ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பாபி தியோல் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம், ‘ஜனநாயகன்’. கேவிஎன் புரொடக் ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படம் ஜன.9 அன்று திரையிட திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் இப்படத்துக்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை என்பதால் உடனடியாக வழங்கக்கோரி தயாரிப்பு நிறுவனம் தரப்பி்ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை நீதிபதி பி.டி.ஆஷா முன்பு நேற்று வந்தது. தயாரிப்பு நிறுவனம் தரப்பி்ல் மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன் மற்றும் வழக்கறிஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர் ஆஜராகி, ரூ.500 கோடி செலவில் எடுக்கப்பட்டுள்ள இத்திரைப்படம் கடந்த டிச.18 அன்றே தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
படத்தை ஆய்வு செய்த தணிக்கை வாரியம், டிச.22 அன்று ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்து சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மவுன மாக்கவும் அறிவுறுத்தியது. அந்த நிபந்தனைகளை பூர்த்தி செய்து டிச.29 அன்று மீண்டும் தணிக்கை வாரியத்துக்கு அனுப்பி வைத்தும், இதுவரை தணிக்கை சான்றிதழ் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் திடீரென ஜன.5-ம் தேதியன்று இப்படத்துக்கு எதிராக புகார் வந்துள்ளதாகக் கூறி ‘மறு ஆய்வு குழுவை’ அணுக தணிக்கை வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இப்படத்தை தணிக்கை வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் தவிர வேறு யாரும் பார்க்காதபோது, அந்த புகாரை அளித்தது யார்? அதில் படத்துக்கு எதிராக என்ன காரணம் கூறியுள்ளனர் என்பது புரியாத புதிராக உள்ளது.
ஏற்கெனவே யு/ஏ சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்த தணிக்கை வாரிய தலைவரே, தற்போது மறுஆய்வு குழுவை அணுக உத்தரவிட்டிருப்பது முன்னுக்குப்பின் முரணாக உள்ளது. இன்னும் 3 தினங்களில் உலகம் முழுவதும் 4 மொழிகளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இங்கு மட்டும் தணிக்கை சான்றிதழ் வழங்காமல் இழுத்தடிப்பது ஏற்புடையதல்ல என வாதிட்டனர்.
தணிக்கை வாரியம் தரப்பில் ஆஜரான மத்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், “ஜனநாயகன் படத்தில் மத உணர்வுகளைத் தூண்டும் வகையிலும், புண்படுத்தும் வகையிலும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார் வந்துள்ளதால்தான் அப்படத்தை மறுஆய்வுக்கு அனுப்பி வைக்க தணிக்கை வாரியம் முடிவு செய்துள்ளது. எதையும் சட்டரீதியாக ஆராய்ந்து அதன்பிறகே முடிவு எடுக்க முடியும். கோடிக்கணக்கில் செலவிட்டு பணத்தை எடுத்துவிட்டோம் என்பதற்காக குறிப்பிட்ட தேதிக்குள் தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என நிர்ப்பந்திக்க முடியாது’’ என்றார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இப்படத்தை ஏன் ஜன.10-ம் தேதிக்கு தள்ளி வைக்கக்கூடாது? என கேள்வி எழுப்பி, தை பிறந்தால் வழி பிறக்கும் என்றார். அதற்கு படத்தயாரிப்பு குழு வெளிநாடுகளில் இப்படம் ஜன.9 அன்று வெளியாகிவிடும் என்பதால்தான் அதே தேதியன்று இந்தியாவிலும் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது என தெரிவி்க்கப்பட்டது.



