அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் மற்றும் டொனால்ட் ட்ரம்ப் இடையே காரசாரமான விவாதம் நடைபெற்றது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் டொனால்ட் ட்ரம்ப்பும், ஜனநாயக கட்சி சார்பில் கமலா ஹாரிஸும் போட்டியிடுகிறார்கள். அமெரிக்க அதிபர் தேர்தலைப் பொறுத்தவரை, அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் நேரடி விவாதத்தில் ஈடுபடுவது வழக்கம். அதன்படி இன்று காலை கமலா ஹாரிஸுக்கும், டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே நேரடி விவாதம் நடைபெற்றது. அமெரிக்காவின் பிலடெல்பியாவில் ஏபிசி ஊடகம் இந்த விவாதத்தை நடத்தியது.
90 நிமிடங்கள் வரை நடந்த இந்த விவாத்த்தில் பங்கேற்று பேசிய டொனால்ட் ட்ரம்ப், “விற்பனை வரி எதனையும் நான் விதிக்கவில்லை. மற்ற நாடுகளுக்கே நாம் வரிகளை விதித்து வருகிறோம். சீனாவிடம் இருந்து கோடிக்கணக்கான டாலர்களை நாம் பெற்று வருகிறோம் என்பது உங்களுக்கு தெரிந்த விசயம். நம்முடைய நாட்டிற்கு சிறைகளில் இருந்தும், மனநல காப்பகங்களில் இருந்தும் லட்சக்கணக்கான மக்கள் வந்து சேர்கின்றனர். அவர்கள் நம்முடைய வேலைகளை எடுத்து கொள்கின்றனர். ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் மற்றும் ஹிஸ்பானிக்குகள் அவற்றை எடுத்து கொள்கின்றனர். அமெரிக்காவின் பல்வேறு நகரங்களை பாருங்கள், ஓஹியோ, கொலராடோ மாகாணங்களில் உள்ள நகரங்களை அவர்கள் கைப்பற்றி உள்ளனர். அவர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர்.
இந்த மக்களையே கமலாவும், பைடனும் நம்முடைய நாட்டிற்குள் வர அனுமதித்து உள்ளனர். அவர்கள் நாட்டை அழித்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஆபத்து நிறைந்தவர்கள். அதிகளவிலான சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்கள். நம்முடைய நாட்டின் வரலாற்றிலேயே, மிக சிறந்த பொருளாதாரங்களில் ஒன்றாக நான் உருவாக்கி வைத்திருந்தேன். இதனை மீண்டும் நான் உருவாக்குவேன். இன்னும் சிறப்பாக ஆக்குவேன்” என்றார்.
கமலா ஹாரிஸ் பேசும்போது, “டிரம்பின் திட்டங்களால் பணவீக்கம் அதிகரித்து, நாட்டை மந்தநிலைக்கு கொண்டு சென்று விடும் என நோபல் பரிசு பெற்ற 16 பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். டிரம்ப் அவருடைய பதவி காலத்தில் வேலைவாய்ப்பின்மையை ஏற்படுத்தி விட்டு சென்று விட்டார். ஒரு நூற்றாண்டில் பொது சுகாதாரம் பெரிதும் பாதிக்கப்படும் வகையில் பெருந்தொற்றில் விட்டு விட்டு அவர் சென்றார். நம்முடைய ஜனநாயகத்தின் மீதும் கடுமையான தாக்குதல் நடந்தது. என்னுடைய திட்டம் பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும். உண்மையில் மக்களுக்கான திட்டம் எதுவும் டிரம்பிடம் இல்லை. ஏனெனில் அவரை பாதுகாப்பதிலேயே அவருக்கு ஆர்வம் அதிகம். அதனை விடுத்து உங்களை அவர் கவனிக்கமாட்டார்
டிரம்பின் நிர்வாகம், வர்த்தக பற்றாக்குறை என்ற நிலைக்கு கொண்டு சென்றது. சீனாவுடன் வர்த்தக போரில் ஈடுபட்டார். கொரோனா பெருந்தொற்றின்போது, அதன் தோற்றம் பற்றிய தகவல்களை வெளியிடும்படி கேட்டபோது, சீனா அதனை கவனத்தில் கொள்ளவில்லை என்பது நாம் அனைவரும் அறிந்த விசயம். ஆனால், டிரம்ப் என்ன கூறினார்? சீன அதிபர் ஜின்பிங்குக்கு நன்றி என எக்ஸ் பதிவில் கூறினார்” என்றார்.
ரஷ்யாவுக்கு எதிரான போரில் யுக்ரேன் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? என்ற கேள்விக்கு, “போரை நிறுத்த நான் விரும்புகிறேன்” என்று டிரம்ப் பதிலளித்தார். ரஷ்யப் படையெடுப்பை சமாளிக்க யுக்ரேனுக்கு உதவுவதற்காக அமெரிக்கா அதிகம் செலவிடுவதாக குறிப்பிட்ட டிரம்ப், அமெரிக்காவுடன் ஒப்பிடுகையில் ஐரோப்பா மிகக் குறைந்த அளவே நிதி அளிப்பதாக கூறினார். ரஷ்ய அதிபர் புதின் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி ஆகிய இருவரையும் எனக்கு நன்றாக தெரியும் என்று அவர் குறிப்பிட்டார்.
காஸாவில் நடைபெற்று வரும் போர் குறித்து கமலா ஹாரிஸிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போரை எப்படி அவர் கையாள்வார் எனவும், எப்படி முடிவுக்குக் கொண்டு வருவார் எனவும் கேட்கப்பட்டது.
இதுகுறித்து பிரசாரத்தில் தான் முன்பு கூறிய கருத்துகளை மீண்டும் கூறிய ஹாரிஸ், தன்னைப் பாதுகாத்துக்கொள்ள இஸ்ரேலுக்கு உரிமை இருப்பதாகவும் தன்னை அந்நாடு எப்படி பாதுகாக்கிறது என்பது முக்கியம் என்றும் அவர் தெரிவித்தார்.