‘கிரிக்கெட் கடவுள்’ என்று இந்திய ரசிகர்களால் அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் சொத்து மதிப்பு 1,100 கோடி ரூபாய். கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் விளம்பரப் படங்கள் மூலமாக கோடிகளாய் குவித்துக்கொண்டிருக்கிறார் . இப்படி கோடிகளில் குவித்துக்கொண்டிருக்கும் சச்சின் டெண்டுல்கர் சொந்தமாக வைத்துள்ள அதிக விலைமதிப்புள்ள பொருட்களைப் பற்றி தெரிந்துகொள்வோம்…
பாந்த்ரா இல்லம்
மும்பையில் கோடீஸ்வரர்கள் அதிகமாக வசிக்கும் பாந்த்ரா பகுதியில்தான் சச்சினின் பங்களா உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன் 39 கோடி ரூபாய்க்கு இந்த பங்களாவை வாங்கிய சச்சின் டெண்டுல்கர், மேற்கொண்டு 45 கோடி ரூபாயைச் செலவுசெய்து இந்த பங்களாவை அழகுபடுத்தியுள்ளார். இதைத்தவிர மும்பையில் 7.2 கோடி ரூபாய் மதிப்பில் ஒரு அபார்ட்மெண்டையும் சச்சின் வைத்துள்ளார்.
260 கோடி ரூபாய் விமானம்
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் பல்வேறு வர்த்தக சந்திப்புகளுக்காகவும், நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காகவும் அடிக்கடி விமானப் பயணங்களை மேற்கொள்வது சச்சினின் வழக்கம். இதற்காகவே 260 கோடி ரூபாய்க்கு சொந்தமாக விமானத்தை வாங்கி வைத்துள்ளார் சச்சின். சமயங்களில் தனது நண்பர்களான சில பிரபலங்களையும் இந்த விமானத்தில் ஏற்றிச் சென்றுள்ளார்.
ரூ.15 கோடியில் 10 கார்கள்
குறிப்பிட்ட சில நிகழ்ச்சிகளுக்கு செல்வதற்கு வெவ்வேறு வகை கார்களை பயன்படுத்துவது சச்சினின் வழக்கம். இது தவிர தனது குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனி கார்களை அவர் வாங்கிக் கொடுத்துள்ளார். இப்படி சச்சினிடம் மொத்தமாக இருக்கும் கார்களின் எண்ணிக்கை 10. அவற்றின் மொத்த மதிப்பு 15 கோடி ரூபாய்.ஆனால் வீடில் பல பல கார்கள் இருந்தாலும் அவருக்கு மிகவும் பிடித்ததும், அதிக விலைமதிப்புடையதும் பிஎம்டபிள்யூ ஐ8 கார்தான். இந்தக் காரின் மதிப்பு 2.62 கோடி ரூபாய்.
கிரிக்கெட் பேட்
சச்சின் என்றதும் நம் அனைவரின் நினைவுக்கும் வரும் விஷயம் அவரது கிரிக்கெட் பேட்தான். சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை அடித்த சச்சினின் பேட்டின் விலை என்ன என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அனைவருக்கும் இருக்கலாம். அப்படி கேட்பவர்களுக்காக ஒரு தகவல். ஒரு கிரிக்கெட் பேட்டின் மதிப்பு அதன் விலையில் இல்லை. அதை வைத்து ஒரு வீரர் குவிக்கும் ரன்களில்தான் இருக்கிறது. அந்த வகையில் சில ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பேட்டை காச்ட்லியான பேட்டாக மாற்றியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். அவர் பயன்படுத்திய கிரிக்கெட் பேட் ஒன்று 2 ஆண்டுகளுக்கு முன் 42 லட்ச ரூபாய்க்கு ஏலம் போயுள்ளது.
42 லட்ச ரூபாய் கடிகாரம்
நேரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது சச்சினின் வழக்கம். அதே முக்கியத்துவத்தை தான் அணிந்திருக்கும் கைக்கடிகாரத்துக்கும் கொடுப்பார். இன்றைய இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு இணையாக ஃபேஷனில் அதிக அக்கறை காட்டும் சச்சின் டெண்டுல்கர் Royal oak perpetual calender வகை கைக்கடிகாரத்தை விரும்பி அணிவார். இந்த கடிகாரத்தின் மதிப்பு 42.31 லட்ச ரூபாய்.