முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன், சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்று காலை காலமானார். மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
யார் இந்த சாந்தன்?
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக விசாரணை நடத்திய அதிகாரிகள் ராஜீவ் காந்தி கொலையில் சம்பந்தப்பட்டதாக கூறி முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் மற்றும் ரவிச்சந்திரன் ஆகியோரை கைது செய்தனர். இதில் சாந்தன் இலங்கையைச் சேர்ந்தவர். ராஜீவ் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராசனுடன் சாந்தன் நெருக்கமாக இருந்ததாகவும் அவர் புலிகள் அமைப்பின் புலனாய்வுப் பிரிவின் உறுப்பினர் என்றும் கூறப்பட்டது. மேலும் அவர் சென்னையில் உள்ள இன்ஜினியரிங் டெக்னாலஜி நிறுவனத்தில் படித்ததாகவும், அதற்க்கான செலவை விடுதலைப்புலிகள் ஏற்றுக்கொண்டாதாகவும் அப்போது விசாரணை அதிகாரிகளால் கூறப்பட்டது.
ஆனால், அடையாள மாறுபாட்டின் காரணமாகவே கைதுசெய்யப்பட்டதாக சாந்தன் தொடர்ந்து கூறிவந்தார்.
தூக்கு தண்டனையும், விடுதலையும்:
ராஜீவ் கொலையாளிகள் 7 பேருக்கும் முதலில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தங்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து அவர்கள் பல்வேறு சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அவர்களின் தூக்கு தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. பின்னர் நீண்ட காலம் சிறையில் இருந்த அவர்கள் 7 பேரையும் விடுவிக்க வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காத காரணத்தால் அவர்களின் சிறை வாழ்க்கை தொடர்ந்தது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், 30 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
உடல் நிலை பாதிப்பு:
விடுதலைக்கு பிறகு நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் இந்தியக் குடிமக்கள் என்பதால் அவரவர் வீடுகளுக்குச் சென்றனர். முருகன், ஜெயக்குமார், சாந்தன், ராபர்ட் பயஸ் ஆகியோர் இலங்கை குடிமக்கள் என்பதால் அவர்கள் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். கடந்த ஜனவரி மாதம் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதையடுத்து உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இந்த சூழலில் அவர் இன்று காலமானார். விடுதலையான பிறகு தன் சொந்த நாட்டுக்கு சென்று அம்மாவைப் பார்க்கவேண்டும் என்பது சாந்தனின் விருப்பமாக இருந்தது. ஆனால் அந்த விருப்பம் நிறைவேறாமலேயே அவர் காலமானார்.
மறைவுக்கான காரணம்:
சாந்தன் மறைவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முதல்வரும், மருத்துவருமான தேரணி ராஜன், “ கல்லீரல் செயலிழப்பு காரணமாக சாந்தனுக்கு கல்லீரல் சிகிச்சை பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அந்த துறையின் தலைவரும், மருத்துவருமான பிரேம்குமார் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். அவருக்கு கல்லீரல் செயலிழப்பு ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து கொள்ள முயற்சித்தோம். அதன் காரணமாக பயாப்சி சோதனை மேற்கொள்ள முயன்றோம். அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.
கிரிப்டோஜெனிக் சிரோசிஸ் பாதிப்பு காரணமாக சில சமயங்களில் சுயநினைவு குன்றி, இயல்பு நிலைக்கு திரும்புவார். அதன் காரணமாக தீவிர கண்காணிப்பில் இருந்தார். அவருக்கு நேற்று இரவு உடல்நலத்தில் பின்னடைவு ஏற்பட்டது. சுயநினைவை இழந்தார். செயற்கை சுவாசம் பொருத்தி மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில், இன்று அதிகாலை அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. தொடர்ந்து சிபிஆர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இருந்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை உயிரிழந்தார்” என்றார்.
எம்பாமிங் செய்யப்படும் உடல்:
சாந்தன் விடுதலையான பிறகு, அவரை இலங்கைக்கு அனுப்ப முயற்சிகளை மேற்கொள்ளுமாறு அவரது தாயார் மகேஸ்வரி தொடர்ந்து கோரிக்கை விடுத்துவந்தார். இதுதொடர்பாக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறிதரனும் கோரிக்கை வைத்திருந்தார்.
சாந்தனின் தாயார் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள், ஜனவரி 30-ஆம் தேதியன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து, சாந்தனை இலங்கைக்கு வரவழைக்க ஏற்பாடுகளைச் செய்யுமாறு கோரிக்கை விடுத்தனர்.
சாந்தனின் குடும்பத்தினர் யாழ் மாவட்டம் உடுப்பிட்டியில் வசித்துவருகின்றனர். சாந்தனின் உடலை ‘எம்பாமிங்’ செய்து இலங்கைக்கு அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டுவருவதாக வழக்கறிஞர் புகழேந்தி தெரிவித்தார்.