இந்த ஐபிஎல்லில் சூப்பர் ஹீரோ யார்?
நிகோலஸ் பூரன், நூர் அகமது, சாய் சுதர்ஷன், திக்வேஷ், கலீல் அகமது ஆகியோரின் பெயர்களை இதற்கு பதிலாக சொன்னால் அது தவறு. அவர்கள் அனைவரையும் பின்னுக்குத் தள்ளி இப்போது முதல் இடத்தை பிடித்திருக்கிறது ரோபோ நாய்.
ஒவ்வொரு ஆண்டும் கிரிக்கெட் தொடர்களின்போது ஏதாவது ஒரு புதுமையைச் செய்வது ஐபிஎல் நிர்வாகத்தின் வழக்கம். அந்த வகையில் சில ஆண்டுகளுக்கு முன் மைதானத்தின் மீது தொங்கும் ஸ்பைடர் கேம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஸ்பைடர் கேமரா மூலம் போட்டியை டாப் ஆங்கிளில் படம்பிடித்து ஒளிபரப்பினார்கள். இது ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்றாலும், சில பேட்ஸ்மேகள் அதை தொந்தரவாக நினைத்தார்கள். தங்கள் கவனத்தை அது சிதறடிப்பதாக சொன்னார்கள். சில பீல்டர்களும் கேட்ச்களை தவறவிட்டதற்கு அந்த கேமரா மீது புகார்களை தெரிவித்தார்கள்.
அதே வரிசையில் கிரிக்கெட் போட்டியின்போது நமக்கு பிடித்த வீரரை மட்டும் நெருக்கமாக காட்டும் முறை கடந்த ஐபிஎல் தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த வரிசையில் இப்போது ரோபோ நாய் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நான்கு கால்கள், வால் என்று பார்ப்பதற்கு நாயைப் போல வடிவமைக்கப்பட்ட இந்த ரோபோ நாயின் உடலுக்குள் அதிநவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஒரு கேமராமேனைவிட மிக வேகமாக மைதானத்துக்குள் ஓடும் திறன்கொண்ட இந்த ரோபோ நாய், மைதானத்தின் இண்டு இடுக்குக்கெல்லாம் போய் கிரிக்கெட் போட்டிகளை படம்பிடித்து காட்டுகிறது.
முன்பெல்லாம் மைதானத்துக்குள் வீரர்கள் நுழையும்போது அவர்களை படம்பிடிக்க கேமராமேன்கள் அவர்கள் முன்னால் கேமராவை தூக்கிக்கொண்டு ஓடுவார்கள். ஆனால் இப்போது அப்படி ஓட்த் தேவையில்லை. அந்த வேலையை இந்த இயந்திர நாய் ஓடிக்கொண்டே செய்கிறது. அவ்வப்போது கிரிக்கெட் வீரர்களுடன் விளையாடி ரசிகர்களுக்கு சுவாரஸ்யம் கொடுக்கிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனிக்கு நாய்கள் என்றால் கொள்ளை ஆசை. அவரது நாயாசை இந்த இயந்திர நாயையும் விட்டுவைக்கவில்லை. லக்னோ சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியை படம்பிடிக்க நெருக்கமாக அந்த நாய் செல்ல, அதைச் செல்லமாக படுக்கப் போட்டு விளையாடி இருக்கிறார் தோனி.
அவரைப் போலவே ஐபிஎல் போட்டியின் முக்கிய வீரர்கள் பலரும் அந்த ரோபோ நாயுடன் செல்லமாக விளையாடி வருகிறார்கள்.