அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு நடவடிக்கையால், வரலாறு சொல்லும் அளவுக்கு பங்குச்சந்தைகள் பெரும் அடி வாங்கி வருகிறது. டிரம்ப்பின் வரி விதிப்பு நடவடிக்கையால், பில்லியனர்கள் பலருக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தாலும், வாரன் பஃபெட் மட்டும் லாபம் அள்ளி வருகிறார்.
பங்குச் சந்தைகளின் தொடர் மந்த நிலையால், பில்லியனர் பட்டியலில் முன்னவரான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கு இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்து 135 பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதியில், டிரம்ப்பின் வரிவிதிப்பால் மட்டும் இரு நாள்களில் 30.9 பில்லியன் டாலர்வரையில் இழந்தார்.
தொடர்ந்து, அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸுக்கு 42.6 பில்லியன் டாலரும், மெட்டா நிறுவனர் மார்க் ஸக்கர்பெர்க்குக்கு 24.5 பில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. இரண்டு நாட்களில், அமெரிக்க பங்குச் சந்தைகள் கிட்டத்தட்ட 5 டிரில்லியன் டாலர் மதிப்பை இழந்தன.
பெரும்பாலான பில்லியனர்களுக்கு இழப்பு ஏற்பட்டபோதிலும், பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனரான வாரன் பஃபெட் மட்டும் தப்பித்து விட்டார்.
பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் பங்கு மதிப்பு, ஜனவரி முதல் தேதியில் இருந்து தற்போது வரை 16 சதவிகிதம் உயர்ந்திருக்கிறது. ஆனால், இதே காலகட்டத்தில் அமெரிக்க பங்குச் சந்தை மதிப்பு 8 சதவிகிதம் சரிவடைந்தது. வாரன் பஃபெட்டின் தனிப்பட்ட சொத்து மதிப்பு, 2025 ஆம் ஆண்டில் 12.7 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
மேலும், பில்லியனர் பட்டியலில் ஆறாவது இடத்தில் இருந்த வாரன் பஃபெட், நான்காம் இடத்துக்கு முன்னேறியிருந்தார். இதற்கு காரணம், வாரன் பஃபெட்டின் பழைமைவாத முதலீட்டு அணுகுமுறைதான் காரணம் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய பங்குச் சந்தைகளின் மதிப்பை முன்கூட்டியே அறிந்ததுபோல, பஃபெட், ஆப்பிள், பேங்க் ஆஃப் அமெரிக்கா போன்ற அமெரிக்க தொழில்நுட்பப் பங்குகளை முன்கூட்டியே விற்றதன் மூலம், தனது நிறுவனத்தின் சுமையைக் குறைத்தார்.