வாங்கடே மைதானத்தின் பிட்சில் நேற்று தன் பேட்டிங்கால் விராட் கோலி ரசிகர்களை கவர்ந்துகொண்டு இருக்க, மறுபுறம் பார்வையாளர்கள் வரிசையில் தான் அணிந்திருந்த பூப்போட்ட சட்டை மூலமாக ரசிகர்களை கவர்ந்திழுத்தார் அவரது மனைவி அனுஷ்கா. வெள்ளை நிறத்துணியில் மஞ்சள் பூப்போட்ட அந்த சட்டையின் விலை 27,500 ரூபாயாம்.
உலகக் கோப்பையின் அரை இறுதிச் சுற்றுக்கு இங்கிலாந்து அணி வராவிட்டாலும், அந்நாட்டு கால்பந்து அனியின் முன்னாள் கேப்டன் டேவிட் பெக்காம் வாங்கடே மைதானத்துக்கு வந்திருந்தார். வாங்கடே மைதானத்தை அவருக்கு சுற்றிக்காட்டிய சச்சின் டெண்டுல்கர், பல பிரபலங்களை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
கிரிக்கெட் வரலாற்றிலேயே ரசிகர்களின் பெரிய அளவிலான ஆரவாரம் நேற்று பதிவானது. விராட் கோலி அரை சதம் அடித்தபோது ரசிகர்கள் எழுப்பிய ஆரவாரத்தின் ஒலி அளவு 121 டெசிபலாக இருந்தது. அதுதான் உச்சகட்ட ஆரவாரம் என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்த நிலையில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சனின் விக்கெட்டை ஷமி வீழ்த்தியபோது அதைவிட பெரிய ஆரவாரத்தை ரசிகர்கள் எழுப்பினர். அதன் அளவு 123 டெசிபல்.
சுப்மான் கில்லுக்கும் சச்சின் மகள் லாராவுக்கும் மீடியாக்கள் கிட்டத்தட்ட திருமணத்தையே நட்த்திவைத்து விட்டன என்று சொல்ல்லாம். நேற்று முக்கியமான ஷாட்களை சுப்மான் கில் அடித்த பிறகும், அரை சதம் அடித்த பிறகும் டிவி கேமராக்கள் அவர் பக்கம்தான் திரும்பின.
ரஜினிகாந்த், ஜான் ஆபிரஹாம், ரன்பீர் கபூர், வெங்கடேஷ், முகேஷ் அம்பானி என பல பிரபலங்கள் இந்த உலகக் கோப்பை அரை இறுதிப் போட்டியைக் காண வந்திருந்தனர்.
காயம் காரணமாக உலகக் கோப்பையில் இருந்து விலகி இருக்கும் ஹர்திக் பாண்டியா, நேற்று இந்திய ஜெர்ஸியில் போட்டியைக் காண வந்திருந்தார். உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்படாமல் இருக்கும் சாஹலும் போட்டியைக் காண வர, அவருடன் பேசிக்கொண்டு இருந்தார் ஹர்த்திக் பாண்டியா.
நேற்றைய போட்டியில் தனது மனைவி அமர்ந்திருக்கும் இடத்திற்கு அருகில் நின்று பீல்டிங் செய்துகொண்டு இருந்தார் ரவீந்திர ஜடேஜா. அங்கு பீல்டிங் செய்யும் நேரத்தில் 3 கேட்ச்களைப் பிடித்த ஜடேஜா, ஒவ்வொரு முறையும் மனைவியைப் பார்த்து உற்சாகமாக கையசைத்தார்.
இயக்குநர் கவுதம் மேனன் சிறிது நேரத்துக்கு நேற்றைய போட்டியை வர்ணனை செய்தார். அப்போது கிரிக்கெட்டை மையமாக வைத்து தான் ஒரு படம் இயக்கப் போவதாக அவர் தெரிவித்தார். ஒரு நகரத்தில் சிறுவயதில் ஒன்றாக இருந்து பின்னர் ஒன்றாக இந்திய அணிக்குள் நுழையும் 2 நண்பர்களின் கதையாக அது இருக்கும். சச்சின் – வினோத் காம்பிளி ஜோடியின் வாழ்க்கையை உதராணமாகக் கொண்டு இப்படம் இருக்கும் என்று கவுதம் மேனன் கூறினார். தனது மகன் டிஎன்பிஎல் போட்டிகளில் ஆடி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
நியூஸிலாந்துக்கு எதிராக பேட்டிங் செய்யும்போது திடீரென்று தசைப்பிடிப்பால் சுப்மான் கில் பாதிக்கப்பட்டார். சமீபத்தில் தன்னை தாக்கிய டெங்கு காய்ச்சலின் விளைவால் நீண்டநேரம் ஆடும்போது தனக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதாக ஷமி தெரிவித்தார்.