கோலிவுட் வட்டாரத்திலும், சமூக வலைதளங்களிலும் நேற்று இரவு முதல் கேட்கப்படும் கேள்வி, ‘விஷாலுக்கு என்ன ஆச்சு?’ என்பதுதான்.
சென்னை நட்சத்திர ஹோட்டலில் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், வரலட்சுமி, அஞ்சலி நடிக்கும் ‘மதகஜராஜா’ பட நிகழ்ச்சி நடந்தது. 12 ஆண்டுகளுக்குபின் இந்த படம், ஜனவரி 12ல் வெளியாக இருப்பதால் விஷால் என்ன பேசப்போகிறார். சுந்தர். சி என்ன சொல்லப்போகிறாரோ என அனைத்து மீடியாக்களும் ஆர்வமாக இருந்தன. இந்நிகழ்ச்சியில் பேசுவதற்காக மைக் பிடித்த விஷால் ரொம்பவே தடுமாறினார். ஒரு கட்டத்தில் அவரது கைகள் நடுங்க ஆரம்பித்தன. குரலும் நடுங்கியது. அதை பார்த்தவர்கள் விஷாலுக்கு என்னாச்சு என்று கேட்க ஆரம்பித்தனர். ஆனாலும், அந்த நடுக்கத்துடன் தொடர்ச்சியாக பேசினார் விஷால்
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், ‘‘நானும், சுந்தர்.சியும் இணைந்த முதல் படம் மதகஜராஜா. சில பிரச்னைகளால் இந்த படம் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது பொங்கலுக்கு வருவது மகிழ்ச்சி. இதில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், மனோபாலா உட்பட பலர் நடித்துள்ளனர். என் கல்லுாரி நண்பரான விஜய்ஆண்டனி இசையமைத்துள்ளார். என்னை அவர் ஒரு பாடலை பாட வைத்துள்ளார். அது உருவானது செம ஜாலி. மை டியர் லவ்வரு என்ற அந்த பாடலை பா.விஜய் எழுதியுள்ளார்.
இந்த படத்தில் ஒரு சண்டைக்காட்சியின்போது என் கழுத்தில் அடிபட்டது. என் வாழ்க்கை அவ்வளவுதான். அது முடியப்போகிறது என்று பலரும் பயந்தார்கள். பக்கத்தில் அப்பல்லோ ஆஸ்பத்திரி இருந்ததால் உடனே சென்றோம். என்னை பரிசோதித்த டாக்டர்கள் நீங்க பிட் ஆக இருப்பதால் தப்பித்தீர்கள். இ்லலாவிட்டால், ரொம்ப ரிஸ்க் என்றனர்.அன்று கடவுள் அருளாள் தப்பித்தேன். உடனே, மீண்டும் படப்பிடிப்பு சென்று அந்த காட்சியில் மீண்டும் நடித்தேன்.
இந்த படத்தின் மூலம்தான் மொட்ட ராஜேந்திரன் காமெடி நடிகர் ஆனார். சந்தானம் காமெடியும் நன்றாக வந்துள்ளது. படத்தின் ஒரு 20 நிமிட காமெடியை கண்டிப்பாக ரசிக்கப்படும். அதை பார்த்து அனைவரும் சிரிப்பார்கள்’’’ என்றார்.
நிகழ்ச்சியில் விஷால் தடுமாறியதை பார்த்த நிகழ்ச்சி தொகுப்பாளர் டிடி ‘விஷாலுக்கு கடும் காய்ச்சல். ஆனாலும், இந்த விழாவுக்கு வந்து இருக்கிறார்’ என்று விளக்கம் கொடுத்தார்.
விழாவில் பேசிய சுந்தர்.சி ‘‘இந்த படத்தில் இயக்குனர் மணிவண்ணனும் நடித்துள்ளார். குஷ்புவும், விஷாலும் நண்பர்கள். அந்தவகையில் அவரிடம் பேசினேன். ஆனால், முதல் சந்திப்பில் விஷால் சரியாக பேசவில்லை. சண்டை வந்துவிட்டது. பின்னர், அவர் ஸாரி கேட்டார். நாங்கள் இணைந்தோம். பக்கா கமர்ஷியல் படமாக மதகஜராஜா வந்துள்ளது. சினிமாவில் எனக்கு நடிகர் கார்த்திக் அண்ணன், விஷால் தம்பி’’ என்றார்.