விளக்கம் விளக்கம்
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டும் நிலையில், பாஜகவினர் அதற்கு விளக்கம் அளித்துள்ளனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய ந்நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “ஒவ்வொரு மாநிலமும் அவர்கள் முன்வைத்த திட்டங்களின் அடிப்படையில் தாங்கள் கோரியவற்றைப் பெற்றிருக்கும். எந்த மாநிலமும் விடுபடவில்லை. எந்த மாநிலத்தையும் விட்டுவிடுவது எங்கள் நோக்கமுமில்லை. பிரதமர் துவக்கிவைத்த எல்லாத் திட்டங்களும் எல்லா மாநிலங்களுக்குமானவை” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஆந்திராவுக்கு சிறப்பு சலுகை ஏன்?
தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அளித்துள்ள விளக்கத்தில், “ஆந்திர மாநிலத்தில் பத்தாண்டுகளாக தலைநகரம் இல்லை, அந்தப் பிரச்சினையைத் தீர்த்திருக்கிறோம் என மகிழ வேண்டும். அதைவிடுத்து குறை சொல்வது சரியல்ல. நிடி ஆயோக்கை புறக்கணிப்பது தமிழக மக்களைப் புறக்கணிப்பதற்குச் சமம்.
சென்னை மெட்ரோ ரயில் முதல் அலகிற்குத்தான் மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. நாடாளுமன்றத்தில் ஒரு கேள்விக்குப் பதில் அளிக்கும்போது இரண்டாவது அலகிற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்றே தெரிவிக்கப்பட்டது. அப்படியிருக்கும்போது ஏற்கனவே ஒப்புக்கொண்ட பணத்தைத் தராதது போல பேசுவது சரியல்ல. இந்தப் பிரச்னை மத்திய அரசும் மாநில அரசும் பேசித் தீர்க்க வேண்டிய பிரச்சினை” என்று குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் போராட்டம்
இந்த சூழலில் மத்திய பட்ஜெட்டில் பிஹார், ஆந்திராவைத் தவிர மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதை கண்டித்து நாடாளுமன்றத்தில் இன்று இந்தியா கூட்டணியின் கட்சி எம்பிக்கள் போராட்ட்த்தில் ஈடுபட்டனர். அக்கட்சிகளின் எம்பிக்கள் மாநிலங்களவையில் இருந்தும் வெளிநடப்பு செய்தன.