’பொன்னியின் செல்வன்’ படத்தின் வெளியீட்டுக்காக மணி ரத்னம், விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, பார்த்திபன், ஐஸ்வர்யா லெஷ்மி, ஐஸ்வர்யா ராய் இவர்களெல்லாம் ஆவலோடு காத்திருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் த்ரிஷாவின் அம்மா உமா ரொம்பவே ஆவலோடு காத்திருக்கிறார்.
’பொன்னியின் செல்வன்’ படம் பான் – இந்தியா படமாகவும், இந்தியாவைத் தாண்டி உலகெங்கும் வெற்றிகரமாக ஓடினால் ஒரு முடிவு, எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லையென்றால் வேறொரு முடிவு எடுக்கும் எண்ணத்தில் இருக்கிறாராம் இந்த அழகிய அம்மா.
விஷயம் இதுதான். ’மிஸ். மெட்ராஸ்’ ஆக கிரீடம் சூட்டப்பட்டதிலிருந்து தனது பொதுவுலக வாழ்க்கையை ஆரம்பித்த த்ரிஷாவை, வாரியணைத்து கொண்டது தமிழ் சினிமா. ஏறக்குறைய 21 வருடம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாகவே வலம் வந்து கொண்டிருக்கிறார்.
சில வருடங்களுக்கு முன்பு சினிமாவில் இருந்து விஆர்எஸ் வங்கி விட்டு குடும்ப வாழ்க்கையில் செட்டிலாகிவிடலாம் என்று முடிவெடுத்த த்ரிஷாவுக்கு, நிச்சயத்தார்த்தோடு அந்த முடிவு காலாவதியாகி விட்டது.
இதனால் திரும்பவும் சினிமாவில் கவனம் செலுத்தலாம் என்று நினைத்த த்ரிஷாவுக்கு வாய்ப்புகள் வரவில்லை. இதனால் அதிகம் வெளிவராமல், மீடியாவின் வெளிச்சத்திற்கு வருவதை தவிர்த்து வந்தார்.
இந்நிலையில் ‘பொன்னியின் செல்வன்’ பட வாய்ப்பு வரவே மீண்டும் உற்சாகமானார். படமும் இப்போது வெளியீட்டிற்கு தயாராக கொஞ்சம் டென்ஷனோடு த்ரிஷா தரப்பு இருக்கிறதாம்.
படம் ஓடினால் மீண்டும் சினிமா, இல்லையென்றால் மிக விரைவிலேயே திருமணம் என்று த்ரிஷாவின் அம்மா கட்டளையிட்டு இருக்கிறாராம்.
விஜய்க்காக கூர்க்கில் லோகி & கோ
விஜயின் ‘வாரிசு’ படத்தின் ஷூட்டிங் ஏறக்குறைய முடிவடையும் நிலைக்கு வந்துவிட்டது. அதிகபட்சம் இன்னும் இருபது நாட்கள் ஷூட்டிங் மட்டுமே மீதமிருப்பதாக ‘வாரிசு’ வட்டாரம் தெரிவிக்கிறது.
பொதுவாக தனது படம் வெளியாகும் போது, அடுத்தப்படத்தின் அறிவிப்புகளை வெளியிடுவது விஜயின் வழக்கம். எனவே வாரிசு வெளிவரும் போது விஜய்67 பற்றிய அறிவிப்பை வெளியிட தயாராகுமாறு இயக்குநர் லோகேஷ் கனகராஜிடம் விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறாராம்.
இதனால் லோகி & கோ ஜெர்கின், ஸ்வெட்டர், பீனி, ட்ராக் சூட் என எல்லாவற்றையும் ட்ராலியில் அடுக்கி வைத்து கொண்டு, கையில் நாலைந்து டெண்ட்களையும் எடுத்து கொண்டு மலைப்பிரதேசமான கூர்க் சென்றிருக்கிறது.
கூர்க்கில் மூன்று வாரம் டிஸ்கஷன் திட்டத்துடன் லோகி & கோ மும்முரமாக யோசித்து கொண்டிருக்கிறது. கதை இன்னும் முழுமையாக முடிவடையவில்லை என்பதால், லோகி உதவியாளர்கள் ஜென் மனநிலையில் இருந்தபடியே ஐடியாக்களை தட்டிவிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்கிறது லோகியின் நெருங்கிய வட்டாரம்.
நிதி நெருக்கடியில் தத்தளிக்கும் தமிழ் சினிமா
சமீபத்திய வருமான வரித்துறையின் ரெய்ட்டின் காரணமாக, சுனாமி வந்து போன மெரீனா கடற்கரையைப் போல மாறியிருக்கிறது தமிழ் சினிமா.
திரையரங்குகளை நம்பி வெளிவரும் படங்களின் எண்ணிக்கை வெகுவாக குறையும் அபாயமும் இருப்பதாக விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள். ஒரு பக்கம் இன்று சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு ஃபைனான்ஸ் செய்ய முன்பு போல் யாரும் முன்வரவில்லையாம்.,மற்றொரு பக்கம் தங்களுடைய படங்களை வெளியிட போதுமான திரையரங்குகள் சிறிய படங்களுக்கு கிடைப்பதும் இல்லையாம்.
பெரிய நடிகர்களின் படங்கள் வராத வாரங்களில் இப்போது ஐந்தாறு படங்கள் வெளியிட வேண்டிய நிர்ப்பந்தத்தில் சின்ன தயாரிப்பாளர்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள். இதனால் வெளியாகும் அந்தப் படங்களுக்கான ப்ரமோஷன் செய்வதிலும், திரையரங்குகளை பெறுவதிலும் ஒரு வரையறை இல்லை.
இந்த விஷயத்தில் சுறுசுறுப்பாக களத்தில் இறங்க வேண்டிய தயாரிப்பாளர்கள் சங்கமோ அமைதி காத்து கொண்டிருக்கிறது.
இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் சிறிய பட்ஜெட் பட தயாரிப்பாளர்கள் விரக்தியில் இருக்கிறார்களாம்.