கேட்பதற்கு வருத்தமாக இருக்கிறது. கூட்டுக் குடும்பத்தின் இலக்கணமாகவும் சகோதர சகோதரிகளின் ஒற்றுமைக்கு அடையாளமாகவும் வாழ்ந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் சிக்கல்.
2005 வாரிசுரிமை சட்டத் திருத்தத்தின்படி தந்தையின் சொத்துக்களில் தங்களுக்கும் பங்கு உண்டு. அதை தர வேண்டுமென்று வழக்கு தொடுத்திருக்கிறார்கள் நடிகர் திலகம் சிவாஜியின் மகள்கள் சாந்தி நாரயணசாமியும் ராஜ்வி கோவிந்தராஜனும். நீதிமன்றத்தில் அவர்கள் தாக்கல் செய்துள்ள மனுவில், தங்களுக்கு தெரியாமல் சில சொத்துக்களை நடிகர் பிரபு, அவரது சகோதரர் ராம்குமார் ஆகியோர் விற்று விட்டதாகவும், மேலும் சில சொத்துக்களை அவர்களுடைய மகன்களின் பெயருக்கு மாற்றம் செய்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
என்ன பிரச்சினை?
சிவாஜி மறைந்து 21 ஆண்டுகள் ஆகின்றன. அவரது மனைவி கமலா அம்மாள் மறைந்து 15 வருடங்கள் ஆகின்றன. சிவாஜியின் மகன்களான ராம்குமாரும் பிரபுவும் கூட்டுக் குடும்பமாக சென்னை தி.நகரில் உள்ள அன்னை இல்லத்தில் வசித்து வருகிறார்கள். சிவாஜி உயிருடன் இருந்தபோது அவரது சகோதரர் சண்முகத்தின் குடும்பமும் அன்னை இல்லத்தில்தான் வசித்தது.
திரையுலகில் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது அவர் சம்பாதித்த பணத்தை சரியான முறையில் முதலீடுகள் செய்து சொத்துக்கள் வாங்கியது அவரது சகோதரர் சண்முகம்தான். சிவாஜிக்கு தனது சொத்துக்கள் குறித்து எந்த விவரமும் முழுமையாக தெரியாது, அந்த அளவு அவர் திரையுலகில் பணியாற்றி வந்தார்.
சிவாஜி, கமலா அம்மாள் மறைவுக்குப் பிறகு சிவாஜியின் சொத்துக்களை மகன்கள் நிர்வகித்து வந்தனர். அவர்கள் நிர்வகித்ததில் முறைகேடுகள் நடந்திருப்பதாக மனுவில் சகோதரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். சிவாஜிக்கு 270 கோடி ரூபாய் அளவு சொத்துக்கள் இருப்பதாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
சகோதரிகளின் குற்றச்சாட்டு என்ன?
சிவாஜியின் உயில் என்று சொல்லப்படுவது ராம்குமாரும் பிரபுவும் உருவாக்கியது. சிவாஜி உயில் எதுவும் எழுதவில்லை என்று சகோதரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
தங்களிடம் பவர் ஆஃப் அட்டர்னி வாங்கி தங்களுக்குத் தெரியாமால் சொத்துக்களை விற்றிருக்கிறார்கள். அதன் மூலம் கிடைத்த பணத்தில் எங்களுக்கு பங்கு தரவில்லை என்பது அவர்களது பிரதான குற்றச்சாட்டு.
ஆயிரம் சவரன் நகைகள், 500 கிலோ வெள்ளி ஆகிய குடும்ப சொத்துக்களிலும் தங்களுக்குரிய பாகத்தை தரவில்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.
சகோதரிகளின் குற்றச்சாட்டுக்களுக்கு இதுவரை ராம்குமார், பிரபு பதிலளிக்கவில்லை.
ராம்குமார் மகன் துஷ்யந்த், பிரபு மகன் விக்ரம் பிரபு மீதும் வழக்கு கொடுத்திருக்கிறார்கள்.
சர்ச்சைக்குள்ளான சொத்துக்கள்
சாந்தி தியேட்டர். சென்னை அண்ணாசாலையில் பிரதானமாக அமைந்திருக்கும் இந்த சொத்தில் சிவாஜி, கமலா அம்மாளுக்கு 82 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் இருந்ததாகவும் அந்தப் பங்கின் பாகம் சகோதரிகளுக்கு கிடைக்கவில்லை.
தி.நகரில் 1958ல் சிவாஜி வாங்கிய அன்னை இல்லம்.
1954ல் ராயப்பேட்டையில் சிவாஜி வாங்கிய இடம்.
1961ல் கோபாலபுரத்தில் சிவாஜி வாங்கிய இடம்.
1956ல் ராயப்பேட்டையில் சிவாஜி வாங்கிய நான்கு வீடுகள்.
மணப்பாக்கம், ராமவரம் பகுதிகளில் சிவாஜி வாங்கிய சுமார் 43 ஏக்கர் நிலம்.
சூரக்கோட்டையில் கமலா அம்மாள் பெயரில் உள்ள 16 ஏக்கர் விவசாய நிலம்.
அடுத்து என்ன?
சமீப காலமாக சிவாஜி குடும்பத்தினர் பணச் சிக்கலில் சிரமப்படுவதாக தமிழ்த் திரையுலகில் செவி வழி செய்திகள் உலவி வந்தன. முன்பு ஒருமுறை அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டபோது சந்திரமுகி திரைப்படத்தில் நடித்துக் கொடுத்து ரஜினி உதவினார் என்ற செய்தியும் உண்டு.
ஒற்றுமைக்கு பெயர் போன சிவாஜி குடும்பத்தில் இப்படியொரு சிக்கல் ஏற்பட்டிருப்பது திரையுலகத்தினரை மட்டுமல்ல தமிழர்களுக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது.
குடும்பத்தினருக்கு நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள் மூலம் இந்த சிக்கல் சுமூகமாக தீர்க்கப்படும் என்று சிவாஜி குடும்பத்தினருக்கு நெருங்கிய வட்டாராங்கள் தெரிவிக்கின்றன.