No menu items!

மருத்துவமனையில் ரஜினி –நலம் விசாரித்தவர்கள் லிஸ்ட்

மருத்துவமனையில் ரஜினி –நலம் விசாரித்தவர்கள் லிஸ்ட்

நடிகர் ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது அப்பல்லோ மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவர் விரைவில் குணமடைய, பிரபலங்கள் பலரும் இணையத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

‘ஜெயிலர்’ வெற்றியைத் தொடர்ந்து ரஜினிகாந்த் தற்போது, ‘வேட்டையன்’ படத்தில் நடித்துள்ளார். இந்த படம் அக்டோபர் 10ஆம் தேதி தியேட்டரில் வெளியாக உள்ளது. ரஜினியின் 170வது படமான இப்படத்தை ‘ஜெய்பீம்’ இயக்குநர் த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைத்து இருக்கிறார். இந்த படத்தில், அமிதாப் பச்சன், மஞ்சு வாரியர், ஃபஹத் ஃபாசில், ராணா டகுபதி, ரித்திகா சிங் மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

‘வேட்டையன்’ படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், ரஜினிக்கு நேற்று திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டதை அடுத்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிறுநீர் கழிப்பதில் சிரமம் ஏற்பட்டு, வயிற்றில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால், அடி வயிற்றில் வீக்கம் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக, அடி வயிற்றுக்கு அருகில் அவருக்கு ஸ்டெண்ட் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தற்போது அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், ஐசியூவில் இருந்து விரைவில் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை பற்றி தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பகிர்ந்த தகவலில், “ரஜினிகாந்த் உடல் நிலை சீராக உள்ளது. அவரின் உடல்நிலை குறித்து தொடர்ந்து கவனித்து வருகிறோம்” என்று கூறியுள்ளார். மேலும், “ரஜினிகாந்துக்கு அச்சப்படும் வகையிலும் எதுவும் இல்லை. அவருக்கு திட்டமிட்ட மருத்துவ பரிசோதனையே செய்யப்படுகிறது. பெரிய அளவிலான அறுவை சிகிச்சை எதுவும் செய்யப்படவில்லை. தமிழக மருத்துவ துறை அதிகாரிகள் அப்பல்லோ மருத்துவ அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ முறைகளை அறிந்துவருகின்றனர்” என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

முன்னதாக, “மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நண்பர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் விரைந்து நலம் பெற விழைகிறேன்” என்று ரஜினிகாந்த் குணமடைய முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.

நடிகர் சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில், “திடீர் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் அன்பு நண்பர் ரஜினிகாந்த் விரைவில் பூரண நலம் பெற வேண்டுமென்று வாழ்த்துகிறேன் எனவும் அவர் விரைவில் முழு உற்சாகத்தோடும், ஆரோக்கியத்தோடும் தனது அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வேண்டுமென்றும் பிரார்த்திக்கிறேன்.” என தெரிவித்துள்ளார்.

“ரஜினிகாந்த் விரைவாகவும் சீராகவும் குணமடைய உலகெங்கிலும் உள்ள அவரது கோடிக்கணக்கான ரசிகர்களுடன் சேர்ந்து நானும் வேண்டிக் கொள்கிறேன்” என ஆளுநர் ரவி எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் பூரண குணம் பெற்று விரைவில் இல்லம் திரும்ப விழைகிறேன் என தெரிவித்துள்ளார்.

அதே போல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, தனது எக்ஸ் தள பக்கத்தில், புன்னகை மன்னன், ஸ்டைலின் பிறப்பிடம், என்றுமே ராஜாவான சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள் உடல் நலம் பெற்று விரைவில் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப வேண்டிக்கொள்கிறேன். அதே புன்னகையோடும்… வேகத்தோடும் இயங்க இறை பலம் தரட்டும் என பதிவிட்டுள்ளார்.

இதேபோல் அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலரும் அவர் உடல் நலம் பெற வாழ்த்துக்களை இணையத்தில் தெரிவித்து வருகின்றனர்.

நண்பர் ரஜினிகாந்த் நலமடைந்து இல்லம் திரும்ப விருப்பங்களை தெரிவித்துக் கொள்வதாக பாமக தலைவர் அன்புமணி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...