ஒட்டுமொத்த அரசியல் அரங்கத்தையும் இப்போது அதிர வைத்துக் கொண்டிருக்கும் ஐந்தெழுத்து வார்த்தை சனாதனம்!
‘திராவிடத்தை ஒழிப்போம்’ என தமிழ்த் தேசியர்கள் சிலர் அண்மையில் மாநாடு நடத்தப்போக, அது நடத்தவிடாமல் முடக்கப்பட்டது. ‘திராவிடத்தை ஒழிப்போம்’ என்ற இந்த மாநாட்டின் எதிரொலியாகத்தான், தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி பங்கேற்ற சனாதன ஒழிப்பு மாநாடு நடத்தப்பட்டதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பரபரப்பு இங்கிருந்துதான் பற்றிக் கொண்டதாக பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால், வடலூரில் நடந்த வள்ளலாரின் 200ஆவது ஜெயந்தி விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, ‘சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம் வள்ளலார்தான்’ என்று பேசியபோதே இதற்கான விதை தூவப்பட்டு விட்டது. சனாதனம் தொடர்பான தற்போதைய சர்ச்சையின் ஆரம்பப் பொறியாக இதைத்தான் சொல்ல வேண்டும்.
சனாதன ஒழிப்பு மாநாட்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உதிர்த்த கருத்துகள், இந்திய அளவில் பலத்த அதிர்வுகளை ஏற்படுத்தி இருக்கிறது. ‘தேசிய அளவில் சி.பி.எம் போன்ற கட்சிகள் செய்ய வேண்டிய வேலையை உதயநிதி செய்திருக்கிறார்’ என்ற பாராட்டுகள் ஒருபுறம் குவிய, மறுபுறம் உதயநிதி மீது டெல்லியில் நான்கு பிரிவுகளில் வழக்கு பாய்ந்துள்ளது.
அதேநேரம், ‘அரசியல் கத்துக்குட்டி ஒருவரது பேச்சு நாட்டில் இந்த அளவுக்கு அதிர்வலைகளை ஏற்படுத்து விட்டதே’ என்று சிலர் அங்கலாய்க்கவும் தவறவில்லை.
‘கும்மிடிப்பூண்டி தாண்டினால் தி.மு.க. எங்கே?’ என்று கேட்டீர்களே? இப்போது அமித்ஷா கதறுகிறாரே? உதயநிதியின் பேச்சு மத்திய பிரதேசத்திலும், உத்தரப்பிரதேசத்திலும் எதிரொலிக்கிறதே’ என்று சிலர் பாராட்டுப் பத்திரம் வாசிக்கவும் தயங்கவில்லை.
மத்திய அமைச்சர் அமித்ஷா அண்மையில் பேசிய பேச்சும் அப்படித்தான் இருந்தது. ‘இந்தியா கூட்டணியினர் சனாதன தர்மத்தை அழிக்கப் பார்க்கிறார்கள். அவர்கள் எந்த எல்லைக்கும் செல்வார்கள்’ என அண்மையில் காரசாரமாக சாடியிருந்தார் அமித்ஷா.
‘சனாதனத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் உதயநிதி இனப்படுகொலைக்கு முயற்சிக்கிறார்’ என்று உதயநிதியின் இந்த பேச்சை ஒருபக்கம் திசைதிருப்பும் வேலையும் நடந்தது.
‘அட என்னங்க இது? திராவிடத்தை ஒழிப்போம் என்றால் திராவிடர்களை கொலை செய்யப்போகிறார்கள் என்று அர்த்தமா? காங்கிரஸ் இல்லாத இந்தியா என்றால் காங்கிரஸ்காரர்களை இல்லாமல் ஆக்கப் போகிறார்கள் என்று அர்த்தமா? ஆணாதிக்கத்தை ஒழிப்போம் என்றால் ஆண்களை கொலை செய்ய வேண்டும் என்று அர்த்தமா?’ என அமைச்சர் உதயநிதி இந்த ‘ஜெனோசைட்’ குற்றச்சாட்டுக்கு அழகாக பதிலும் அளித்துவிட்டார்.
‘அமைச்சர் உதயநிதியின் பேச்சு இப்படி வேறுபக்கமாகத் திசை மாற்றப்பட்ட விதம் புதியதே அல்ல. தர்க்க வாதத்தில் அதை ‘சாமான்ய சள’ என்பார்கள்’ என, தேவிபிரசாத் சட்டோபாத்யா அவரது நூல்குறிப்பைச் சுட்டிக்காட்டி சு.பொ.அகத்தியலிங்கம் பதிவிட்டிருக்கிறார். ‘கருத்துகளை இப்படி திசைமாற்றி திரிபுவாதம் செய்வதன் பெயர்தான் சனாதனம்’ என்ற ஏசல்களும் ஒருபுறம் எகிறி வருகிறது.
சரி. சனாதனம் என்பதுதான் என்ன?
‘சூத்திரனுக்கு எதை கொடுத்தாலும் கல்வியைக் கொடுக்காதே, பிராமணர்களுக்கு மட்டுமே கல்வி. தமிழ் நீஷ பாஷை சமஸ்கிருதம் தெய்வ பாஷை, கருவறைக்குள் குறிப்பிட்ட சாராரே நுழைய முடியும், சாதி, மதம் என்ற பெயரில் மனிதர்களைப் பிரித்து வைக்க வேண்டும், தீண்டாமையை வேண்டும், பெண் உரிமை கூடாது’
இவைதான் சனாதனத்தின் கல்யாண குணங்களாகக் கருதப்படுகின்றன.
‘நான்கு வருணங்களை நானே படைத்தேன். அதை மாற்ற முடியாது’ என கடவுள் ஒருபக்கம் சொல்ல, ‘கடவுள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவர்’ என்ற கோட்பாடும் சனாதனத்தில் இருப்பது ஓர் அழகு!
‘நெருப்பு மேல்நோக்கி சுடர்விடுவது போலவும், நீர் கீழ்நோக்கி ஓடுவது போலவும் மாறாத இயற்கைவிதிகளைக் கொண்டதுதான் சனாதனம்’ என்று சிலர் சொல்ல, ‘எப்போதும் மாறாத இயற்கை விதிகள் என்று எதுவுமே கிடையாது’ என்கிறார் எழுத்தாளர் ஆதவன் தீட்சண்யா.
இதேவேளையில், ‘சனாதானம் என்பது ஆதி அந்தமில்லாத நிலையான தர்மம். சனாதனம் கிணற்றுத் தவளையல்ல. அது கடல்போன்றது’ என அண்ணல் காந்தியடிகள் 1947ஆம் ஆண்டு ஹரிஜன் இதழில் எழுதியதை, சனாதன ஆதரவாளர்கள் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.
அதுபோல, காஞ்சி மகாப்பெரியவர் சந்திரசேகரேந்திர சுவாமிகள், ‘வருண தர்மமே அனைத்தும். அனைத்து தர்மங்களிலும் முக்கியமானது வர்ண தர்மமே’ என்று தெய்வத்தின் குரல் நூலில் குறிப்பிட்டதையும் சிலர் காட்டுகிறார்கள்.
‘சனாதனம் என்பது இந்துக்களின் கலாச்சாரம், பண்பாடு. அது அறிவியல் ரீதியானது, அறிவுபூர்வமான ஒன்று’ என்ற பார்வையும், சனாதன ஆதரவாளர்களிடம் இருக்கிறது. ‘சனாதனத்துக்குள் அடங்கிய வர்ணாசிரமம் என்பது நெறிமுறையான வாழ்க்கை. அதைத் தவிர்க்க முடியாது. அவரவர் பாதையில் அவரவர் பயணித்தால் அமைதியாக வாழ முடியும்’ என்பது மாதிரியான பார்வையும் சனாதன ஆதரவாளர்களிடம் இருக்கிறது.
அதேவேளையில், ‘இவர்கள் பிராமணீயம் என்று நேரடியாகச் சொல்லாமல் அதைத்தான் சனாதனம் என்று சொல்கிறார்கள். சனாதனம்தான் இந்துமதம் என்றால் இந்து மதத்தின் பெயரை சனாதன மதம் என்றும மாற்றிக் கொள்ள வேண்டியதுதானே?’ என்ற கேள்வியும் ஒருபுறம் இருக்கிறது. இதற்கு எதிர்க்கருத்தாக, ‘மதமும் சனாதனமும் ஒன்றல்ல’ என்று ஆளுநர் ஆர்.என்.ரவி அண்மையில் கூறியிருக்கிறார்.
‘சனாதனம் ஆறாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது. மனு ஸ்மிர்தியும், வர்ணாசிரம தர்மமும் மூவாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தவை. இது தெரியாமல் ஈ.வெ.ரா இவற்றைக் குழப்பி விட்டார்’ என்ற குற்றச்சாட்டும் இருக்கிறது.
‘சனாதனத்தில் நம்பிக்கை கொண்ட துர்காவின் சிபாரிசால்தான் அவரது மகன் உதயநிதி அமைச்சர் பதவி பெற்றார். அந்த உதயநிதி இப்போது சனாதனத்தை ஒழிப்பேன் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. வீட்டிலேயே சனாதனத்தை ஒழிக்க முடியாதவர்களால் நாட்டில் எப்படி ஒழிக்க முடியும்?
பொதுக்கோயில், பொதுவீதிகளில் ஒருவரை நடமாட விடாமல் செய்வது சனாதனம் என்றால், பொதுத்தொகுதிக்கு நீங்கள் ஆசைப்படலாமா என்று கேட்பது சனாதனம் இல்லையா?’ என்பது மாதிரியான கேள்விகளும் ஒருபக்கம் எகிறுகின்றன.
‘சனாதனம் என்பது சமஸ்கிருதம், அதை ஒழிக்க வேண்டும் என்றால், உதயநிதி, இன்பநிதி, உதய சூரியன் என்பதெல்லாம் கூட சமஸ்கிருதம்தானே? அவற்றையும் ஒழிக்க வேண்டுமா?’ என்ற எள்ளல்களும் ஒருபக்கம் கேட்கிறது.
சனாதனம் என்றால் என்ன என்ற கேள்வி சதிராடுகிற இந்த வேளையில், அதற்கு கண்முன் விளக்கம்போல் நடந்து முடிந்து விட்டது ஒரு நிகழ்ச்சி.
ஆலயம் ஒன்றில், ரயில்வே அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவ் சாமியின் அருகில் இருந்து கும்பிட, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தடுப்புக்கு அந்தப்பக்கம் நிறுத்தி வைக்கப்பட்ட நிகழ்ச்சி அது. ‘சனாதனத்துக்கு இதைவிட அருமையான வேறு விளக்கம் என்னங்க வேண்டும்?’ என்கிறார்கள் சனாதன எதிர்ப்பாளர்கள்.
அருட்பெரும் ஜோதி வள்ளலாரை சனாதனத்தின் உச்சகட்ட நட்சத்திரம் என்று ஆளுநர் வருணித்திருக்கும் அதேவேளையில், ‘வள்ளலார் சிறுதெய்வ வழிபாட்டையும், பலியிடல்களையும் எதிர்த்தவர்தான். அதற்காக அவரை சனாதன வாதி என்று எப்படிச் சொல்ல முடியும்? எல்லா உயிரையும் தன்னுயிர் போலே மதிக்க வேண்டும் என்றவர் வள்ளலார், வருணாசிரமம் என்னும் மயக்கமும் சாய்ந்தது’ என்றவர் வள்ளலார். அவர் எப்படி சனாதனவாதி ஆவார் என்ற கேள்வியும் இருக்கிறது.
‘சனாதனம் என்பது கண்களுக்குத் தெரியாத மாயக் கயிறு. அந்த கயிறு, சனாதனம் என்ற வார்த்தையை கேள்விப்படாத மனிதர்களைக் கூட கட்டிவைத்து நூல்பாவை போல ஆட்டி வைக்கிறது. ஆட்சி அதிகாரம் என்ற அரியணையின் மீது சனாதானம் பாந்தமாக அமர்ந்துவிட்டது. அதிகாரம் நீங்கினால் மட்டுமே சனாதானாம் நீங்குவதற்கான அறிகுறிகள் தென்படும்’ என்கிறார்கள் சமூக அரசியல் நோக்கர்கள்.