இந்தியாவில் காற்று மாசுபாட்டை குறைத்தால், நாட்டு மக்களின் சராசரி ஆயுள்காலம் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும் என்று சிகாகோ பல்கலைக்கழகத்தில் உள்ள எரிசக்தி கொள்கை நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
அந்த அறிக்கையில், ‘இந்தியாவில் 2022-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023-ஆம் ஆண்டு காற்று மாசுபாடு அதிகமாக இருந்தது. இது உலக சுகாதார அமைப்பு வழங்கிய வழிகாட்டுதலைவிட 8 மடங்கு அதிகம். இந்த மாசுபாட்டை உலகளாவிய தரநிலைக்கு ஏற்ப நிரந்தரமாக குறைத்தால், இந்தியா்களின் சராசரி ஆயுள்காலத்தில் 3.5 ஆண்டுகள் அதிகரிக்கும்.
இந்தியாவில் மிகுந்த காற்று மாசுபாடு கொண்ட மண்டலமாக வடக்கு சமவெளி உள்ளது. அங்கு இந்திய மக்கள்தொகையில் 38.9 சதவீதம் போ் வசிக்கின்றனா். அங்கு உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி காற்று மாசுபாடு குறைந்தால், அங்குள்ள மக்களின் சராசரி ஆயுள்காலம் 5 ஆண்டுகள் அதிகரிக்கும்.
உலக சுகாதார அமைப்பு வழிகாட்டுதலின்படி, இந்தியா முழுவதும் காற்று மாசுபாடு குறைந்தால், தலைநகா் தில்லி பெரும் பலனடையும். அங்கு வசிக்கும் மக்களின் ஆயுள்காலம் 8.2 ஆண்டுகள் அதிகரிக்கும்.