உலகை அச்சுறுத்தி வரும் குரங்கு அம்மை, இப்போது இந்தியாவுக்கும் பரவியுள்ளது. வெளிநாட்டில் பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பிய ஒருவருக்கு இந்நோய்த்தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
கொரோனா வைரஸுக்கு அடுத்ததாக இப்போது உலகையே அச்சுறுத்தி வரும் நோயாக குரங்கு அம்மை உள்ளது. இந்த நோய்த்தொற்று மத்திய மற்றும் கிழக்கு ஆபிரிக்காவின் சில பகுதிகளில் பரவி வருகிறது. மேலும் இந்த வைரஸின் புதிய வகை திரிபு (Variant) மக்கள் மத்தியில் பரவும் வேகம் மற்றும் இதனால் அதிகரிக்கும் இறப்பு விகிதம் குறித்து விஞ்ஞானிகள் கவலையில் உள்ளனர்.
இந்த நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட 100 பேரில், நால்வர் உயிரிழக்கும் அளவிற்கு இது மிகவும் ஆபத்தானதாக உள்ளது. எம்- பாக்ஸ் வைரஸில் கிளேட் 1, கிளேட் 2 (Clade 1 மற்றும் Clade 2) என இரண்டு வகைகள் உள்ளன. கடந்த 2022-ம் ஆண்டு, குரங்கம்மை(MPox) பரவியதால் அறிவிக்கப்பட்ட பொது சுகாதார நெருக்கடியானது, கிளேட் 2 வகை வைரஸால் ஏற்பட்டது. ஆனால் இம்முறை அதைவிட மிகவும் ஆபத்தான கிளேட் 1 வைரஸ் பரவி வருகிறது. இது இதற்கு முன் நோய்த்தொற்று பரவுவதைக் காட்டிலும் 10% வரை அதிக நோயாளிகளின் உயிரிழப்பிற்குக் காரணமாக உள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இந்த வைரஸில் நடந்த மாறுபட்டால் கிளேட் 1பி என்ற புதிய வைரஸ் திரிபு உருவானது. இந்தப் புதிய மாறுபட்ட வைரஸ் ‘இன்னும் அதிக ஆபத்தானது’ என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
குரங்கு அம்மையின் அறிகுறிகள் என்ன?
குரங்கு அம்மை(எம்பாக்ஸ்) நோயின் ஆரம்பக்கட்ட அறிகுறிகளில், காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி ஆகியவை அடங்கும். காய்ச்சல் நின்றவுடன் உடலில் தடிப்புகள் தோன்றும். பெரும்பாலும், முகத்தில் தொடங்கி, பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு இது பரவும்.
அதிகப்படியான அரிப்பு அல்லது வலியுடன் கூடிய இந்த தடிப்புகள், பல்வேறு நிலைகளைக் கடந்து, இறுதியாக பொருக்குகளாக மாறும். அவை விழுந்த பின்னர் அவை இருந்த இடத்தில் வடுக்கள் தோன்றும். இந்தத் தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்கள் வரை நீடித்தபின் தானே மறையும். தீவிரமான தொற்றுகளில், காயங்கள் உடல் முழுதும் தோன்றும். குறிப்பாக, வாய், கண்கள், மற்றும் பிறப்புறுப்புகளையும் அவை தாக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குரங்கு அம்மை எப்படி பரவுகிறது?
குரங்கு அம்மை (எம்பாக்ஸ்) நோய்த்தொற்று உள்ள ஒருவருடன் நெருங்கிப் பழகினால் இது பரவும்.தோலில் இருக்கும் பிளவுகள், சுவாசக்குழாய் அல்லது கண்கள், மூக்கு, வாய் வழியாக இந்த வைரஸ் உடலில் நுழையும். இந்த வைரஸ் படிந்திருக்கும் படுக்கை, ஆடைகள், துண்டுகள் போன்ற பொருட்களைத் தொடுவதன் மூலமும் இது பரவுகிறது. குரங்குகள், எலிகள், அணில் போன்ற இந்த வைரஸால் பாதிக்கப்பட்ட விலங்குகள் மூலமாகவும் இந்த வைரஸ் பரவ வாய்ப்புள்ளது.
இந்தியாவில் குரங்கு அம்மை
இந்த சூழலில் இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார். அவர் எங்கு இருக்கிறார் என்ற தகவல் தெரிவிக்கப்படவில்லை. குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்தவர்களின் விபரங்களை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெறுவதாகவும் மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.