நடிகர் விஜய் தனது தவெக கட்சி கொடியை அறிமுகப்படுத்தியதிலிருந்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவரது அரசியல் நகர்வில் அவரின் அணுகுமுறை பற்றியும் கட்சிக்குள் இப்போதே குமுறல்கள் எழுத் தொடங்கியிருக்கிறது. தனது கட்சியின் கொடி வடிவமைக்கும் பொறுப்பை சில நெருக்கமான நபர்களிடம் ஒப்படைத்திருந்தார் விஜய். அவர்கள் 10 க்கும் மேற்பட்ட வடிவங்களை பல வண்ணங்களையும் அதற்கான பின்னணியையும் வைத்து உருவாக்கியிருக்கிறார்கள். முதல் முறையாக அதில் 3 கொடிகளை தேர்தெடுத்து அதிலிருந்து ஒன்றை விஜய் தேர்வு செய்திருக்கிறார். ஆனால் எல்லா கொடிகளுக்கும் அதன் காரணத்தையும் உருவாக்கியிருந்தார்கள் விஜய் இந்தக் கொடியை தேர்வு செய்தது குழுவுக்கே கொஞ்சம் ஷாக் தான் ஏனென்றால் இதற்கான முழு தத்துவ விசாரங்களை அவர்கள் உருவாக்கவில்லை. அதோடு இந்த கொடி ரகசியத்தை வெளியில் தெரியக்கூடாது என்பதும் விஜய்யின் கடுமையான உத்தரவு. இவ்வளவு கெடுபிடிகள் இருந்தும் கொடி என்ன கலர் என்பதை தாங்களாகவே வெளியில் சொல்லி விட்டனர் கட்சி பொறுப்பில் இருந்தவர்கள்.
விழா நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருந்த கொடி மேடையை அதே வண்ணத்தில் தயார் செய்திருந்தது விஜய்யை ரொம்பவே கோபப்படுத்தியிருக்கிறது. இந்த கோபத்தைத்தான் புஸ்ஸி ஆனந்த் கொடியை அவரிடம் கொடுத்தபோது காட்டியிருக்கிறார். அங்கு நின்றிருந்த பொருளாளர் வெங்கட்ரமணன் மீது காட்டினார். இது ஒரு பக்கம் இருக்க, கொடி பற்றிய விளக்கத்தை தன்னால் மேடையில் சொல்ல முடியாமல் போனதும் அவருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதனால் தான் பேச இருந்த பல விஷயங்களை அவர் பேசாமலே இறங்கி விட்டார். இந்த குழப்பத்தில்தான் தன்னுடைய அம்மா ஷோபா, அப்பா சந்திரசேகர் இருவரையும் குறிப்பிட மறந்து விட்டார். இவ்வளவு சொதப்பல்களால் தங்கள் கட்சி நிர்வாகிகளிடம் கோபத்தைக் காட்ட வேண்டியதாகி விட்டது.
இந்த விழா நடந்து முடிந்த மறுநாள் நிர்வாகிகளை அழைத்த விஜய் தன் மனக்குறைகளையெல்லாம் வெளிப்படுத்தியிருக்கிறார். இதன்பிறகுதான் விஜய் அமைதியாகியிருக்கிறார்.
இந்த நிலையில்தான் கொடியில் இருக்கும் யானை சின்னத்தை பயன்படுத்தக் கூடாது என்று பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பாக தேர்தல் ஆணையத்திடம் மனு கொடுக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், விஜயின் கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வேண்டும் என்று பகுஜன் சமாஜ் தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில், “பகுஜன் சமாஜ் கட்சியானது யானை சின்னத்தை இந்தியா முழுவதும் கொடியிலும், தேர்தல் சின்னமாகவும் பயன்படுத்தி வருகிறது.
நீலக் கொடியும், யானை சின்னமும் பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய அடையாளம் ஆகும். இதில், யானை சின்னத்தை அம்பேத்கர் தேர்ந்தெடுத்து போட்டியிட்டார். இதனால் யானை சின்னத்திற்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் உணர்வுபூர்வமாக வரலாற்று உறவு உள்ளது. தற்போது, நடிகர் விஜய் அறிமுகம் செய்த தமிழக வெற்றி கழக கட்சி கொடியில் யானை சின்னம் உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் விஜய் எடுக்காமல் இருக்கிறார்.
ஒரு அங்கீகரிக்கப்பட்ட தேசிய கட்சியின் சின்னத்தை சட்டவிரோதமாக பயன்படுத்திய விஜய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், அவரது கட்சி கொடியில் உள்ள யானை சின்னத்தை அகற்ற வழிவகை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் விஜய் தனது அருகில் அறிவுசார் குழு ஒன்றை வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். தமிழக அரசியல் கட்சிகள் எல்லாம் தாங்கள் காமராஜர் ஆட்சியை கொடுப்போம் என்று சொல்லி வரும் சூழலில் காமராஜர் அரசியல் பற்றிய எந்த வித தெளிவும் இல்லாமல் இருப்பது விஜய் கட்சிக்கும், அவரது அரசியல் பயணத்திற்கும் நல்லதல்ல என்கிறார்கள். அதோடு மக்களுக்கு நெருக்கமாக இருக்கும் மனிதர்கலை தன் பக்கத்தில் வைத்துக் கொள்வது விஜய்க்கு முடிவு எடுப்பதில் உதவியாக இருக்கும் என்பதும அவர்களின் கூற்றாக இருக்கிறது.