No menu items!

உதயநிதி 10 நாட்களில் துணை முதல்வர்! – மிஸ் ரகசியா

உதயநிதி 10 நாட்களில் துணை முதல்வர்! – மிஸ் ரகசியா

“உடல்நிலை பத்தின வதந்திகளுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வச்சுட்டார் முதல்வர்” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“கலைஞர் நினைவுநாள் அன்னைக்கு 2 கிலோமீட்டர் தூரம் அவர் நடந்து போனதை பத்திதானே சொல்றே?”

“ஆமாம். கலைஞர் நினைவு தினத்துல 2 கிலோமீட்டர் தூரமெல்லாம் நடக்க வேண்டாம், அது ரொம்ப ரிஸ்க்னு குடும்பத்துல இருக்கறவங்களே முதல்வர்கிட்ட சொல்லி இருக்காங்க. முதல்வர் காரில் அமர்ந்தபடியே ஊர்வலமா நினைவிடத்துக்கு போகவும் திட்டம் வச்சிருந்தாங்க. ஆனால் முதல்வர் அவங்களுக்கு பதில் சொல்லாமல் அமைதியா இருந்திருக்கார். காலை ஏழு மணிக்கு ஊர்வல ஸ்பாட்டுக்கு வந்தவர், திடீர்னு ‘வாங்க நடக்கலாம்’னு கட்சிக்காரங்ககிட்ட சொல்லி நடக்க ஆரம்பிச்சிருக்கார். 2 கிலோமீட்டர் தூரம் கொஞ்சமும் களைப்பில்லாமல் நடந்த முதல்வரோட தன்னம்பிக்கையைப் பார்த்து அமைச்சர்களே அதிசயப்பட்டிருக்காங்க. அதே சமயம் இந்த ஊர்வலத்துல கலந்துக்கிட்ட அமைச்சர் டி.ஆர்.பாலு, ‘என்னால முடியாதுப்பா’ன்னு சொல்லி பாதியிலேயே ஊர்வலத்தை விட்டு விலகி கார்ல ஏறி நினைவிடத்துக்கு போயிருக்கார்.”

“முதல்வர் உற்சாகமா இருக்கறதெல்லாம் இருக்கட்டும். அமைச்சரவையில மாற்றம் இருக்குமா? முதல்ல அதைச் சொல்லு”

“முதல்வர் வெளிநாடு போறதுக்கு முன்ன அமைச்சரவை கூட்டம் நடத்தப் போறதா அறிவிப்பு வந்தது. உடனே அமைச்சரவையில் மாற்றம் வரும்னு வதந்தி பரவத் தொடங்கியிருக்கு. .ஒரு மூத்த நிருபர் துரைமுருகனை சந்திச்சப்ப இது பற்றி கேட்டிருக்கார். அதுக்கு துரைமுருகன், ‘உங்கள மாதிரி பத்திரிகையாளர்கள் சொன்னால்தான் எனக்கு தகவல் தெரியுது. அதனால உங்களுக்கு ஏதாவது தெரிஞ்சா, உடனே எனக்கு தகவல் சொல்லுங்க. நான் தெரிஞ்சுக்கறேன்’ன்னு சொல்லியிருக்கார். துரைமுருகன் அதை கிண்டலா சொன்னாரா இல்லை உண்மை நிலவரத்தை சொன்னாரான்னு அந்த பத்திரிகையாளர் குழம்பியிருக்கார்.”

“ஆகஸ்ட் 21ஆம் தேதி அமைச்சரவை மாற்றம்னு சொல்றாங்களே?”

“ஆமாம், அப்படி ஒரு நியூஸ் வந்துகிட்டு இருக்கு. 27ஆம் தேதி முதல்வர் அமெரிக்காவுக்கு கிளம்புகிறார். அதற்கு முன் அமைச்சரவை மாற்றம் செஞ்சுட்டுதான் கிளம்புகிறார் என்றொரு செய்தி இருக்கிறது. உதயநிதி துணை முதல்வர் என்றும் கூறுகிறார்கள்”

“வலுத்திருக்கிறது பழுக்கவில்லை என்று முதல்வர் கூறியிருந்தாரே”

‘ஆமாம் அந்த சமயத்தில் பழுக்கவில்லை 21 ஆம் தேதி பழுத்துவிடும்”

“27 மாவட்டங்கள்ல இருக்கற உள்ளாட்சி அமைப்பு தலைவர்களோட பதவிக்காலம் இன்னும் கொஞ்ச நாள்ல முடியப் போகுதே. அங்க உடனடியா தேர்தல் நடத்துவாங்களா?”

“முதல்வரும் அதைப் பத்திதான் யோசிச்சுட்டு இருக்காராம். தேர்தல் நடத்தறதா இல்லை அந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கலாமான்னு அவர் இன்னும் முடிவு எடுக்கலை. ஒரு வேளை தேர்தல் நடத்தி, அதோட முடிவுகள் வேறு மாதிரி இருந்தால் சட்டமன்றத் தேர்தலை பாதிக்குமேங்கிற பயம் முதல்வருக்கு இருக்கு. ஆனா அமைச்சர் நேரு, ‘தேர்தலை நடத்துங்க… நாம பார்த்துக்கலாம்’ன்னு முதல்வரை உற்சாகப்படுத்தி இருக்காராம்.”

“அப்படி தேர்தல் நடந்தா அதை சந்திக்கற நிலையில அதிமுக இருக்குமா?”

“எடப்பாடியைப் பொறுத்தவரை எது சந்தாலும் சந்திக்கற மூட்லதான் இருக்கார். அவர் முதல்ல மாவட்ட செயலாளர் கூட்டத்தை கூட்டதான் திட்டமிட்டு இருந்தார். ஆனா அதுக்கு பிறகு, அதை ரத்து செய்துட்டு செயற்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்திருக்கார். இந்த கூட்டத்தில் தேர்தல் தோல்வி பற்றி மனம் திறந்து பேச இருக்காராம் அதோட சட்டமன்ற தேர்தலுக்காக தொகுதிவாரியா ஒருங்கிணைப்பு குழு நியமிக்கும் திட்டம் பற்றிய அறிவிப்பும் வெளியாகும்னு ரத்தத்தின் ரத்தங்கள் பேசிக்கறாங்க.”

“பாமகவும் அதிமுக பக்கம் சாயறதா கேள்விப்பட்டேனே?”

“விஷயம் உங்க வரைக்கும் வந்திடுச்சா… அது ஒண்ணும் இல்லை… டாக்டர் ராமதாஸ் அன்புமணி ராமதாஸைக் கூப்டு, ‘அடுத்த ஆண்டு உன்னோட ராஜ்ய சபா பதவிக்காலம் முடியப் போகுது. பாரதிய ஜனதா கட்சி உனக்கு ராஜ்யசபா சீட்டெல்லாம் தராது. அதனால அதிமுகவை நம்பு. அவங்களோட பேச நீ சங்கடப்பட்டா நான் வேணும்னா முதல்ல பேசறேன். நீ அப்புறமா பேசு”’ன்னு சொல்லி இருக்கார். அவரும் சம்மதம் தெரிவிச்சிருக்கார். அதைத் தொடர்ந்து பேச்சுவார்த்தைக்கான முயற்சிகளை டாக்டர் ராமதாஸ் தொடங்கி இருக்கார்.”

“அதுக்கு எடப்பாடியோட பதில் என்ன?”

“நாடாளுமன்ற தேர்தல்ல, கடைசி நேரத்துல பாஜக அணிக்கு பாமக போனதால எடப்பாடி கோபமா இருக்காரு. அதனால பேச்சுவார்த்தைக்கு
ராமதாஸ் தரப்புல நேரம் கேட்டதும், மூத்த தலைவர்கள்கிட்ட ஆலோசனை பண்ணிட்டு சொல்றதா சொல்லி இருக்காராம்.”

“விஜய் கட்சியோட முதல் மாநாடு திருச்சியில நடக்கறது உறுதிதானா?”

“90 சதவீதம் அங்கதான் நடக்கும்னு சொல்றாங்க. பொன்மலையில் ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மாநாடு நடத்த அனுமதி கேட்டு கடிதம் அனுப்பி இருக்காங்க. அனுமதி கிடைக்கறதுல எந்த சிக்கலும் இல்லை. ‘எந்த தேதியில் மாநாடுன்னு முடிவு செய்து சொல்லுங்க. அதன் பிறகு சொல்றோம்’னு ரயில்வே நிர்வாகம் சொல்லி இருக்கு.”

“மாநாடுன்னா கொடி இருக்கணுமே?”

“அதுக்கான ஏற்பாடுகளும் நடந்துட்டு இருக்கு. நீலம் பச்சை வெள்ளைன்னு 3 கலர்ல ஒரு கொடி டிசைன் பண்ணி வச்சிருக்காங்க. ஆனா அதுக்கு விஜய் இன்னும் இறுதி ஒப்புதல் தரலையாம். அதுக்காக காத்துட்டு இருக்காங்க.”

“அது என்ன நீலம், பச்சை, வெள்ளை?”

“நீலம் தாழ்த்தப்பட்ட மக்களுக்கானது, பச்சை பசுமை என்றும் சொல்லலாம் சிறுபான்மையினர் என்றும் சொல்லலாம்..வெள்ளை அன்பு, தூய்மை, அமைதி இப்படி நிறைய சொல்லலாம்..”

“காவி இல்லையா?”

“அதை கொடில காட்ட மாட்டாங்க..செயல்ல காட்டிடுவாங்க” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...