’ஃபேமிலி மேன் 2’ என்ற ஒரு வெப் சிரீஸ். அதில் இலங்கைப் பெண்ணாக, ஒரு போராளியாக அசர வைத்திருந்தார் சமந்தா.
அதுவரையில் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் வழக்கமான ஒரு க்ளாமர் ஹீரோயினாகவே அடையாளம் காணப்பட்ட சமந்தா, ‘ஃபேமிலி மேன் 2’ பிறகு இந்தியா முழுவதிலும் ஒரு பெர்ஃபார்மராக கொண்டாடப்பட்டார்.
ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் உண்டானது சறுக்கல். காதல் கணவர் நாக சைதன்யாவுடனான உறவில் விரிசல் சமந்தாவை மீண்டும் லைம்லைட்டில் வைத்திருந்தது.
அடுத்து ’புஷ்பா 2’ படத்தில் ‘ஊ சொல்றீயா மாமா’ பாடலில் அவர் ஆடிய அதிரிபுதிரி டான்ஸ் மூவ்மெண்ட்கள் இளசுகளிடையேயும், முன்னாள் இளைஞர்களிடையேயும் வைரலானது.
இப்படி பிரச்சினையோ அல்லது பாப்புலாரிட்டியோ… இந்த இரண்டில் ஏதோ ஒன்றில் தொடர்ந்து சமந்தா பரபரப்பான டாபிக்காக இருந்தார்.
ஆனால் 2021, 2022 இந்த இரண்டு ஆண்டுகளும் சமந்தாவை ரொம்பவே மன அழுத்தத்தில் தள்ளிவிட்டன. முதலில் டைவர்ஸ் என்ற மன வேதனை. அடுத்து ஆட்டோ இம்யூன் பிரச்சினையான மயோசிடிஸ் மூலமான உடல் வேதனை.
மன வேதனையிலும் சிரித்து கொண்டு தன்னை அடையாளம் காட்டியவரை இந்த உடல் வேதனை முடக்கிப் போட்டிருக்கிறது.
சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற அவரது ‘யசோதா’ படத்தின் ப்ரமோஷனுக்கு கூட சமந்தா எங்கும் வெளியே வரவில்லை.
ஆரம்பத்தில் அமெரிக்காவுக்குச் சென்று மூன்று வாரங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெற்றார். அந்த சிகிச்சையினால் எந்த பலனும் இல்லை. அதனால் ஹைதராபாத்திற்கு வந்தவர் இங்கு ஆயுர்வேத சிகிச்சையில் இருக்கிறார் என சமந்தாவுக்கு நெருக்கமான வட்டாரம் கூறுகிறது.
எனக்கு மயோசிடிஸ் பிரச்சினை இருக்கிறது. நான் இன்னும் இறந்து போகவில்லை. இப்படி சமந்தா உருக்கமாக சொன்னதில் இருந்தே, புதிய வாய்ப்புகள் ஏதும் இல்லாமல் கால்ஷீட்டை குறிக்கும் டைரியில் எதுவும் எழுதப்படாமல் வெற்றிடமாகி போயிருந்தன என்று சொல்லப்படுகிறது.
ஆனாலும் ஏற்கனவே கமிட்டாகி படங்கள் இவரது வருகைக்காக காத்திருக்கின்றன. கொஞ்ச நாட்கள் ஓய்வில் இருந்த பிறகு சமந்தா ஷூட்டிங்கில் கலந்து கொள்வார் என்று சமந்தா தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் இன்னும் சமந்தாவின் உடல் நலம் எதிர்பார்த்த அளவிற்கு தேறவில்லை. அதனால் அவர் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள இப்போது வாய்ப்பில்லை. அதனால் சமந்தா தற்காலிமாக ஒரு நீண்ட ப்ரேக் எடுக்க இருக்கிறார். இதன் காரணமாக அவர் நடிக்கவிருந்த படங்களுக்கு வேறு ஹீரோயின்களை கமிட் செய்யலாமா என தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் யோசிக்கிறார்கள்.
குறிப்பாக ஹிந்தியில் அக்ஷய் குமாருடன் நடிப்பதற்கு இவர் கமிட்டாகி இருந்தார். இப்படத்தை பிரபல இயக்குநர் கரன் ஜோஹர் தயாரிக்க இருக்கிறார். இப்படத்தில் நடிப்பதை விளம்பரப்படுத்தும் நோக்கில், கரன் ஜோஹரின் ’காஃபி வித் கரன்’ ஷோவில் அக்ஷய் குமாருடன் கலந்து கொண்டு நடனமாடி எல்லோருடைய கவனத்தையும் ஈர்த்தார் சமந்தா. இப்பொழுது அந்தப் பட வாய்ப்பும் சமந்தா கை நழுவி போக வாய்ப்பிருக்கிறது என்ற கிசுகிசு கிளம்பியிருக்கிறது.
விஜய் தேவரக்கொண்டாவுடன் நடித்திருக்கும் குஷி படம் சமந்தாவிற்காக காத்திருக்கிறது. சமந்தா ஷூட்டிங்கில் சேர்வதற்கு இன்னும் நாட்கள் ஆகும் என்பதால் விஜய் தேவரகொண்டாவும் தனது அடுத்தப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கிளம்பிவிட்டார்.
இதனால் சமந்தா சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட இருப்பதாகவும், உடல் நலம் தேறிய பிறகே நடிப்பில் கவனம் செலுத்துவார் என்றும் பேச்சு அடிப்படுகிறது.