ராஷ்மிகா மந்தானா நடிக்கும் படம் ‘ரெயின்போ’. தமிழ் மற்றும் தெலுங்கு என ஒரே நேரத்தில் இரு மொழிகளில் தயாராகும் படம். இப்படத்தை அறிமுக இயக்குநர் சாந்தரூபன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப்படம் மூலம், தென்னிந்தியாவில் முன்னணியில் இருக்கும் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பெண்களை மையமாக கொண்ட கதைகளில் நடிக்கும் முன்னணி நடிகைகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ராஷ்மிகா மந்தானா.
தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் சூப்பர் ஸ்டார் என கொண்டாடப்படும் நயன்தாரா நடித்த கதாநாயகியை மையமாக கொண்ட படங்களுக்கு குறிப்பிடும்படியான வரவேற்பு இருந்தது. ஆனால் இந்தப் படங்கள் வசூலில் எந்தளவிற்கு லாபம் ஈட்டிக்கொடுத்தன என்பது வேறுவிஷயம்.
கவர்ச்சி, கமர்ஷியல் என இரு அம்சங்களிலான படங்களில் நடித்து வந்த ராஷ்மிகா, ஹிந்தியில் கதாநாயகியை மையமாக கொண்ட ‘மிஷன் மஞ்சு’ என்ற படத்தில் நடித்தார். ஆனால் அப்படம் பெரியளவில் வசூலை அள்ளவில்லை.
ஆனால் இங்கு தமிழில் ராஷ்மிகா நடிக்கும் ‘ரெயின்போ’ படம், ரிலீஸூக்கு முன்பான வியாபாரத்தில் தூள் கிளப்பி இருக்கிறது. ரெயின்போ படத்திற்கான டிஜிட்டல், திரையரங்கு உரிமை மற்றும் தொலைக்காட்சி உரிமை என இவை அனைத்தும் சேர்த்து 32 கோடி வரை விலை போயிருப்பதாக கூறுகிறார்கள்.
பெண்ணை மையமாக கொண்ட தென்னிந்திய திரைப்படங்களில் மிக அதிகளவிற்கு விலை போன படம் என்ற பெருமையை இப்படம் தட்டிச்சென்றிருக்கிறது.
ராஷ்மிகாவுக்கு இருக்கும் இந்த வியாபாரரீதியான மவுசு நயன்தாரா வட்டாரத்தையே கிடுகிடுக்க வைத்திருக்கிறது.
நெட்ஃப்ளிக்ஸின் புதிய கெடுபிடி!
இரண்டு நாட்கள் முன்பு வரை, யாரோ ஒரு புண்ணியவான் தனது பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து நெட்ஃப்ளிக்ஸ் பார்ப்பதற்கான சந்தாவைக் கட்டுவார். ஆனால் அவருடைய நண்பர்கள், உறவினர்கள், அலுவலக நண்பர்கள் என ஒரு பெரிய பட்டாளமே, அந்த நபரின் நெட்ஃப்ளிக்ஸ் கணக்கைப் பயன்படுத்துவார்கள்.
இப்படிதான் ரொம்ப நாட்களாக போய் கொண்டிருந்தது. இதனாலேயே இந்தியாவில் நெட்ஃப்ளிக்ஸூக்கு என்று பார்வையாளர்கள் அதிகம் பேர் கூட்டம் சேர்ந்தனர்.
இந்தியாவில் போதுமான அளவிற்கு எல்லோரிடமும் போய் சேர்ந்தாயிற்று. அடுத்து என்ன? இலவசமாக இருப்பதை எல்லாம் பிடுங்கிக் கொள்ளவேண்டியதுதான். இதே யுக்தியைதான் இப்போது நெட்ஃப்ளிக்ஸூம் செய்திருக்கிறது.
தனது சந்தாதாரர்கள் எல்லோருக்கும் ஒரு மின்னஞ்சலை தட்டிவிட்டிருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ். அதில், இனி உங்களது நெட்ஃப்ளிக்ஸ் கணக்கு உங்களுக்கு மட்டுமே. உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு மட்டுமே. நீங்கள் மற்றும் உங்கள் வீட்டுநபர்களைத் தவிர வேறெந்த நபரும் இனி உங்கள் கணக்கைப் பயன்படுத்த முடியாது. மற்றவர்கள் அவர்களுடைய ப்ரொபைலை புதிய நெட்ஃப்ளிக்ஸ் கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று மின்னஞ்சலில் சொல்லப்பட்டிருக்கிறது.
இதன் அர்த்தம் என்னவென்றால், மற்றவர்கள் தங்களது புதிய கணக்கிற்கு சந்தா செலுத்தினால் மட்டுமே இனி நெட்ஃப்ளிக்ஸை பார்த்து ரசிக்க முடியும்.
முன்னேபின்னே எந்தவிதமான முன் நடவடிக்கை ஏதும் இல்லாமல் பட்டென்று இப்படியொரு அறிவிப்பை நெட்ஃப்ளிக்ஸ் வெளியிட்டு இருக்கிறது. ஆனால் இப்படியொரு நடவடிக்கை எடுக்கப்படும் என்பது நீண்டநாட்களாகவே ஒரு யூகமாக உலவிக்கொண்டிருந்தது. அதைதான் இப்போது செயல்படுத்தி இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.
உங்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளைப் பார்க்க பல வாய்ப்புகள் இருக்கின்றன என்பது எங்களுக்கு தெரியும். அதனால்தான் நாங்கள் பல்வேறு வகையான, விதவிதமான நிகழ்ச்சிகள், புதிய திரைப்படங்கள், டிவி நிகழ்ச்சிகளைத் தயாரிக்க பெருமளவில் செலவழித்து வருகிறோம். உங்களுடைய ரசனை, விருப்பம், மனநிலை, மொழி என எதுவாக இருந்தாலும் அதற்கேற்ற நிகழ்ச்சிகளை கண்டுரசிக்க நெட்ஃப்ளிக்ஸ் இருக்கிறது’ என்று ஒரு குட்டிச்செய்தியையும் கெத்தாக வெளியிட்டு இருக்கிறது நெட்ஃப்ளிக்ஸ்.
ஓவராக அலம்பல் பண்ணும் யோகிபாபு!
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்களுக்கென்று ஒரு பெரும் வரலாறு இருக்கிறது.
விவேக், வடிவேலு, சந்தானம் உள்பட கடைசியாக இந்த வரிசையில் இணைந்திருக்கும் யோகி பாபு உட்பட எல்லோருக்கும் இது பொருந்தும்.
இந்த காமெடி நடிகர்களுக்கு மார்கெட் எகிறும் போது, நாளொன்றுக்கு லட்சங்களில் சம்பளம் வாங்குவார்கள். ஒரே நாளில் இரண்டுப் படங்களுக்கு கால்ஷீட் கொடுப்பார்கள். கால்ஷீட்டில் குளறுப்படி உண்டாகும். ஷூட்டிங் முடிந்த படங்களின் டப்பிங்கிற்கு சொன்ன தேதியில் வரமாட்டார்கள். இபப்டி இவர்களது ரவுசு உச்சத்திற்கு போகும்.
இந்த பாதையில் சமீபத்தில் இணைந்திருப்பவர் யோகி பாபு.
வடிவேலு, சந்தானம் இவர்களின் ஆப்செண்ட்டினால் யோகி பாபுவிற்கு அடித்திருக்கிறது யோகம். இன்று இவருக்குதான் காமெடி நடிகர்களில் மவுசு அதிகம்.
இதனால் இவர் சம்பளத்தையும் ஏற்றிவிட்டார். கதாநாயகனாகவும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார்.
இதனால் முன்பு மார்கெட் சுமாராக இருந்த போது நடித்தப் படங்களுக்கு டப்பிங் பேசாமல் தவிர்த்து வருகிறாராம். இது ஒரு பக்கம் இருந்தாலும், கதை சொல்ல வருபவர்களிடம், கதை நன்றாக இல்லை. இனியும் மண்டேலா மாதிரியான கதைகளில் நடிக்க மாட்டேன். என்னுடன் நடிக்கும் ஹீரோக்கள் ஏன் இந்த மாதிரி படங்களில் நடிக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். ஹீரோயிஸம் உள்ள வேறு கதை இருந்தால் சொல்லுங்கள். 40 நாள்தான் கால்ஷீட். அதற்கேற்றப்படி திட்டமிட்டு கொள்ளுங்கள். 1.5 கோடி சம்பளம் என்றால் யோசிக்கலாம் என்று யோகி பாபு கூறிவருவதாக கோலிவுட் வட்டாரத்தில் முணுமுணுப்பு கிளம்பியிருக்கிறது.