கமலஹாசன் சந்திப்பு தொடர்பாக கவிப் பேரரசு வைரமுத்து வெளியிட்டிருந்த ட்விட்டில் சீண்டும் விதமாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் பதிவிட்டிருந்த ட்விட்டும் அதற்கு வைரமுத்து பதில் ட்விட் செய்திருந்ததும் வைரலாகியுள்ளது. வைரமுத்து ட்விட்களும் எஸ்.ஆர். சேகர் ட்விட்டும் இங்கே.
கமல்ஹாசன் சந்திப்பு தொடர்பான வைரமுத்து ட்விட்…
மகா கவிதை
வெளியீட்டு விழாவில்
வாழ்த்துரை வழங்க வருகைதரும்
கலைஞானி
கமல்ஹாசனைச் சந்தித்து
அழைப்பிதழும் நூலும் வழங்கினேன்
எனக்கும் அவருக்கும்
இடையிலிருந்த நாற்காலியில்
42ஆண்டு நினைவுகள்
அமர்ந்திருந்தன
கலை அரசியல் மதம் என்று
தவளைக்கல்லாய்த் தாவித்தாவி
எண்ணூர்
எண்ணெய்ப் பிசுக்கில்
இடறி நின்றது உரையாடல்
குடிதண்ணீர்
எண்ணெய் ஆவதும்
எண்ணெய்
தண்ணீரின் ஆடையாவதும்
காலங்காலமாய்க்
கழுவப்படாத
கண்ணீர்ப் பிசுக்கில்
எண்ணெய்ப் பிசுக்கும்
ஏறி நிற்பதும்
மீனென்ற
வேட்டைப் பொருளும்
கொக்கென்ற
வேட்டையாடு பொருளும்
சேர்ந்து செத்து மிதப்பதும்
நதி இறங்க
வழியில்லாத கடலில்
எண்ணெய் இறங்குவதும்
உழைக்கும் மக்கள்
பிழைக்க வழியின்றிப்
பெருந்துயர் கொள்வதும்
எத்துணை கொடுமையென்று
சோகம் பகிர்ந்தோம்
‘இதற்கு யார் பொறுப்பு’
என்றார் கமல்
‘லாபம் ஈட்டும்
நிறுவனம்’ என்றேன்
காஃபி கொடுத்தார்
பாதிக்குமேல் என்னால்
பருகமுடியவில்லை
இதற்கு பதிலாக பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர் எழுதியுள்ள பதிவில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஞானி என்று
உங்களுக்குள் நீங்களே
புகழ் சூட்டிக் கொள்ளுங்கள்
எங்களுக்கு ஆட்சேபனை
இல்லை
இப்போதெல்லாம் எழுதத் தெரியாதவன் எல்லாம்
வேறு ஒருவரை வைத்து எழுதி முனைவர் பட்டம் பெற்று விடுவது வாடிக்கையாக உள்ளது
ஆகவே இந்தப் பட்டங்கள் எல்லாம் எங்களுக்கு ஆச்சரியத்தையும் உங்கள் மீது பெரிய அபிமானத்தையும் உண்டு செய்து விடாது
ஒன்று தெரிகிறது
காலையில் நடை பழகியதால் கலைஞரோடு உங்களால் பழக முடிந்தது
நடைக்கும் நடப்புக்கும்
எட்டா தூரத்தில் இருப்பதால் ஸ்டாலினுக்கும் உங்களுக்கும் தூரம் எட்டவே இருக்கிறது
அதனால் ஒற்றுமையாக உரசி அரசை உங்கள் பக்கம் இழுக்க முடியாமல் சோர்வில் இருக்கிறீர்கள்
என்ன இருந்தாலும் கவிதை மீது மாறாத காதல் கொண்டவன் என்பதால்
உங்கள் மகா கவிதைக்கு என் வாழ்த்துக்களை
முன்னதாகவே
கேட்காமலேயே
தெரிவித்துக் கொள்கிறேன்
இதற்கு,
“திரு சேகர்
வாழ்த்துக்கு நன்றி
வாருங்கள்
நீங்களும்
அனுப்புகிறேன்
அழைப்பிதழ்”
என்று பதலளித்துள்ளார் வைரமுத்து.