கல்வியின் வாசமே இல்லாமல் வளர்க்கப்படும் ஒரு தலைமுறை தங்களின் பிள்ளைகளின் வாழ்க்கையை மீட்டெடுக்க கல்விக்காக எப்படி போராட்டுகிறார்கள் என்பதை சொல்லியிருக்கும் திரைப்படம்தான் சார். ஜெயபாலன் தன் ஆதிக்க மனோபாவத்தால் தன் கிராமத்து மக்களை படிக்க விடாமல் தன் காலடியிலேயே அடிமைகள் போல இருக்க வேண்டும் என்று நினைக்கிறார். இவர்களை மீட்க முற்போக்கு சிந்தனையுடன் அண்ணாதுரை என்ற வாத்தியார் முயற்சி செய்கிறார். அதே கிராமத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். ஆனால் அதை அந்த ஆதிக்க கும்பல் சதி செய்து தடுக்கிறது. இதில் அண்ணாதுரை வாத்தியார் கொல்லப்படுகிறார். இந்த பகை பரம்பரை தாண்டி இன்றைய காலம் வரைக்கும் தொடர்கிறது. சரவணனை பைத்தியம் பட்டம் கட்டி அவரது மகன் விமலையும் பள்ளிக்கூடா வாத்தியார் வேலையை விட்டு அனுப்ப முயற்சி செய்கிறது ஜெயபாலன் பேரன் குடும்பத்தினர். இந்த நிலையில் விமல் இதனை எப்படி எதிர்த்து வெற்றிபெறுகிறார் என்பதே கதை.
விமல் வித்தியாசமான கெட்டப்பில் வருகிறார். பள்ளிக்கூடத்தில் அவரது இயல்பான நடிப்பும், காமெடி காட்சிகளும் நன்றாகவே கைக்கொடுத்திருக்கிறது. நாயகி சாயதேவியின் காதல் பாடம் நடத்தும் போது குறும்பு, தன்னை அம்மாவே பைத்தியம் என்று சொல்லும் போது கலங்க வைக்கும் நடிப்பும் சிறப்பாக வந்திருக்கிறது. சண்டைக்காட்சியில் ஆக்ரோசம் காட்டியிருக்கிறார். பல காட்சிகளில் நிறைவாகவே செய்திருக்கிறார் விமல்.
சாயா தேவி அப்பாவியாக வந்து மனதில் நிறைந்து போகிறார். சரவணனுக்கு அழுத்தமான வேடம். சரியாக கையாண்டிருக்கிறார். அதுவும் மன நிலை சரியில்லாதவராக நடிப்பில் மனம் கவருகிறார். ரமா வழக்கம் போல் அசத்தியிருக்கிறார். படத்தில் அனைத்து கதாபாத்திரங்களும் இயக்குனர் போஸ் வெங்கட் சொன்னதை செய்திருக்கிறார்கள். ஆனால் போஸ் வெங்கட்தான் திரைக்கதையை சரியாக செய்யவில்லை. ப்ளாஸ்பேக் காட்சிகளை சுவாரஸ்யம் இல்லாமல் பல படங்களில் பார்த்த அதே காட்சி அமைப்புகளுடன் வடிவமைத்திருப்பது தொய்வை ஏற்படுத்தியிருக்கிறது.
கண்ணுக்குத் தெரியாத பால்ரஸ் குண்டுகள் தாக்கியதை மருத்துவர் சொன்ன பிறகு ஊருக்கே தெரிந்திருக்கும் ஆனால் அதை வைத்து பின் பாதியை செய்திருப்பதும் படத்தை பலவீனத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இன்னும் காட்சிகள் அழுத்தமாக வைத்திருக்கலாம். காதல் காட்சிகளும், காமெடி காட்சிகளும் வைக்க இடம் இருந்தும் தவிர்த்தது ஏன்?
கதையின் நோக்கம் கல்வி என்ற ஒற்றை கருத்திற்காக படத்தை பாராட்டலாம். இசை சித்து குமார் பாடல்கள் ஓகே. இனியன் ஹரீஷ் ஒளிப்பதிவு இரண்டு காலகட்டத்தையும் வித்தியாசப்படுத்திக் காட்டியிருக்கிறது. சுகுணா திவாகரின் வசனத்தில் கூர்மை. தனது கன்னி மாடம் திரைப்படத்தின் மூலம் திரும்பிப் பார்க்க வைத்த இயக்குனர் போஸ் வெங்கட் இந்த படத்தில் காணவில்லை என்பது வருத்தம்தான்.