கோட் (தமிழ்) – நெட்பிளிக்ஸ்
குடும்பத்துடன் பாங்காக் செல்லும் தீவிரவாத எதிர்ப்புக் குழு அதிகாரியான விஜய், அங்கு தன் மகனை தொலைத்து விடுகிறார். தன் மகன் இறந்துவிட்டதாக கருதும் விஜய்க்கு, பல ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் கிடைக்கிறார். மகன் கிடைத்த பிறகு, விஜய்க்கு நெருக்கமானவர்கள் ஒவ்வொருவராக கொல்லப்படுகிறார்கள். அவர்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? கொலைக்கு பின்னால் இருப்பவர் யார் என்பதற்கான விடையே கோட் படத்தின் மையக் கரு.
ஒரு விஜய் இருந்தாலே படம் விறுவிறுப்பாக இருக்கும். இதில் தந்தை மகன் என்று இரண்டு விஜய் இருப்பதால் விறுவிறுப்புக்கு கொஞ்சம்கூட பஞ்சமில்லை. விஜய்யுடன் பிரபுதேவா, பிரசாந்த், சிவகார்த்திகேயன், ஜெயராம், அப்சல் என ஒரு நட்சத்திர கூட்டமே இருக்கிறது. ஆரம்பம் முதல் இறுதிவரை படத்தை விறுவிறுப்பாக கொண்டுசெல்கிறார் இயக்குநர் வெங்கட் பிரபு. ஆனால் சில இடங்களில் லாஜிக் இடிக்கிறது.
லாஜிக்கையெல்லாம் மறந்துவிட்டு ஒரு விறுவிறுப்பான படத்தை பார்க்க விரும்பினால், நீங்கள் நிச்சயம் கோட்டை தேர்ந்தெடுக்கலாம்.
தலைவெட்டியான் பாளையம் – (தமிழ்) – அமேசான் ப்ரைம்
‘பஞ்சாயத்’ என்ற பெயரில் இந்தியில் 3 சீசன்கள் வெளியான வெப் தொடரை ரீமேக் செய்து உருவாக்கப்பட்டுள்ள வெப் சீரிஸ்தான் தலைவெட்டியான் பாளையம். கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞரான சித்தார்த், நகரங்களில் நவீன வாழ்க்கையை வாழ விரும்புகிறார். ஆனால் அவருக்கு தமிழகத்தின் ஒரு மூலையில் உள்ள தலைவெட்டியான் பாளையத்தில் பஞ்சாயத்து செயலாளராக வேலை கிடைக்கிறது.
வேண்டா வெறுப்பாக அந்த வேலைக்குச் செல்லும் சித்தார்த்துக்கு (அபிஷேக் குமார்) அங்கு கிடைக்கும் அனுபவங்களே இந்த வெப் தொடரின் மையக் கரு. நாகா இயக்கியுள்ள இந்த வெப் தொடரில் சேத்தன், தேவதர்ஷினி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
கொலை, ரத்தம், பழிவாங்கல், குடும்பச் சிக்கல்கள் என்று மற்ற தொடர்கள் எல்லாம் அரைத்த மாவையே அரைத்துக்கொண்டு இருக்கும்போது இயல்பான ஒரு கிராமத்துக் கதையை இந்த தொடர் சொல்கிறது.
வாழ (மலையாளம்) – ஹாட்ஸ்டார்
தங்கள் கனவுகளை மகன்களை வைத்து நனவாக்க நினைக்கும் அப்பாக்கள், தங்கள் இஷடத்துக்கு வாழ விரும்பும் மகன்கள். – இந்த இரு தரப்புக்கும் இடையிலான போராட்டத்தை சொல்லும் கதைதான் வாழ. மகன்களின் நட்பு வட்டத்தை சேர்த்து இந்த கதையை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் மேனன்.
முதல் ஒன்றரை மணிநேரம் காமெடியாக செல்லும் கதை, அப்பாக்களும் மகன்களும் ஒருவரையொருவர் புரிந்துகொள்ளும் காலகட்டத்தில் கண்களை நனைக்கிறது.
ஃபீல்குட் வகை படங்களை விரும்புபவர்களுக்கு ஏற்ற கதை இது.
manwat murders (மன்வத் மர்டர்ஸ் – மராத்தி வெப் தொடர்) – சோனி லைவ்
1972-ம் ஆண்டில் மன்வத் என்ற இடத்தில் 7 பெண்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த கொலை வழக்கின் விசாரணையை மேற்கொண்ட ரமாகாந்த் குல்கர்னி என்பவர் எழுதிய சுயசரிதையின் அடிப்படையில் இந்த வெப் தொடர் எடுக்கப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான க்ரைம் கதையை விரும்புபவர்களுக்கு ஏற்ற கதை இது.