நாகூர் ரூமி
சில ஆண்டுகளாகவே இந்த வியாபார யுக்தி நம் நாட்டில் உலா வருகிறது. அதுதான் பொருள்களில் விலையில் ஒரு ரூபாய் குறைத்துக் காட்டுவது! ஒரு சட்டை ஐநூறு ரூபாய் என்றால் அதில் ரூ 499/- என்று போட்டிருக்கும்.
துணிமணி, செருப்பு, கண்ணாடி, பேனா, பென்சில், சட்டை, பேண்ட், சேலை, ஜாக்கட், சுடிதார், உள்ளாடை என எங்கும் இந்த ஒரு ரூபாய் குறைத்துக்காட்டும் அநாகரீகம் இருந்துகொண்டுதான் உள்ளது. இப்படி இருப்பது நம் அனைவருக்குமே தெரியும். நமக்கிது பழகியும் போய்விட்டது.
ஆனால் இது நம்மை முட்டாளாக்க வணிக உலகம் எடுத்துக்கொண்ட ஒரு யுக்தியாகும். நமக்காக விலையைக் குறைக்கிறார்களாம்! அதுவும் ஒரு ரூபாய்! 499 ரூபாய் கொடுக்கும் ஒருவரால் 500 ரூபாய் கொடுக்க முடியாதா?!
இந்த கேவலமான ’ஐடியா’ Montgomery Ward என்ற அமெரிக்கரால் தோற்றுவிக்கப்பட்டது என்று சொல்கிறது chatgpt! இது ஒருவிதமான உளவியல் என்பதையும் ஒத்துக்கொள்கிறது. எல்லா வணிகத்தலங்களிலும் இந்த ஒரு ரூபாய் குறைப்பு நீக்கமற நிறைந்திருக்கிறது.
இது ஒரு அசிங்கமான உளவியல்.
ஏமாற்றும் உளவியல்,
அயோக்கியத்தனமான உளவியல்.
ஆனால் இதை எதிர்த்து நாம் பேசியதோ எழுதியதோ இல்லை. எந்தக் கேள்வியும் இல்லாமல் நாமிதை ஏற்றுக்கொண்டிருக்கிறோம். இது எனக்கு ஆச்சரியமளிக்கிறது.