அக்டோபர் 7ஆம் தேதி மீண்டும் துவங்கிய பாலஸ்தீன – இஸ்ரேல் மோதல் தீவிரமடைந்து பாலஸ்தீனத்தின் காசா பகுதி இஸ்ரேலின் கடுமையான தாக்குதலால் கசங்கி கலங்கி கண்ணீருடன் இறந்துக் கொண்டிருக்கிறது.
தூங்கிக் கொண்டிருந்த இஸ்ரேல் என்ற பூதத்தை உசுப்பிவிட்ட பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு இஸ்ரேலின் ஆக்ரோஷ தாக்குதலை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது.
ஹமாசின் இப்போதைய ஒரே நம்பிக்கை சர்வதேச சமூகம் உதவிக்கு வந்து இஸ்ரேல் தாக்குதலை நிறுத்தும் என்பதுதான். அதற்கான முயற்சிகளை கத்தார் போன்ற சில அரபு நாடுகள் எடுத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அமைதி நடவடிக்கைகள் வருவதற்குள் கைக்குட்டை சைஸ் காசா காணாமல் போய்விடும். அதில் வசித்துக் கொண்டிருக்கும் 24 லட்சம் பேரில் பலர் மண்ணோடு மண்ணாகியிருப்பர்.
பாலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இது போன்ற போர்கள் புதிதல்ல. 1917ல் முதல் உலகப் போர் முடிந்து ஓட்டோமேன் பேரரசு வீழ்ந்ததிலிருந்தே அந்தப் பகுதி சண்டைப் பகுதியாகதான் இருந்து வருகிறது. ஓட்டோமேன் பேரரசு வீழ்ந்ததுக்குப் பிறகு பாலஸ்தீனம் பிரிட்டிஷ்காரர்கள் ஆட்சியின் கீழ் வந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் 1948ல் இஸ்ரேல் என்ற நாடு அங்கே உருவானது. இஸ்ரேலை ஒட்டியிருந்த காசா பகுதி எகிப்து ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்தது. அங்குதான் பாலஸ்தீனியர்கள் குடியேறினர். 1967க்குப் பிறகு காசா பகுதியிலிருந்து எகிப்து ராணுவம் விலகிக் கொள்ள அந்தப் பகுதி முழுமையாக பாலஸ்தீனியர்கள் கைகளுக்கு வந்தது.
அந்தப் பகுதி அந்தப் பகுதி என்றதும் அதிகமாய் கற்பனை செய்துக் கொள்ள வேண்டாம். 41 கிலோமீட்டர் நீளம், 8 கிலோமீட்டர் அகலம். இதுதான் இப்போது இஸ்ரேல் குண்டுகளால் பிளக்கப்பட்டுக் கொண்டிருக்கும் காசா பகுதி. இங்குதான் 24 லட்சம் பாலஸ்தீனியர்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு உருவானது ஒரு முரணான வரலாறு. இன்று ஹமாசை அடித்து துவம்சம் செய்துக் கொண்டிருக்கும் இஸ்ரேல்தான் ஹமாஸ் அமைப்பு உருவாவதற்கு காரணமாக இருந்திருக்கிறது. அன்று அது ஒரு கனாக் காலம். இன்று கண்டம் துண்டமாக வெட்டும் காலம்.
ஹமாஸ் வரலாற்றை கொஞ்சம் பார்ப்போம்.
25 வருடங்களுக்கு முன் பாலஸ்தீனம் என்றாலே நினைவுக்கு வருவது இரண்டு பெயர்கள்தாம். ஒன்று யாசர் அரஃபாத் (Yasser Arafat). மற்றொன்று அவர் தலைமையில் இயங்கிய பிஎல்ஒ என்ற பாலஸ்தீன விடுதலை அமைப்பு (PLO – Palestine Liberation Organization). யாசர் அரஃபாத்தான் அன்று இஸ்ரேலின் முதல் எதிரி. அவரை ஒழித்துக் கட்டுவதுதான் அவர்களின் ஒரே வேலையாக இருந்தது. ஆனால் முடியவில்லை. யாசர் அரஃபாத்துக்கு சர்வதேச நாடுகளின் அரவணைப்பு இருந்தது. பாலஸ்தீனத்தின் தலைவராகவும் இருந்தார். ஹமாஸ் போன்று பொதுமக்களை கொல்லும் தீவிரவாதச் செயல்களை அவர் ஆதரித்ததில்லை.
’நான் மதச்சார்பற்றவன். நான் மதவாதி அல்ல, தேசியவாதி’ என்று யாசர் அரஃபாத் பேசுவதை பாலஸ்தீனர்கள் சிலர் ரசிக்கவில்லை. அரஃபாத்தின் மிதவாத போக்கு அவர்களுக்குப் பிடிக்கவில்லை. அவருக்கு எதிராகவும் அவரது அமைப்பான பிஎல்ஒவுக்கு எதிராகவும் குழுக்கள் வரத் துவங்கின.
இந்த சமயத்தில் பாலஸ்தீனஸ்த்தில் ஷேக் யாசின் என்பவர் இருந்தார். அவர் பள்ளிகள், தொண்டு நிறுவனங்களை நடத்திக் கொண்டிருந்தார். அவருக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருந்தது. அவருக்கு பாலஸ்தீனத்தில் பிடிக்காதது யாசர் அரஃபாத்தும் அவரது அமைப்பும்தான். இதை இஸ்ரேல் கவனித்தது. அவரை வளைத்துப் போட்டது. அவருக்கு ரகசியமாய் நிதி உதவிகள் செய்தது. இஸ்ரேலின் எதிரியான யாசர் அரஃபாத்துக்கு எதிராக கொம்பு சீவி விட்டது. இவையெல்லாம் நடந்தது அறுபதுகளின் இறுதியில்.
முஜாமா என்ற என்ற அமைப்பை உருவாக்கினார் இந்த யாசின். அந்த அமைப்பின் மூலமாக காசாவில் இஸ்லாமிய பல்கலைக்கழகத்தை உருவாக்கினார். இவற்றுகெல்லாம் இஸ்ரேல் உதவி செய்தது. அவர்களது நோக்கம் யாசார் அரஃபாத்தை விட பெரிய தலைவராக யாசினை உருவாக்கிவிட வேண்டும் என்பது. ஆனால் விதி வேறு மாதிரி விளையாடியது.
அந்த இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் இருந்து பல மதவாத தீவிரவாதிகள் உருவாகத் தொடங்கினர். தனது தவறை உணர்ந்த இஸ்ரேல் யாசினை கைது செய்தது. அவரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. ஆனால் இஸ்ரேல் மீண்டும் ஒரு தவறை செய்தது. கைது செய்த யாசினை விடுதலை செய்தது. யாசின் 1984ல் விடுதலை செய்யப்பட்டார். ஹமாஸ் (Hamas) அமைப்பை 1987ல் ஆரம்பித்தார். மதவாத தீவிரவாதிகளின் அமைப்பாக அது மெல்ல வளர்ந்தது. இன்று ஐயாயிரம் ஏவுகணைகளை வீசி இஸ்ரேலையே அதிர வைக்கும் அமைப்பாக உருவெடுத்திருக்கிறது.