நேற்று தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய செய்தி மூத்த காவல்துறை அதிகாரி விஜயகுமார் ஐபிஎஸ்ஸின் தற்கொலை. நடைபயிற்சி போய்வந்தவர் பாதுகாவலரிடம் துப்பாக்கி வாங்கி நெற்றிப் பொட்டில் சட்டென்று சுட்டுக் கொண்டார். நெற்றியின் வலதுபுறம் நுழைந்த குண்டு இடதுபுறம் வெளியேறியிருக்கிறது. நொடியில் இறந்துவிட்டார் விஜயகுமார்.
காலையில் எழுந்து வழக்கம் போல் நடைபயிற்சி சென்றவர் சட்டென்று தன்னைத் தானே மாய்த்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏன் ஏன் ஏன் என்று ஏகப்பட்ட கேள்விகள். அவருக்கு ஒசிடி (OCD)யும் மன அழுத்தம் என்கிற டிப்ரஷனும் (Depression) சில ஆண்டுகளாக தொடர்ந்து இருந்திருக்கிறது என்று விஜயகுமாருக்கு இருந்த மனநோயை தெரியப்படுத்தியிருக்கிறார் ஏடிஜிபி அருண் ஐபிஎஸ். நெருங்கிய குடும்பத்தினருக்கு மட்டுமே விஜயகுமாரின் சிக்கல் தெரிந்திருக்கிறது. அதற்காக் சிகிச்சையும் எடுத்திருக்கிறார்.
தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்டிருந்தவருக்கு ஏன் குணமாகவில்லை? ஏன் இந்த விபரீத முடிவை எடுத்துக் கொண்டார்? போன்ற கேள்விகள் எழும்.
அதற்கான பதில்களை காண்பதற்கு முன்பு ஓசிடி என்றால் என்ன என்பதை பார்த்துவிடுவோம்.
Obsessive-Compulsive Disorder (OCD) – இதுதான் ஓசிடி. இந்த மன பாதிப்புக்கு ஆளானவர்களுக்கு ஏதாவது எண்ணங்கள் தொடர்ந்து தொல்லை கொடுத்துக் கொண்டே இருக்கும். திரும்பத் திரும்ப ஒரே காரியங்களை செய்வார்கள்.
மிக எளிய உதாரணமாய் கையில் அழுக்கு இருக்கிறது என்ற எண்ணம் தோன்றும். உடனே சென்று கையைக் கழுவுவார்கள். ஆனால் மீண்டும் அந்த எண்ணம் வரும். மீண்டும் சென்று கழுவுவார்கள். மீண்டும் அந்த எண்ணம் வரும். மீண்டும் சென்று கழுவுவார்கள், மீண்டும்..மீண்டும்..மீண்டும்..மீண்டும்,,என்று நீண்டுக் கொண்டே போகும்.
Obsessive-Compulsive என்பதில் இரண்டு அம்சங்கள் இருக்கின்றன. ஒன்று அப்சசிவ் – Obsessive அதாவது ஒன்றை பற்றி மட்டுமே எண்ணங்கள் தொடர்ந்து வருவது. இது ஒரு அம்சம்.
மற்றொன்று கம்பல்சிவ் – Compulsive என்று சொல்லப்படும் அந்த எண்ணங்களால் தூண்டப்படும் கட்டுப்படுத்த முடியாத செயல்கள்.
இதன் ஆரம்பக் கட்ட உதாரணமாய் பூட்டு போட்டிருக்கிறதா என்ற சந்தேகத்துடன் மீண்டும் மீண்டும் சென்று பூட்டை இழுத்துப் பார்ப்பதை சொல்லலாம். பூட்டியிருப்போம். ஆனாலும் மனதில் பூட்டினோமா என்ற சந்தேகம் வரும். சாதராண மனநிலையில் பூட்டை பூட்டியதை நினைவுப்படுத்திக் கொண்டு அடுத்தக் காரியத்துக்கு சென்று விடுவோம். சில நேரங்களில் நினைவுப்படுத்த முடியாத சூழலில் ஒரு முறை சென்று பார்த்துவிட்டு வேறு வேலைகளுக்கு மாறிவிடுவோம். ஆனால் மனப் பிரச்சினைகள் இருந்தால் அப்படி நகர முடியாது. மாற முடியாது. இந்தப் பிரச்சினைகள் உள்ளவர்கள் மீண்டும் மீண்டும் சென்று பூட்டை சரி பார்ப்பார்கள்.
பூட்டை சரி பார்த்துக் கொண்டே இருப்பது, கையைக் கழுவிக் கொண்டே இருப்பது, காஸ்ஸை மூடினோமா இல்லையா என்று சந்தேகப்பட்டு போய் போய் பார்த்துக் கொண்டிருப்பது, ஏதாவது ஒன்றை நினைத்துக் கொண்டே இருப்பது, அதிலிருந்து மாற முடியாமல் இருப்பது எல்லாம மனநோயின் அறிகுறிகள்.
சிலருக்கு கையைக் கழுவி கழுவி தோலே கிழிந்து வந்துவிடும் அந்த அளவு அவர்களை ஓசிடி வாட்டி வதைக்கும்.
இந்த ஓசிடி மிதமான எண்ணங்களாகவும் இருக்கும். தீவிரமான மற்றவர்களையோ அல்லது தன்னையோ காயப்படுத்திக் கொள்ளும் அளவுக்கோ இருக்கும்.
சுத்தம், ஒழுங்கு, காதல், காமம், வன்முறை, மதம்.,,,என்று ஓசிடி அனைத்து உணர்வுகளிலும் வரும்.
இதனுடன் டிப்ரஷன் – Depression எனப்படும் மன அழுத்தமும் சேரும்போது மனம் கூடுதலாக பாதிப்படைகிறது.
இதற்கு ஒரே தீர்வு ஆரம்பக் கட்டத்திலேயே அறிந்து மனநல மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவதுதான். குணம் என்பது முழுமையாக இல்லாவிட்டாலும் இந்த உணர்வுகளையும் எண்ணங்களையும் பெருமளவு குறைக்க முடியும் என்று கூறுகிறார்கள் மனநல மருத்துவர்கள்.
விஜயகுமார் ஐபிஎஸ்க்கு தொடர்ந்து சிகிச்சை கொடுக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலு அவர் இந்த விபரீத முடிவை தேடியிருக்கிறார்.