விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்துள்ளார். அரசியல் அரங்கில் இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், சென்னை அசோக்நகரில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அக்.2-ல் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறுகிறது. தமிழகத்தில் கள்ளச் சாராயத்தால் 2006-2024 காலகட்டத்தில் 1589 பேர் பலியாகியுள்ளனர்.
மரக்காணம் அருகே கடந்த ஆண்டு 14 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. அதன் பின்னர் கள்ளக்குறிச்சியில் 69 பேர் பலியாகியிருக்கின்றனர். பாதிக்கப்பட்ட மக்களை களத்தில் சந்தித்தபோது, அரசு இழப்பீட்டை விட மதுபான கடைகளை மூட வேண்டும் என்றே கோரிக்கை வைத்தனர்.
மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும். மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களின் வருவாய் இழப்பை ஈடு செய்ய சிறப்பு நிதி வழங்க வேண்டும். போதைப் பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். மதுக்கடைகளை மூட கால அட்டவணையை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்.
மதுவால் ரூ.45 ஆயிரம் கோடி வருமானம் வரும்போது ஏன் மறுவாழ்வு மையங்கள் இல்லை. ஒவ்வொரு மருத்துவமனையிலும் போதை மீட்பு மையங்கள் அமைக்கப்பட வேண்டும். மனித வளத்தை பாழ்படுத்தும் மதுவை அரசே விற்பது தேசத்துக்கு விரோதமான செயல். இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னதாக முழு மதுவிலக்கு கொள்கைக்கான செயல்திட்டத்தை வரையறுக்க வேண்டும். எந்த போதை பொருளும் கூடாது என்பதே விசிக நிலைப்பாடு. மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அதிமுகவும் தயங்குகிறது. வேண்டுமானால் அவர்கள் மாநாட்டுக்கு வரட்டும். எந்த காட்சியும் வரலாம். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் இணைய வேண்டிய தேவை இருக்கிறது.
இதை தேர்தலோடு பொருத்தி பார்க்க வேண்டியதில்லை. விசிகவின் தேர்தல் அரசியல், நிலைப்பாடு முற்றிலும் வேறானது. மக்களின் பிரச்சினைக்காக மதவாத, சாதியவாத சக்திகளை தவிர அனைவரோடும் நிற்க வேண்டிய தேவை இருக்கிறது. முதல்முறையாக மாநாடு நடத்துவதால் அவர்கள் சிக்கலாக பார்க்கின்றனர். மாநாட்டுக்கு எல்லோருக்குமே நிபந்தனைகள் விதிக்கப்படுவதுண்டு. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்க்கு என் வாழ்த்துகள். போதை பொருள் புழக்கம் முற்றாக தடுக்கப்படவேண்டும் என்பதில் இருந்து அரசின் செயல்பாட்டை புரிந்து கொள்ள வேண்டியதுதான்.
இவ்வாறு திருமாவளவன் கூறினார்.
திமுக கூட்டணியில் இருக்கும் கட்சியான விசிக, தாங்கள் நடத்தும் மாநாட்டில் பங்கேற்க அதிமுகவை அழைத்திருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அழைப்பதில் தவறில்லை – திமுக
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பால் வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், “இதில் எனது தனிப்பட்ட கருத்தாக சொல்கிறேன். இதை நான் பெரிதாக சொல்லவில்லை. மது ஒழிப்பு சமூக மாற்றத்தின் மூலமாகத்தான் ஒழிக்க முடியும். கட்சிகள், ஆட்சிகள் நினைத்தால் மட்டும் முடியாது. இது ஒரு சமூகம் சார்ந்த பிரச்சினை என்பதால் அவர்களும் இந்த சிஸ்டத்தில் ஒரு பகுதியாக இருப்பதால் அனைவரையும் அழைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம். அந்த வகையில் யாரை வேண்டுமானாலும் கூப்பிடுவதில் தவறு இல்லை” என்றார்.