“தமிழ்நாட்டில் திரும்பவும் ஒரு தேர்தல் நடக்கப் போகுது” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“சட்டமன்ற தேர்தல் 2026-ல் தானே நடக்கும். அதுக்கு முன்னாடி என்ன தேர்தல்?”
“நான் உள்ளாட்சித் தேர்தலைச் சொல்றேன். ஊராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கூடிய சீக்கிரம் நடத்த முதல்வர் ஸ்டாலின் திட்டமிட்டு இருக்காராம். இதுபத்தி மூத்த அமைச்சர்கள்கிட்ட அவர் ஆலோசனை நடத்திட்டு வர்றதா அறிவாலயத்துல பேசிக்கறாங்க.”
“அப்ப திரும்பவும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் களை கட்டுமா?”
“களை கட்டும். ஆனா நாடாளுமன்ற தேர்தல்ல இருந்த மாதிரி இந்த உள்ளாட்சி தேர்தல்ல திமுக தாராளமா இருக்காதுன்னு பேசிக்கறாங்க. காங்கிரஸ் கட்சியில செல்வப் பெருந்தகையும், கார்த்தி சிதம்பரமும் பேசின சில பேச்சுகளால முதல்வர் ஸ்டாலினுக்கு அதிருப்தி. அதே மாதிரி விடுதலைச் சிறுத்தைகள் மேலயும் கொஞ்சம் கடுப்புல இருக்கார். அதனால கூட்டணி கட்சிகளுக்கு திமுக அதிக இடங்களை விட்டுக் கொடுக்கறது கொஞ்சம் கஷ்டம்தான்.”
“கூட்டணி விஷயத்துல ரிஸ்க் எடுக்க தயாராகிட்டாரா முதல்வர்?”
“ஆமாம். அதே மாதிரி ஓட்டுகள் விஷயத்துலயும் கவனம் செலுத்த ஆரம்பிச்சிருக்கார் முதல்வர். ஆசிரியர்கள் தொடர்ந்து ஏதாவது போராட்டம் நடத்திட்டே இருக்கிறதுல முதல்வர் கொஞ்சம் அப்செட். ‘ஒரு காலத்தில் ஆசிரியர்கள் நமக்கு ஆதரவா இருந்தாங்க. இப்ப அவங்க நம்ம மேல கோபமா இருக்காங்க. அவங்களுக்கு என்ன பிரச்சினைன்னு கேட்டு சீக்கிரம் சரி செய்யுங்க’ன்னு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழிக்கு முதல்வர் உத்தரவு போட்டிருக்காராம். அதுமட்டுமில்லை, தபால் ஒட்டுகளை பெரும்பாலும் அரசு ஊழியர்கள்தான் போடறாங்க. இந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு சாதகமா பல தபால் ஓட்டுகள் இருந்திருக்கு. இதுவும் முதல்வரை யோசிக்க வச்சிருக்கு. அரசு ஊழியர்களுக்கு நம்ம மேல எதோ கோபம் இருக்கு. அதை சரி செய்யணும்னு அமைச்சர்கள்கிட்ட முதல்வர் சொல்லிட்டு இருக்காராம்.”
“அதிமுகல தொகுதி வாரியா நடக்கற ஆலோசனைக் கூட்டங்கள் எந்த அளவுல இருக்கு?”
“மாவட்ட செயலாளர், கட்சி நிர்வாகிகள் சந்திப்பை அடுத்து ஒவ்வொரு மாவட்டமா போய் தொண்டர்களை சந்திக்க திட்டம் போட்டிருக்காராம் எடப்பாடி. அவங்கதான் உண்மையான நிலவரத்தைச் சொல்வாங்கன்னு எடப்பாடி நம்பறார்.”
“சட்டமன்ற தேர்தல்ல அதிமுகவோட கூட்டணி அமைக்க டாக்டர் ராமதாஸ் விரும்பறதா ஒரு செய்தியை கேள்விப்பட்டேனே?”
“அதிமுக மூத்த தலைவர்களும் இதுபத்தி எடப்பாடிகிட்ட சொல்லி இருக்காங்க. அதுக்கு எடப்பாடி, “அவர் மகன் அன்புமணி, ஆட்சியில் பங்கு கேட்பார் பரவாயில்லையா’ன்னு அவங்ககிட்ட திருப்பி கேட்டிருக்கார். பாமக விஷயத்துல அவசரப்படாம முடிவு எடுக்கணும்னு எடப்பாடி நினைக்கறார்.”
“பாஜக நியூஸ் ஏதாவது இருக்கா?”
“சமத்துவ மக்கள் கட்சியை கலைச்சிட்டு பாஜகல ஐக்கியமான சரத்குமார், இப்ப அந்த கட்சியில மாநிலத் தலைவர் பதவியை எதிர்பார்க்கிறார். இந்த விஷயத்துல தனக்காக சிபாரிசு பண்ணச்சொல்லி அண்ணாமலைகிட்டயே அவர் கேட்டதுதான் ஹைலைட்.”
“அதுக்கு அண்ணாமலையோட ரியாக்ஷன் என்ன?”
“சரத்குமார் இப்படி கேட்ட பிறகு, அவர் போன் பண்ணா அண்ணாமலை லைன்லயே வர்றது இல்லையாம்.”
“இப்ப சரத்குமார் என்ன செய்றார்?”
“டெல்லி தலைமைகிட்ட பேசிக்கிட்டு இருக்கார். தனக்கு தென் மாவட்டங்கள்ல நல்ல செல்வாக்கு இருக்கு. என் கிட்ட பதவி கொடுத்தா நான் தென் மாவட்டங்கள்லயும் கட்சியை வளர்ப்பேன்னு உறுதி சொல்லியிருக்கிறார்”
“டெல்லி தலைமை என்ன சொல்லிச்சாம்?”
“ஏற்கனவே இவர் சமூகத்தை சேர்ந்த தமிழிசைக்கு தலைவர் பதவி கொடுத்தாச்சு அதுக்கு முன்னாடி பொன்னார் தலைவராக இருந்தார். திருப்பியும் தென் மாவட்டங்களுக்கு தலைவர் பதவி போச்சுனா நல்லாருக்காதுனு நினைக்கிறாங்க போல. இன்னொரு பிரச்சினையும் இருக்கு தென் மாவட்டத்துக்குதான் தலைவர் பதவினா நயினார் நாகேந்திரனும் இருக்கார். அவர் வேற சமூகம். அவருக்கு கொடுக்கலாம்னும் யோசிக்கிறாங்களாம்”
“அப்போ சரத்குமாருக்கு சான்ஸ் இல்லையா?”
”சான்ஸ் இல்லை. ராத்திரி 2 மணிக்கு மனைவியை எழுப்பி யோசனைக் கேக்குறதுக்கு முன்னாடி இதையெல்லாம் யோசிச்சிருக்கணும்” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.