ஒரு மொழியில் படமெடுத்துவிட்டு, பிறகு இதர தென்னிந்திய மொழிகளிலும் ஹிந்தியிலும் டப் செய்துவிட்டு, பேன் – இந்தியா [Pan- India] என்று படத்திற்கு பிரம்மாண்டமான விளம்பரம் கொடுப்பதுதான் இப்போதைய சினிமா ட்ரெண்ட். ஒடிடி தளங்கள் மூலம் அனைத்து மொழி படங்களையும் மக்கள் ரசித்துப் பார்க்க ஆரம்பித்திருப்பதால் இந்த ‘பேன் இந்தியா’ பில்டப்களுக்கு ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
சமீபத்தில் வெளியான ’RRR’, வெளியாக இருக்கும் ’Beast’, ’KGF-2’ ஆகிய படங்கள் இதற்கு உதாரணம்.
பான் இந்தியா என்ற பிம்பத்தை கட்டமைத்துவிட்டு அரசுகளை நாடுவது இவர்களின் அடுத்த இலக்கு. பல நூறு கோடிகளில் பட்ஜெட், பிரம்மாண்டமான தயாரிப்பு, கடின உழைப்பு என்று இன்னும் பல அம்சங்களை பட்டியல் போட்டுக்கொண்டு, அந்தந்த மாநில அரசுகளை படக்குழுவினர் சந்தித்து சலுகைகள் கேட்பது இப்போது வாடிக்கையாகிவிட்டது.
‘RRR’ படத்திற்காக எஸ்.எஸ். ராஜமெளலி மற்றும் படக்குழுவினருடன் சென்று ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியைச் சந்தித்தார். இப்போது அதே பாணியில் ‘கேஜிஎஃப்’ படக்குழுவினரும் ஆந்திர முதல்வர் மற்றும் தெலுங்கானா முதல்வரைச் சந்திக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
வழக்கமான சந்திப்பு, உரையாடல்களுக்குப் பிறகு திரையரங்குகளில் டிக்கெட் விலையை ஏற்றி விற்பதற்கு அனுமதி கேட்டுதான் இந்த சந்திப்பு.
ஆந்திராவைப் பொறுத்தவரை பெரிய பட்ஜெட் படங்களுக்கு சிறப்பு சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிலும் ஒரு படத்தின் 20% காட்சிகளை ஆந்திராவில் ஷூட் செய்திருந்தால்தான் அந்த சலுகை என்று நிபந்தனையும் வைக்கப்பட்டிருக்கிறது.
‘கேஜிஎஃப்-2’ படப்பிடிப்பு ஆந்திராவில் நடத்தப்படவில்லை இருந்தாலும் கல்லை எறிவோம், விழுந்தால் மாங்காய், இல்லையென்றால் கல்தானே; போனால் போகிறது என்ற திட்டத்துடன் ‘கேஜிஎஃப்-2’ குழு முதல்வரைச் சந்திப்பதில் மும்முரமாக இருக்கிறது என்கிறார்கள் ஆந்திர திரை வட்டாரம்.
டிக்கெட் விலையை உயர்த்துவதால் தயாரிப்பாளர்களுக்கு மட்டும்தான் லாபம்.
அன்றாட அத்தியாவசிய பொருட்களின் விலை, பெட்ரோல், டீசல் விலை ராக்கெட் வேகத்தில் எகிறி வரும் போது திரைப்பட டிக்கெட் விலை உயர்வு ரசிகர்களுக்கு கொடுக்கப்படும் நெருக்கடி மட்டுமே.
இதனால் மக்களுக்கோ சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கோ எந்தவிதமான லாபமும், இல்லை; பலனும் இல்லை என்பதை அரசுகளும் உணர்ந்திருக்கின்றன. இதனால்தான் ஆர்.ஆர்.ஆர்க்கு இந்த சலுகை மறுக்கப்பட்டது. இப்போது ‘கேஜிஎஃப் 2’ அந்த வழியில் பயணித்து வெற்றி காண விரும்புகிறது.
‘ஆர் ஆர் ஆர்’ சாதிக்க முடியாததை ‘கேஜிஎஃப் 2’ சாதிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.