அமெரிக்காவில் விசா காலம் முடிந்தும், வெளிநாட்டினர் அதிக காலம் தங்குவதைத் தடுக்கும் வகையில், விசா பெறும்போது, இனி ரூ.13.17 லட்சத்துக்கு நுழைவுப் பத்திரங்களை (டெபாசிட்) அளிக்கும் விதிமுறையை அமெரிக்கா கொண்டுவரவிருக்கிறது.
உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற பெயரில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்த புதிய விதிமுறையை அறிமுகம் செய்துள்ளார். சில வெளிநாட்டுப் பயணிகள் தங்கள் விசா காலத்தை மீறி அமெரிக்காவில் தங்காமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, அவர்கள் ரூ.13.17 லட்சம் மதிப்புள்ள பத்திரங்களை டெபாசிட்டாக வழங்க வேண்டும் என்ற விதிமுறையைக் கொண்டு வர அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. விசா காலத்தைத் தாண்டி தங்கியிருக்கும் மக்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தப் புதிய திட்டம் ஒரு சோதனை முயற்சியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்க அரசு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், அமெரிக்க தூதரக அதிகாரிகள், அமெரிக்காவில் விசா காலம் முடிந்தும் தங்கியிருப்பவர்களை அதிகம் கொண்ட நாட்டினருக்கு விசா வழங்கும் பரிசீலனையின்போது, இந்த விசா பத்திர விதிமுறையை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக விசா காலாவதியான நாடுகளிலிருந்து வருவோர் மீது டெபாசிட் பத்திரம் கோரும் உரிமை அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு வழங்கப்படுகிறது. மேலும் தகவல்களைச் சரிபார்த்து உறுதியளிக்க போதுமானதாக இல்லாத நாடுகளிலிருந்து வருபவர்களுக்கும் இந்தப் டெபாசிட் பத்திரங்கள் பொருந்தும் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சட்டவிரோத குடியேற்றத்தைக் கடுமையாக்குவதை தனது அதிபர் பதவிக்காலத்தில் மிக முக்கியக் குறிக்கோளாகக் கொண்டுள்ளார், அமெரிக்காவில் சட்டவிரோதமாகத் தங்கியிருப்பவர்களை நாடு கடத்துதல், கைது செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டினரை பணியமர்த்தவும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளார்.
அது மட்டுமல்லாமல், குடியரசுக் கட்சித் தலைவர் டிரம்ப், ஜூன் மாதம் அமெரிக்காவுக்கான பயணத் தடையை பிறப்பித்திருந்தார். இது தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இப்போது புதிய விதிமுறையின்படி, விசா காலத்தைக் கடந்து அமெரிக்காவில் தங்கியிருப்பவர்களின் எண்ணிக்கை அதிகம் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் மீது டெபாசிட் பத்திர விதியை அமல்படுத்தும் இந்த திட்டம் ஆகஸ்ட் 5ஆம் தேதி அறிமுகமாகிறது. இது ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிநாட்டினரை \”ஏலியன்கள்\” என்று குறிப்பிட்டுள்ளது அமெரிக்கா. அதாவது, \”வணிகம் அல்லது சுற்றிப்பார்க்க அமெரிக்கா வரும் தற்காலிக பார்வையாளர்களுக்கான விசாவுக்கு விண்ணப்பிக்கும் வெளிநாட்டினர் (B-1/B-2) மற்றும் அதிக விசா காலாவதி விகிதங்களைக் கொண்ட நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும்,ஒரு நாட்டில் விசாவுக்கு விண்ணப்பித்தவரின் தகவல் சரிபார்ப்பு உறுதி செய்ய இயலாத அல்லது சரிபார்ப்பு குறைபாடுகள் உடைய நாடுகளைச் சேர்ந்தவர்கள்,முதலீடு செய்வதன் மூலம் குடியுரிமை பெறுதல், வெளிநாட்டினருக்கு வசிப்பிட உறுதித் தகவல் கோரப்படாமல் குடியுரிமை வழங்கும் நாடுகளிலிருந்து விசா பெற விண்ணப்பிப்பவர்களை இந்த திட்டத்தின் கீழ் கொண்டுவரலாம்..தூதரக அதிகாரிகள், நிர்ணயிக்கப்பட்டபடி, விசா வழங்குவதற்கான நிபந்தனையாக ரூ.13 லட்சம் வரை டெபாசிட் பத்திரத்தை சமர்ப்பிக்குமாறு விசா விண்ணப்பதாரர்களைக் கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசா விதிமுறையின் கீழ் அமெரிக்கா வந்த வெளிநாட்டவர், அனுமதிக்கப்பட்ட காலம் முடிவடையும் போது அல்லது, விசா காலத்தைக் கடந்தும் தங்கியிருந்தால், அத்தகைய வெளிநாட்டவர் அமெரிக்காவிலிருந்து வெளியேறுவதை இந்த டெபாசிட் தொகை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை, ஆகஸ்ட் 20ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும், ஓராண்டு காலம் சோதனை முறையாக நடைமுறையில் இருக்கும் என்றும் விசா கோரும் விண்ணப்பத்தை பரிசீலிக்கும்போது, தூதரக அதிகாரிகளுக்கு மூன்று வாய்ப்புகள் இருக்கும், அதாவது, ரூ.4.40 லட்சம், அல்லது ரூ.8.78 லட்சம், ரூ.13.17 லட்சம் என இதில் ஒரு தொகையை டெபாசிட்டாக பெற உத்தரவிடலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.