சாதாரணமா ஒண்ணு… இல்ல ரெண்டு கிலோமீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஆனாலே நமக்கு பிபி ஏறுது. ஹார்ன் அடிக்கறோம்… டிராபிக் போலீஸ் என்ன பண்றாங்கன்னு சத்தம் போடறோம். ஒண்ணு ரெண்டு கிலோமீட்டர் டிராபிக் ஜாமுக்கே இப்படின்னா 300 கிலோமீட்டர் தூரத்துக்கு டிராபிக் ஜாம் ஆனா… அதுல பயணம் செய்யற மக்களை பத்தி கொஞ்சம் யோசிச்சு பாருங்க.
அப்படி ஒரு டிராபிக் ஜாம் இந்தியால ஏற்பட்டு இருக்கு. மத்தியப் பிரதேச மாநிலத்துல இருந்து கும்ப மேளாவுக்கு போற ரூட்லதான் இந்த மிக நீண்ட டிராபிக் ஜாம் ஏற்பட்டு இருக்கு.
உத்தரப் பிரதேசத்துல இருக்கிற பிரயாக் ராஜ்ல கடந்த ஜனவரி 13-ம் தேதி முதல் கும்பமேளா நடந்துட்டு இருக்கு. பிப்ரவரி 26-ம் தேதிவரை நடக்கப்போற இந்த கும்பமேளால கோடிக்கணக்கான மக்கள் புனித நீராடறாங்க. ஒவ்வொரு நாளும் இதுக்காக பல லட்சம் மக்கள் பிரயாக்ராஜ்ல கூடறாங்க. இதுக்காக அவங்க பல்வேறு ஊர்களில் இருந்தும் சாலை மார்க்கமா பிரயாக்ராஜுக்கு வந்துட்டு இருக்காங்க.
கும்பமேளா 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கறாதலயும், அதுல கலந்துகிட்டு குளிச்சா மோட்சம் கிடைக்கும்கிற நம்பிக்கை மக்களுக்கு இருக்கறதாலயும் கும்ப மேளாவுக்கு மக்கள் பெரிய அளவுல திரண்டு வர்றாங்க. அதனால அங்க நெரிசல் அதிகமாகி வருது. சில நாட்கள் முன்ன ஏற்பட்ட நெரிசல்ல பலரும் பலியானாங்க. அதனால மக்களை கட்டுப்படுத்த பல இடங்களில் சாலையை மூடி கொஞ்சம் கொஞ்சமா வாகன்ங்களை அனுப்பறாங்க.
இந்த சூழல்ல மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து பிரயாக்ராஜ் போகிற வழியில சுமார் 300 கிலோமீட்டர் தூரத்துக்கு நேற்று டிராபிக் ஜாம் ஏற்பட்டிருக்கு. ஒரு கட்டத்துல டிராபிக்கை கண்ட்ரோல் செய்ய முடியாத போலீஸார், பல சாலைகளை மூடியிருக்காங்க. மக்களிடம் பக்கத்து ஊர்களுக்கு போய் பாதுகாப்பா தங்கச் சொல்லி அறிக்கை விடுத்திருக்காங்க.
இது ஒருபுறம் இருக்க, டிராபிக் ஜாம் பற்றிய வீடியோக்களை வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்திருக்காங்க. அதுல ஒருத்தர், “நாங்க ஜபல்பூர்ல பல மணி நேரமா நிக்கறோம். பிரயாக்ராஜுக்கு போக இன்னும் 450 கிலோமீட்டர் தூரம் போகவேண்டி இருக்கு. என்ன செய்யப் போறோம்னு தெரியல’ன்னு பரிதாபமா பதிவிட்டிருக்கார். உலகின் மிகப்பெரிய டிராபிக் ஜாமா இது கருதப்படுது.
இது ஒருபுறம் இருக்க லக்னோ ரயில்வே டிவிஷன் பிப்ரவரி 9-ம் தேதி முதல் பிப்ரவரி 14-ம் தேதிவரை புதுசா பயணிகளை ஏத்திட்டு போறதில்லைன்னு அறிவிச்சிருக்கு. இதனால சாலை மார்க்கமா போற மக்களோட எண்ணிக்கை இனியும் அதிகரிக்க வாய்ப்பு இருக்கு.