சுந்தர்.சி இயக்கிய பல படங்களில் வடிவேலு காமெடி வெடி சிரிப்பை வரவழைத்து இருக்கிறது. அதேபோல், சுந்தர்.சி, வடிவேலு இணைந்து நடித்த படங்களிலும் சிரிப்புக்கு பஞ்சமில்லை. இதற்கு உதாரணமாக வின்னர், கிரி, தலைநகரம் என பல படங்களை சொல்லலாம். ஒரு கட்டத்தில் இந்த கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது. சந்தானம், சூரி, யோகிபாபுவை வைத்து காமெடி கூட்டணியை தொடங்கினார் சுந்தர். சி. இப்போது பழைய பிரச்னைகள் பேசி தீர்க்கப்பட்டுவிட்டது. சுந்தர்.சி இயக்கி நடிக்கும் கேங்கர்ஸ் படத்தில் வடிவேலு சிங்காரம் என்ற கேரக்டரில் காமெடி பண்ணியிருக்கிறார். ஏப்ரல் 14ல் இந்த படம் வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு சுந்தர். சி இயக்கத்தில் வெளியான அரண்மனை4 படம், 100 கோடி வசூலை ஈட்டியது. இந்த ஆண்டு சுந்தர்.சி கூட்டணியில் வந்த மதகஜராஜா பெரிய வெற்றி படமாக அமைந்தது. அடுத்ததாக கேங்கர்ஸ் படம் வருவது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வடிவேலு கதைநாயகனாக நடித்த பல படங்கள் வெற்றி பெறவில்லை. அவர் குணசித்திர வேடத்தில் நடித்த மாமன்னன் படத்தையும் மக்கள் பெரிதாக கொண்டாடவில்லை. இதனால், வெற்றி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், பழசை மறந்து சுந்தர்.சியிடம் தஞ்சம் அடைந்துள்ளார் வடிவேலு. இந்த படத்தில் அவர் 5 கெட்அப்புகளில் வருவதாக தகவல். நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்ற மனநிலையில் இருந்து பழையபடி காமெடி வேடத்தில் நடித்துள்ள வடிவேலு, அடுத்து பகத்பாசலுடன் இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகிறார். அந்த பட தலைப்பு மாரீசன்.