வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் தங்க நகைக்கடன் வழங்குவது தொடர்பாக 9 புதிய வரைவு விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது.
அதில் முக்கியமாக, அடகு வைக்கப்படும் தங்க நகையின் மொத்த மதிப்பில் 75 சதவீதத்துக்கு மட்டுமே கடன் வழங்கப்படும் என புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.100 மதிப்புள்ள தங்க நகையை அடகு வைக்கும்பட்சத்தில் அதிகபட்சம் ரூ.75 மட்டுமே கடனாக பெறமுடியும்.
கோவிட் சமயத்தில் பொதுமக்களின் நலன் கருதி தங்க நகை மதிப்பில் 80 சதவீதம் வரை கடன் பெறலாம் என தளர்த்தப்பட்ட நிலையில், தற்போது மறுபடியும் 75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அடமானம் வைக்கப்படும் தங்க நகை தங்களுடையதுதான் என்பதற்கான ஆதாரத்தை வாடிக்கையாளர் அதாவது கடன் வாங்குபவர் வங்கியிடம் சமர்ப்பிக்க வேண்டும். தங்கத்தின் தூய்மை தன்மை மற்றும் தரம் குறித்து வாடிக்கையாளர்களுக்கு வங்கி சான்றிதழ் வழங்கவேண்டும் என்று புதிய விதிமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி, மருத்துவம் போன்ற அவசர தேவைகளுக்காக அடகு வைக்க செல்லும் மக்களுக்கு தங்கம் வாங்கியதற்கான ரசீதை காட்ட வேண்டும், தரச் சான்று வழங்க வேண்டும் என்று கூறுவது நடைமுறையில் ஒத்துவராத விதிமுறை. இது, கடன்பெற செல்லும் மக்களை அலைக்கழிக்கும் செயலாக அமையும் என்பது நிதி துறை சார்ந்த நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
அடகு வைக்கப்படும் தங்கம் 24 காராட்டாக இருந்தாலும் 22 காரட் மதிப்பின் அடிப்படையில்தான் இனி கணக்கிட்டு கடன் வழங்கப்படும். ஆனால், புதிய விதிமுறையின்படி வெள்ளிப்பொருட்களுக்கும் நகைக்கடன் பெறலாம் என்பது வாடிக்கையாளர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது.
தனிநபர்கள் இனி ஒரு கிலோ தங்க நகை வரை மட்டுமே அடமானம் வைக்கமுடியும். நகை கடன் ஒப்பந்தங்களில் முழுமையான தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க வேண்டும்.