உலகின் அதிக வயதுடைய மனிதர் என்று அறியப்பட்ட பிரேசில் நாட்டைச் சேர்ந்த கிறுஸ்தவ பெண் துறவியான இனாஹ் கானாபாரோ (வயது 116) கடந்த ஏப்.30 ஆம் தேதியன்று காலமானார்.
இந்நிலையில், அவருக்கு அடுத்து உலகின் அதிக வயதுடைய மனிதர் என்ற பட்டம் இங்கிலாந்தின் லண்டன் நகரத்தைச் சேர்ந்த ஈதல் கேடர்ஹாம் என்ற 115 வயது மூதாட்டிக்கு சொந்தமாகியுள்ளது.
இந்தியப் பயணம்!
தெற்கு இங்கிலாந்திலுள்ள ஷிப்டன் பெல்லிங்கர் எனும் கிராமத்தில் 1909 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 21 ஆம் தேதியன்று பிறந்த ஈதல் கேடர்ஹாம், தனது வாழ்நாளில் இரண்டு உலகப் போர்களையும் சந்தித்துள்ளார்.
பயணம் செய்வதை அதிகம் விரும்பிய அவர் கடந்த 1927 ஆம் ஆண்டு தனது 18 ஆம் வயதில், ஆங்கிலேயர் ஆட்சியின் கீழிருந்த இந்தியாவுக்கு வந்துள்ளார். சுமார் 3 ஆண்டுகள் இந்தியாவிலிருந்து, ஒரு ஆங்கிலேய குடும்பத்தினரின் குழந்தைகளைப் பராமரிக்கும் வேலையைச் செய்த அவர் பின்னர் மீண்டும் தனது தாயகத்துக்கு திரும்பியுள்ளார்.
1931-ம் ஆண்டு ஹாங்காங்கில் பிரிட்டன் ராணுவத்தில் பணியாற்றிய நார்மன் என்பவரை சந்தித்து அவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், இந்தத் தம்பதிக்கு 2 மகள்கள் பிறந்த நிலையில் 1976 ஆம் ஆண்டு நார்மன் மரணமடைந்துள்ளார்.
தற்போது லண்டனிலுள்ள ஒரு முதியோர் காப்பகத்தில் வசித்து வரும் ஈதல், அவருக்கு கிடைத்துள்ள இந்தப் புதிய பட்டத்தை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடும் படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
நீண்ட வாழ்வின் ரகசியம்!
தனது நீண்ட வாழ்வுக்கான ரகசியம் என்னவென்று கேட்டபோது, “வாக்குவாதம் செய்யாதீர்கள், நான் என்றும் வாக்குவாதம் செய்ய மாட்டேன், பிறர் பேசுவதைக் கவனித்துக்கொண்டு எனக்கு பிடித்ததை செய்வேன்” என அவர் கூறியுள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.