மீண்டும் தொடங்கி விட்டது வடிவேலு சிங்கமுத்து யுத்தம் தமிழ் சினிமாவில் நகைச்சுவையில் வடிவேலு காலம் என்று ஒரு பிரிவை எழுதாமல் அதன் வரலாற்றை தொட முடியாது அந்தளவுக்கு வடிவேலு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தார். அவரது காமெடியில் கூடவே நடிகர் சிங்கமுத்துவும் சேர்ந்து கொண்டால் கொண்டாட்டத்துக்கு குறைவே இருக்காது இருவருக்கும் அப்படி ஒரு கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகும்.
அவர்கள் இருவரும் சேர்ந்து வரும் காட்சிகளை ரசிகர்கள் கைதட்டலுடன் ரசிப்பார்கள். இடையில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வந்து பிரிந்து விட்டனர். அன்று முதல் வடிவேலுவும் எடுபடவில்லை. சிங்கமுத்துவுக்கும் சரியான வாய்ப்பு கிடைக்கவில்லை. தனக்கு நிலம் வாங்க்கிக் கொடுத்த வகையில் பல லட்சங்களை அபகரித்துக் கொண்டார் சிங்க முத்து என்று வடிவேல் குற்றம்சாட்ட சிங்கமுத்து அதை மறுத்தார். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் இருந்து கொண்டிருக்கும் நிலையில்தான் இன்று மீண்டும் வடிவேலு வழக்கிற்கு சிங்கமுத்து பதில் சொல்ல வேண்டும் என்ற நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது என்ற செய்தி வந்திருக்கிறது.
இது தொடர்பாக சிங்கமுத்துவிடம் பேசியபோது இது பழைய விஷயம் அது மீண்டும் செய்தியாகியிருக்கிறது. இருந்தாலும் இதையும் நான் சட்டப்பூர்வமாக சந்திப்பேன். எனது வழக்கறிஞர்கள் மூலம் பதில் சொல்வேன் என்றார்.
பல ஆண்டுகளாகிவிட்டது இருவரும் சேர்ந்து நடித்து. சினிமாவில் முன்பு போல் காமெடிகளும் பேசப்படுவதாக இல்லை.இன்று இருக்கும் பல காமெடி நடிகர்கள் பலரும் ஹீரோக்களாக புரோமோஷன் ஆகிவிட்டார்கள். சூரி மட்டும் காமெடியாக நடித்துக் கொண்டிருந்தார். அவரும் இப்போது தனி கதாநாயகனாக நடித்து விட்டார். அவர் நடித்த படங்களும் வசூல் ரீதியாக நல்ல இடத்தைப் பிடித்திருக்கிறது. இதனால் இனி அவர் மீண்டும் இன்னொரு ஹீரோவுக்கு இணையாக நகைச்சுவை வேடத்தில் நடிக்க மாட்டார். ஹிரோக்களும் அவரை மீண்டும் நடிக்க அழைக்க மாட்டார்கள்.
இந்த நிலையில் வடிவேலு ஹீரோவாக நடித்த சில படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாமல் நஷ்டத்தைக் கொடுத்தது. இனி அவர் ஹீரோவாக நடித்தாலும் எடுபடுமா என்பது தெரியவில்லை. அவருக்கு காமெடி ட்ராக் எழுதிக் கொடுத்த பல எழுத்தாளர்கள் இன்று அவரிடம் இல்லை. இதனால் நல்ல காமெடி காட்சிகள் கிடைக்கவில்லை. இதுவும் படம் தோல்வியடைந்ததற்கு முதல் காரணம்.
அவருக்கு வசனம் எழுதிய தம்பி ராமையா, எஸ்.பி.ராஜ்குமார் ஆகியோர் தனி இயக்குனர்களாக மாறிவிட்டார்கள். அதனால் அவர்களுக்கு இணையாக எழுத தற்போது வடிவேலுவிடம் ஆட்கள் இல்லாததால் அவரது காமெடி காட்சிகள் தொய்வு அடைந்து வருகின்றன. இதனால் மீண்டும் சிங்கமுத்து மாதிரியான ஆட்களை தன்னோடு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சில மாதங்களாக பேச்சு எழுந்து வருகிறது.