மதுரையை சேர்ந்த ரோபோ சங்கர் காமராசர் பல்கலைக்கழத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றவர்.
பள்ளி, கல்லூரி நாட்களிலேயே மிமிக்ரி உள்ளிட்ட திறமைகளை வளர்த்துக் கொண்ட சங்கர், சுற்றுவட்டார கிராமங்களில் திருவிழாக்களில் நடக்கும் மேடை நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று வந்தார்.
கட்டுமஸ்தான உடலில் வெள்ளை நிற சாயம் பூசிக் கொண்டு ரோபோ போல நடனமாடியதால் இவருக்கு ரோபோ சங்கர் என்ற பெயர் கிடைத்தது.
இதுபோன்ற மேடை கலைஞர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது விஜய் டிவியில் தொடங்கப்பட்ட ‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் மூலம் ரோபோ சங்கர் மட்டுமின்றி தற்போது மதுரை முத்து, சிவகார்த்திகேயன் போன்றோரும் பிரபலமடைந்தனர். இந்த நிகழ்ச்சியில் சுட்டி அரவிந்துடன் சேர்ந்து ஜோடியாகத்தான் ரோபோ சங்கர் தோன்றுவார். ‘ஒரு கிளி உருகுது’ பாடலுக்கு இருவரும் சேர்ந்து 80-களின் நடனத்தை ரீ-கிரியேட் செய்தது அப்போது பெரும் வரவேற்பை பெற்றது.
பின்னர் அதே விஜய் டிவியில் சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய ‘அது இது எது’ நிகழ்ச்சியில் ‘சிரிச்சா போச்சு’ என்ற சுற்றில் தொடர்ந்து ரோபோ சங்கரின் நகைச்சுவை இடம்பெறும். இந்த நிகழ்ச்சியை தனது நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தும் இடமாக சிறப்பாக பயன்படுத்திக் கொண்டார் ரோபோ சங்கர். இதில் ஒரு எபிசோடில் அவர் குடிகாரரைப் போல ஆடும் நடனம், மற்றொரு எபிசோடில் விஜயகாந்த் போல செய்யும் மிமிக்ரி போன்றவை பிரபலமாகின. குறிப்பாக விஜயகாந்த், எம்ஜிஆர், கமல்ஹாசன் போன்றோரின் உடல்மொழியுடன் கூடிய மிமிக்ரியை அச்சுஅசலாக செய்வார்.
ஒருபக்கம் டிவி நிகழ்ச்சிகள், மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தாலும் 90-களின் இறுதி முதலே சின்ன சின்ன ரோல்களில் திரைப்படங்களில் தலைகாட்டி வந்தார் ரோபோ சங்கர். எனினும் பார்வையாளர்களின் மனதில் முகம் பதியும்படியான கதாபாத்திரங்கள் எதுவும் அவருக்கு கிடைக்கவில்லை. இப்படியான சூழலில் ரோபோ சங்கரின் நகைச்சுவை திறனை கவனித்த இயக்குநர் கோகுல் தன்னுடைய முதல் படமாக ‘ரௌத்திரத்தில்’ வாய்ப்பு கொடுத்தார். எனினும் அவரது காட்சிகள் படத்தில் இடம்பெறவில்லை.
இதன் பிறகும் தொடர்ந்து கூட்டத்தோடு கூட்டமாக நிற்கும் கதாபாத்திரங்களே கிடைத்து வந்த நிலையில், அதே கோகுல் தன்னுடைய அடுத்த படமான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வில் படம் முழுக்க பெரும்பாலான காட்சிகளில் வரும் ஒரு கதாபாத்திரத்தை ரோபோ சங்கருக்கு கொடுத்தார். ‘சவுண்டு சங்கர்’ என்ற அந்த கதாபாத்திரத்தை அவரும் சிறப்பாகவே செய்திருந்தார். இப்படத்துக்கு பிறகே சின்ன ரோல்கள் அல்லாமல் பேர் சொல்லும்படியான கதாபாத்திரங்கள் அவருக்கு கிடைக்கத் தொடங்கின.
‘வாயை மூடி பேசவும்’ படத்தில் ‘மட்டை ரவி’ என்ற சின்ன கேரக்டரில் தனி கவனம் ஈர்த்தார். குறிப்பாக, தனுஷ் நடித்த ‘மாரி’ படத்தில் படம் முழுக்க அவருடனே வரும் கதாபாத்திரத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார். இதில் அவர் பேசும் மாடுலேஷனும், வசனங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.
அதன் பிறகு விஷ்ணு விஷால் நடித்த ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ படத்தில் அவர் நடித்த நகைச்சுவை காட்சிகள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமாகின. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸுக்கு முன்பாக ‘அன்னைக்கு காலைல ஆறு மணி இருக்கும்’ என்ற வசனத்தை திரும்ப திரும்ப பேசி ரவி மரியா கும்பலை கதற விடும் காட்சிக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது.
இப்படத்துக்குப் பிறகு முக்கிய நகைச்சுவை கதாபாத்திரங்கள் ரோபோ சங்கரை தேடி வந்தன. சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’, ‘ஹீரோ’ விஷாலின் ‘இரும்புத்திரை’, ‘மாரி 2’,அஜித்தின் ‘விஸ்வாசம்’, சிலம்பரசனின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ உள்ளிட்ட பல்வேறு படங்களில் தனது இருப்பை பதிவு செய்தார்.
இன்னொரு பக்கம் தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகளிலும் அவ்வப்போது பங்கேற்று வந்தார். தனக்கு முகவரி கொடுத்த ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.
கமல்ஹாசனின் தீவிர ரசிகரான ரோபோ சங்கரை எந்த கமல் படம் வெளியானாலும் முதல் நாள் முதல் காட்சியில் திரையரங்க வாசலில் பார்த்துவிடமுடியும். அந்தளவுக்கு கமல் மீது அளவுகடந்த பாசமும், பக்தியும் வைத்திருந்தவர்.
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களிலும் தன் மகள் இந்திரஜாவுடன் இவர் போடும் ரீல்ஸ் வீடியோக்களும் அவ்வப்போது வைரலாகும். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, எப்போதும் ஆகிருதியான உடலுடன் தோன்றும் ரோபோ சங்கர் திடீரென கடுமையாக உடல் எடை குறைந்த புகைப்படம் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டதே இந்த உடல் எடை குறைவுக்கு காரணம் என்று கூறப்பட்டது.
சிகிச்சைப் பிறகு மெல்ல தேறி வந்த ரோபோ சங்கர் மீண்டும் பழையபடி திரைப்படங்களிலும், டிவி நிகழ்ச்சிகளில் தோன்றினார். பழைய உடல்கட்டுடன் மீண்டும் வலம் வந்த ரோபோ சங்கர், அண்மையில் சன் டிவியில் ஒளிபரப்பான ‘டாப் குக் டூப் குக்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். கடைசியாக ‘சொட்ட சொட்ட நனையுது’ என்ற படத்தில் நடித்திருந்தார்.
சில தினங்களுக்கு முன்பு சென்னையில் தமிழக அரசு சார்பில் நடைபெற்ற இசைஞானி இளையராஜாவுக்கான பாராட்டு விழாவிலும் கலந்து கொண்டார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று (செப்.18) ரோபோ சங்கர் காலமானார்.