No menu items!

வெள்ளி வென்ற கிரிக்கெட் பெண் சிங்கங்கள்!

வெள்ளி வென்ற கிரிக்கெட் பெண் சிங்கங்கள்!

மகளிர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, மேற்கிந்திய தீவுகள் ஆகியவற்றின் ஆதிக்கமே ஒரு காலகட்டத்தில் ஓங்கி இருந்தது. ஆனால் இப்போது இந்திய அணியும் மகளிர் கிரிக்கெட்டில் தவிர்க்க முடியாத ஒரு சக்தியாகிவிட்டது. குறிப்பாக காமன்வெல்த் போட்டியில் செமி ஃபைனலில் வலுவான இங்கிலாந்தை விழ்த்திய இந்திய மகளிர் அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப் போட்டியிலும் கடைசிவரை போராடியது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்று, இந்தியாவின் முத்திரையை பதித்துள்ளனர் இந்திய மகளிர் அணியினர்.

இந்த தொடரில் இந்தியாவுக்காக சிறப்பாக ஆடிய வீராங்கனைகளில் சிலரைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

ஸ்மிர்தி மந்தனா:

காமன்வெல்த் போட்டியில் இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியதற்கு முக்கிய காரணம் ஸ்மிர்தி மந்தனா. இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதிப் போட்டியில் 23 பந்துகளில் இவர் எடுத்த அரைசதம்தான் இந்தியாவை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்றது. இந்த தொடரில் மட்டும் 159 ரன்களைக் குவித்துள்ளார் மந்தனா.

மகளிர் கிரிக்கெட்டின் விராட் கோலியாக கருதப்படும் ஸ்மிர்தி மந்தனா, மகளிருக்கான சர்வதேச தரவரிசைப் பட்டியலில் 2-வது இடத்தில் இருக்கிறார். மிகக்குறைந்த பந்துகளில் (23) அரைசதம், உள்ளூர் கிரிகெட் போட்டியில் இரட்டை சதம் விளாசிய ஒரே இந்திய வீராங்கனை என்று பல சாதனைகளைப் படைத்துள்ளார்.

மந்தனாவின் அப்பாவும் சகோதரரும் மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவந்ததால் சிறு வயதிலேயே அவருக்கும் கிரிக்கெட் ஆடும் ஆசை வந்துள்ளது. அப்பாவும் அண்ணனும் கொடுத்த பயிற்சியால் 9-வது வயதிலேயே மகாராஷ்டிராவின் 15 வயதுக்கு உட்பட்ட கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார் மந்தனா. தனது 16 வயதில் இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த இவருக்கு இப்போது 26 வயது. மந்தனா ஆடிய சர்வதேச போட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்க, அதிகரிக்க, இந்திய மகளிர் அணியின் வெற்றிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கிரிக்கெட் விளையாடு மட்டுமின்றி தொழில்முனைவோராகவும் இருக்கும் ஸ்மிர்தி மந்தனா, ஆயுர்வேத நிறுவனம் ஒன்றில் முதலீடு செய்துள்ளார்.

ஜெமீமா ரோட்ரிக்ஸ்

காமன்வெல்த் போட்டிகளில் இந்தியாவின் கொடி உயரப் பறப்பதற்கு மற்றொரு காரணமாக இருந்தவர் ஜெமீமா ரோட்ரிக்ஸ். இந்த தொடரில் மந்தனாவுக்கு தோள்கொடுத்து ஆடிய இவர் மொத்தம் 146 ரன்களைக் குவித்துள்ளார்.
மும்பையில் பிறந்தவரான ஜெமீமா 4 வயது முதலே கிரிக்கெட் பயிற்சிகளில் ஈடுபடத் தொடங்கிவிட்டதாக அவரது பெற்றோர் கூறுகின்றனர். மற்ற குழந்தைகளெல்லாம் நர்சரி பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த நேரத்தில் 4 வயது குழந்தையான ஜெமீமா, தினமும் 25 கிலோமீட்டர்கள் தள்ளியுள்ள கிரிக்கெட் பயிற்சி மையத்துக்கு சென்றுவந்தார். கிரிக்கெட் மட்டுமின்றி கால்பந்து மற்றும் ஹாக்கி போட்டிகளிலும் அவர் பயிற்சி பெற்றார்.

கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கி விளையாட்டிலும் சிறந்து விளங்கிய ஜெமீமா 17 மற்றும் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஹாக்கி போட்டிகளிலும் ஆடியுள்ளார்.

ஒருகட்டத்தில் கிரிக்கெட் அல்லது ஹாக்கி ஆகிய விளையாட்டுகளில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற நிலை வர ஹாக்கியை விட்டு கிரிக்கெட்டுக்கு வந்துள்ளார். “காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றது ஓரளவு மகிழ்ச்சியை தந்தாலும், தங்கப்பதக்கம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. அந்த ஏக்கத்தை விரைவில் தீர்ப்போம் என்கிறார் ஜெமீமா ரோட்ரிக்ஸ்.

ரேணுகா சிங்:

இந்த காமன்வெல்த் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்திய வீராங்கனை ரேணுகா சிங். ஹிமாசலப் பிரதேசத்தின் சிம்லாவைச் சேர்ந்த மிதவேகப் பந்துவீச்சாளரான இவர், இந்த தொடரில் 5 ஆட்டங்களில் 11 விக்கெட்களை எடுத்துள்ளார்.

லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 18 ரன்களை மட்டும் கொடுத்து இவர் 4 விக்கெட்களை கொய்ய கிரிக்கெட் ரசிகர்களின் பார்வை இவர் மீது விழுந்துள்ளது.

3 வயதிலேயே தந்தையை இழந்த ரேணுகாவுக்கு டிவியில் கிரிக்கெட் போட்டிகளைப் பார்த்து அதில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. இதைப்பார்த்து அவரது மாமாதான் கிரிக்கெட் பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டுள்ளார். கடந்த 2021-ம் ஆண்டில் இந்திய அணியில் இடம்பிடித்த ரேணுகா சிங், இதுவரை 5 ஒருநாள் போட்டிகளில் 10 விக்கெட்களையும், 11 டி20 போட்டிகளில் 14 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார்.

ஹர்மன்ப்ரீத் கவுர்

காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன். அதிரடி பேட்டிங்கை ஆயுதமாகக் கொண்ட இவரை வீரேந்தர் சேவாக்கின் ஜெராக்ஸாகத்தான் கிரிக்கெட் ரசிகர்கள் பார்க்கிறார்கள்.

சேவாக்கைப் போல், ‘பந்தைப் பார்… அடி!’ என்பதை தாரக மந்திரமாகக் கொண்டு ஆடிவரும் ஹர்மன்பிரீத் கவுர் இதுவரை 121 போட்டிகளில் 3,101 ரன்களையும், 129 டி20 போட்டிகளில் 2,546 ரன்களையும் எடுத்துள்ளார். மிதாலி ராஜுக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ள கவுர், அணியை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்கிறார்.

பஞ்சாப் மாநிலத்தின் மோகா என்ற ஊரில் பிறந்த ஹர்மன்பிரீத் கவுர், சிறுவயதில் தினமும் 30 கிலோமீட்டர் தூரம் பயணித்து கிரிக்கெட் பயிற்சி பெற்றுள்ளார். 2009-ம் ஆண்டுமுதல் இந்திய அணியில் இவர் இடம்பெற்றுள்ளார். ஆஸ்திரேலியாவில் நடக்கும் பிக் பாஷ் கிரிக்கெட் போட்டியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியப் பெண் என்பது இவரது மற்றொரு சிறப்பம்சம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...