தெலுங்கு சினிமா உலகமும் அரசியல் வட்டாரமும் அதிர்ந்து போய் இருக்கிறது. சமந்தா – நாக சைதன்யா இருவரும் பிரிவுக்கு சந்திரசேகரராவ் மகன் கே.டி.ராமா ராவ்தான் காரணம் என்று கொளுத்திப் போட்டிருக்கிறார் சுரேகா என்ற அமைச்சர். அவருடைய இந்த பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள் குறிப்பாக நாக சைதன்யாவின் அப்பா, சமந்தாவின் முன்னாள் மாமனார் நாகார்ஜுனா கடுமையாக பேசி தனது கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
இதனால் தான் சொன்ன கருத்தை வாபஸ் பெற்றிருக்கிறார் ’கொண்டா’ சுரேகா. சமந்தா தன்னுடைய எதிர்ப்பை எக்ஸ் தள பதிவில்,
பெண்ணை ஒரு பொருளாக பார்க்கும் மிகவும் கவர்ச்சிகரமான இந்த சினிமா துறையில், சொந்த வாழ்க்கையில் பல்வேறு பிரச்னையை எதிர்கொண்டு, மீண்டு வருவதற்கு தைரியமும் தன்னம்பிக்கையும் தேவை. இந்த பயணத்தில் நான் பெருமை கொள்கிறேன். அமைச்சர் கொண்டா சுரேகா, ஒரு அமைச்சராக நீங்கள்
கூறிய கருத்து தவறானது என உணர்ந்து இருப்பீர்கள் என நம்புகிறேன்.
ஒரு தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுப்பீர்கள் என நம்புகிறேன். எனது விவாகரத்து என்பது சொந்த விஷயம். அதனைப் பற்றி யூகங்களை தவிர்க்க வேண்டும். எனது விவாகரத்து எங்களது இருவரின் சம்மதத்துடன் நடந்துள்ளது. அதில் எந்த வித அரசியல் தலையீடும் இல்லை. அரசியல் விவகாரத்தில் எனது பெயரை பயன்படுத்த வேண்டாம். நான் அரசியல் விஷயத்தில் தலையிட மாட்டேன், கடைசி வரை அவ்வாறே இருக்க விரும்புகிறேன்” என தெரிவித்துள்ளார். இதுவரைக்கும் தனது திருமணம் குறித்தோ, நாக சைதன்யா குறித்தோ வேறு எங்குமோ பதில் சொல்லாத சமந்தா, சுரேகாவின் இந்த கருத்துக்கு கடுமையாக ரியாக்ட் செய்திருப்பது கவனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் நாகர்ஜுனா இந்த குற்றச்சாட்டுக்கு ரியாக்ட் செய்திருப்பதுதான் வியப்பாக பார்க்கப்படுகிறது. தனது மகன் நாக சைதன்யாவுடன் சமந்தா பிரிந்து போன பிறகும் சமந்தா எங்கள் வீட்டுப் பெண் தான் என்ரு பாசம் காட்டி பேசியிருந்தார். இன்னும் தனது குடும்பத்தின் சார்பாக மிகபெரிய தொகையை ஜீவனாம்சமாக கொடுக்கத் தயாராக இருப்பதாக பேசியிருக்கிறார். இன்று சமந்தாவிற்காக முதல் ஆளாக தனது கடுமையான கருத்தை முன் வைத்திருக்கிறார் நாகர்ஜுனா. தனது எக்ஸ் தள பதிவில்,
அமைச்சர் கொண்டா சுரேகா கருத்தை நான் வன்மையாக கண்டிக்கிறேன். நீங்கள் ஒரு அரசியல்வாதியை விமர்சிக்க அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கும் ஒரு சினிமா நட்சத்திரத்தின் வாழ்க்கையை சம்பந்தப்படுத்தி பேச வேண்டாம். தனிமனித உரிமைக்கு மரியாதை கொடுக்க வேண்டும். அமைச்சர் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என கூறியுள்ளார்.