ஜீன்ஸ், டீஷர்ட்டுக்கு பதில் சேலையில் ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா. கையில் ஒரு தொன்னை. அதில் சர்க்கரைப் பொங்கல். இன்னொரு கையில் குங்குமம்.
“முதல் ஆடி வெள்ளிக்கிழமை இல்லையா… அதுதான் கோயிலுக்கு போயிட்டு வந்தேன். பிரசாதத்தை எடுத்துக்கோங்க” என்று தொன்னையை நீட்டினாள்.
பொங்கலை கொஞ்சமாக எடுத்து வாயில் போட்டோம். “ரொம்ப ஸ்வீட்டா இருக்கு” என்று ரகசியாவிடம் சொன்னோம்.
“இதே மனநிலைலதான் எடப்பாடியார் இருக்கார். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமருக்கு பக்கத்தில் தன்னை உட்கார வச்சது அவர் மனசுல தித்திப்பை ஏற்படுத்தி இருக்கு. அந்த இனிமை தந்த சந்தோஷத்துல நாடாளுமன்ற தேர்தலுக்கான முதல்கட்ட வேலைகளைத் தொடங்கிட்டார்” என்றாள் ரகசியா.
“முதல்கட்ட வேலைன்னா?”
“தேர்தல்ல முதல்கட்ட வேலைன்னா அது தொகுதிப் பங்கீடுதானே?. அந்த வேலையைத்தான் தொடங்கி இருக்கார். 25 தொகுதிக்கு மேல போட்டியிடணும்கிறது எடப்பாடியோட ஆசை. பாஜகவுக்கு 9 சீட் கொடுக்க இப்போதைக்கு அவர் திட்டமிட்டு இருக்கார். தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஏற்கெனவே ராஜ்ய சபா சீட் கொடுத்ததால அவங்களுக்கு நாடாளுமன்ற தேர்தல்ல சீட் கிடையாதுன்னு சொல்லிட்டாராம். ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர் ஆகிய ரெண்டு பேரும் தாமரை சின்னத்துல போட்டியிடுவாங்க. அதனால அது பாஜக கணக்குல போயிடும்னு கணக்குப் போடறார்.”
“பாமக குறைஞ்சது 5 சீட்டாவது கேட்குமே?’”
“5 இல்லை. 7 சீட்களை எதிர்பார்க்குது பாமக. ஆனா இப்போதைக்கு எடப்பாடி அவங்களைப் பத்தி கவலைப்படறதா இல்லை. ‘பாஜகவோடதான் எங்க கூட்டணின்னு அன்புமணி சொல்லியிருக்கார். அதனால அவங்க வேணும்னா பாஜககிட்டயே பேசட்டும்’னு எடப்பாடி உறுதியா இருக்காராம். அவங்களா இறங்கி கூட்டணி பத்தி பேச வந்தா 4 சீட்டுக்கு மேல கொடுக்க முடியாதுங்கிறதுல உறுதியா இருக்கார். அதுக்கு முன்னால தன்னோட பலத்தை காட்ட மதுரை மாநாட்டை வெற்றிகரமாக்க திட்டம் போட்டுட்டு இருக்கார். அதனால மதுரை மாநாட்டுக்கு குறைஞ்சது 10 லட்சம் பேரையாவது திரட்டிக் காட்டணும்னு மாவட்ட செயலாளர்கள்கிட்ட சொல்லி இருக்காராம்.”
“டெல்லி நியூஸ் வேற ஏதாவது இருக்கா?”
“டெல்லியில பாரதிய ஜனதா சார்பா மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் எடப்பாடியை சந்திச்சு பேசி இருக்கார். அப்ப, ‘பிரதமரே திமுகவை கடுமையா விமர்சிச்சு பேசுறார். நீங்களும் தமிழ்நாட்ல திமுகவை கடுமையாக எதிர்த்து பிரச்சாரம் செய்யுங்க. போராட்டம் நடத்துங்க’ன்னு சொல்லி இருக்கார். அதுக்கு எடப்பாடி, ‘ஏற்கனவே நாங்க நிறைய ஆர்ப்பாட்டங்களை நடத்தறோம். இப்பக்கூட மாவட்டம்தோறும் திமுகவை எதிர்த்து விலைவாசி உயர்வை கண்டித்து போராட்டம் நடத்துகிறோம்’ன்னு சொல்லி இருக்கார்.”
“அதிமுக நியூஸாவே இருக்கே… திமுக நியூஸ் ஏதும் இல்லையா?”
“அமைச்சர் பொன்முடி முதல்வரை சந்திச்சு அமலாக்கத் துறை விசாரணை பத்தி விரிவா எடுத்துச் சொல்லி இருக்கார். அப்ப முதல்வர், ‘உங்களையும் சேர்த்து எல்லா அமைச்சர்களுக்கும் ஏற்கெனவே நான் எச்சரிக்கை செஞ்சிருந்தேன். டெல்லி நம்மளை குறிவச்சு ஏதோ செய்யப் போகுது. அதனால உஷாரா இருங்கன்னு சொல்லி இருந்தேன். ஆனா இப்ப மூத்த அமைச்சரான நீங்களே சிக்கிட்டீங்களே’ன்னு வருத்தப்பட்டாராம். ‘அமலாக்கத் துறை இனி என்ன செய்யும்னு நினைக்கறீங்கன்னு கேட்டிருக்கார். அதுக்கு பொன்முடி, ‘அவங்க நிச்சயம் என்னையும் என் மகனையும் கைது செய்வாங்கன்னு அவங்களோட பேச்சுல தெரிஞ்சுது. அமலாக்கத் துறை விசாரணைக்குப் போன என் ஆடிட்டரும் அதை உறுதிப்படுத்தி இருக்கார். நானே அமலாக்கத் துறை அதிகாரிகளிடம் மறுபடியும் எனக்கு சம்மன் வருமான்னு கேட்டேன். அதுக்கு அவங்க கண்டிப்பாக வரும்னு சொன்னாங்க’ன்னு சொல்லி இருக்கார்.”
“முதல்வரோட ரியாக்ஷன் என்ன?”
“அவர் முகம் இறுக்கமாயிடுச்சாம். அமலாக்கத் துறை அடுத்த கட்டமா உதயநிதிக்கு குறி வைக்கும்னு முதல்வர் நினைக்கறார். பொன்முடிகிட்ட பேசும்போதும் இதைச் சொல்லி இருக்கார். திருவண்ணாமலைல நடந்த கூட்டத்துல உதயநிதி ஸ்டாலின் அமலாக்கத் துறைக்கு சவால் விடுற மாதிரி பேசினார். இதை ஸ்டாலின் ரசிக்கலனு அறிவாலயத்துல சொல்றாங்க. உதயநிதியை போன்ல கூப்ட்டு, ‘இப்போதைக்கு அமலாக்கத் துறை பத்தி எதுவும் பேச வேண்டாம். கட்சியில இருக்கற மத்தவங்க பேசுவாங்க’ன்னு சொன்னாருனும் சொல்றாங்க”
“உதயநிதியோட திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர் டூர் பத்தி ஏதும் நியூஸ் இருக்கா?”
“ஸ்டாலினுக்கு பிறகு கட்சியில எல்லாமே உதயநிதிதான்னு நிரூபிக்கற மாதிரி இந்த டூர் இருந்திருக்கு. பல இடங்கள்ல முதல்வருக்கு தரப்படும் மரியாதை உதயநிதிக்கு கொடுக்கப்பட்டிருக்கு. பொதுவா கருணாநிதி வேலூருக்கு ஏதாவது நிகழ்ச்சிக்கு வந்தால் அவரை மாவட்ட எல்லையில் போய் வரவேற்று அழைச்சுட்டு போவார் துரைமுருகன். இப்ப உதயநிதி ஸ்டாலினுக்கும் அதே மரியாதையை அவர் கொடுத்திருக்கார்.”
”அவர்தான் மூன்றாம் கலைஞராச்சே”
“அப்படிலாம் சொல்லக் கூடாதுனு அவரே சொன்ன பிறகும் நீங்க அதை மறக்கலையே. 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல யாருக்கு எவ்வளவு சீட் கிடைக்கும்னு ஒரு புள்ளிவிவரம் சுத்திக்கிட்டு இருக்குதே…கவனிச்சிங்களா?”
“ஆமாம், நானே கேக்கணும்னு நினைச்சேன். என்னது அது?”
”மத்திய உளவுத் துறை எடுத்த சர்வேனு சுத்துது. அதுல எதிர்க் கட்சிகள் கூட்டணியான INDIAக்கு 357 இடங்களும் பாஜக கூட்டணியான NDAக்கு 155 இடங்கள்னு போட்டிருக்கு. தமிழ்நாட்டுல 39 சீட்டும் திமுக கூட்டணிக்குனு சொல்றாங்க. பாஜக வட்டாரத்துல விசாரிச்சேன். இது காங்கிரஸ்காரங்களே பண்ற வேலைனு சொல்றாங்க. காங்கிரஸ்காரங்ககிட்ட கேட்டா இதுக்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லைனு சொல்றாங்க”
‘”தந்தி டிவியும் சர்வே பண்ணியிருக்கே”
“ஆமாம். அதுதான் பாஜக தரப்புல அதிர்ச்சி. தமிழ்நாட்டுல ராகுலுக்கு 71 சதவீத வாக்குகள் மோடிக்கு 29 சதவீதம்னு போட்டிருக்காங்க. பாஜகவுக்கு ஆதரவான தொலைக்காட்சியே இப்படி போட்டிருக்காங்களேனு கமலாயத்துல அதிர்ச்சில இருக்காங்க. அண்ணாமலை தீவிரமா வேலை செஞ்சும் ஆதரவு கூடலையேன்னு கவலைப்படுறாங்க”
“அதான் பாத யாத்திரை போகப் போகிறார்ல அப்ப வாக்குலாம் கூடிடும்னு ஆறுதல் சொல்லு”
“அதுலயும் கமலாயத்துல சிலர் கடுப்புல இருக்காங்க. பாதயாத்திரை பாஜகவை முன்னிலைப்படுத்துதா அண்ணாமலையை முன்னிலைப்படுத்துதானு ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கிறாங்க”