சென்னைக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் உள்ள பெரும்பாலான கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியது. பிரெட், மெழுகுவர்த்தி உள்ளிட்ட பொருட்கள் அவசர கதியில் விற்றுத் தீர்ந்தன. இது தொடர்பாக கவிஞர் மனுஷ்யபுத்ரன் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ள கவிதை
பெருமழை வரக்கூடும் என்கிறார்கள்
கடைகளில் கூட்டம் அலைமோதுகிறது
பதற்றத்துடன் மக்கள்
பொருள்களை வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
நீங்கள் பயத்தை
வெல்லவேண்டும் என்றால்
பொருள்களை வாங்குவதுதான்
ஒரே வழி
இந்த பூமியில் இன்றோடு
எல்லாப் பொருள்களும்
மறைந்துவிடும் என்று நம்பி
எதை எதையோ வாங்கிக்கொண்டிருக்கிறார்கள்
கடை வேகமாக காலியாகிக்கொண்டிருக்கிறது
நேற்றுவரை சீந்துவாரற்ற மெழுகுவர்த்திகள்
திடீரென தங்கமாகின்றன
அழுகிய பழங்கள் விலையேறுகின்றன
ஊழிக்கால “நோவா’வின்
படகைச் செலுத்துகிறவன்
‘ இவ்வளவு பொருள்களையும்
எப்படி ஏற்றிச் செல்வது?
படகு மூழ்கி விடுமே’ என்று புலம்புகிறான்
பதற்றம் என்னையும் தொற்றிக்கொண்டது
ஒரு கடைமுன் என் வாகனத்தை நிறுத்தினேன்
மழை சன்னமாக தொடங்கியிருந்தது
மக்கள் கூட்டமாக
கடைக்குள் நிற்கிறார்கள்
என்னால் உள்ளே நுழைய முடியவில்லை
அது ஏதோ சூறையாடல்
நடக்கும் இடம் போலிருந்தது
நான் என்ன வாங்கவேண்டும் என்பது
மறந்துபோகிறது
திடீரென ஒரு ஆழமான கசப்பு
நெஞ்சில் எழுகிறது
நான் ஏன்
எனக்குத் தேவையான
எல்லாவற்றையும்
நானே வாங்கி வைத்துக்கொள்ளவேண்டும்?
இந்த நகரத்தில்
எனக்கு யாரையெல்லாமோ தெரியும்
இந்த நகரத்திற்கு
நான் எதையெல்லாமோ தந்திருக்கிறேன்
இந்த நகரத்தைப் பற்றி
எவரும் எழுதிடாத சித்திரங்களை
நான்தான் எழுதினேன்
எனக்கு
அடைமழை பெய்யும் ஒரு நாளில்
யாரும் ஒரு கோப்பை
தேநீர் தர மாட்டார்களா?
குடிக்க தண்ணீர் தரமாட்டார்களா?
யாரென்று தெரியாத அண்டைவீட்டான்
எனக்கு ஒருவேளை
உணவு தரமாட்டானா?
அன்பே
மின்சாரமற்ற இரவில்
உன் ஒளிரும் கண்களையே
விளக்காகக் கொண்டு
நீ வந்து நிற்க மாட்டாயா?
நான் இந்த நகரத்தில்
அலைந்து திரியும்
ஒரு பிச்சைக்காரன்
பாலங்களுக்கு கீழ்
தூங்கும் ஒரு பைத்தியம்
என்னை நீங்கள்தான்
கவனித்துக்கொள்ளவேண்டும்
என்மேல் எனக்கு
எந்த பொறுப்பும் இல்லை
அவரவரும்
தன்னைத்தானே கவனித்துக்கொள்ளவேண்டும் என்ற
இந்த உலகை
நான் அவ்வளவு வெறுக்கிறேன்
அதுவே
உண்மை என்றபோதும்கூட
நான் மழையோடு
வெறும் கையாக
வீடு திரும்பினேன்