பாரத் ஜோடோ யாத்ரா என்ற பெயரில் இந்தியா முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார் ராகுல் காந்தி. தமிழகத்தில் தொடங்கிய அவரது இந்த யாத்திரை, கேரளாவைக் கடந்து இப்போது கர்நாடகாவில் தடம் பதித்துள்ளது. ஏசி அறைக்குள் அமர்ந்து அரசியல் செய்யும் அரசியல்வாதிகள் மத்தியில் மக்களோடு மக்களாக சாலையில் இறங்கி ராகுல் காந்தி மேற்கொள்ளும் இந்த யாத்திரை மக்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது.
நடை பயணத்தில் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் உள்ளது. உடன் நடந்து வரும் குழந்தையின் செருப்பை தன் கைகளால் சரி செய்வதிலிருந்து, பாட்டிக்கு தண்ணீர் தருவது வரை ராகுல் மக்களுக்கு நெருக்கமாக இருக்கிறார். அவருடைய வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வைரலாக மாறுகின்றன.
எப்போதுமே ராகுல் காந்தி பயணங்கள் மக்களுடன் நெருங்கிப் பழகும் வகையில்தான் இருக்கும். இந்த முறையும் அப்படிதான்.
ராகுல் காந்தி மீது பொதுவாக இரண்டு விமர்சனங்கள் வைக்கப்படும். ஒன்று, வாரிசு அரசியல் என்பது. மற்றொன்று அவரை அணுகுவது அவ்வளவு எளிதல்ல என்பது. இந்த 2 பிம்பங்களையும் உடைக்கும் விதமாக ராகுல் காந்தியின் இந்த பாதயாத்திரை அமைந்துள்ளது.
நடைபயணத்தில் ஒவ்வொரு முறையும் சோர்வாக உணரும் போதும், முழங்கால் வலி ஏற்படும் போதும், சக ‘யாத்ரி’யிடம் இருந்து ஊக்கம் பெறுவதை ராகுல், சக தலைவர்களிடம் விவரிப்பது போன்ற வீடியோக்களே இதற்கு சாட்சி.
இந்த நடைபயணத்தில் ராகுலுடன் அதிகம் நடந்த வாலியா இது குறித்து பேசுகையில், “இந்த யாத்திரை மூலம் உண்மையான ராகுல் காந்தியை மக்கள் அறிந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். அவர் தனது கட்சித் தொண்டர்களுக்கு உதவ எப்போதும் தயாராக இருக்கிறார்” என்று கூறினார்.
கொட்டும் மழையில் அவர் உரையாற்றியது, தன்னுடன் நடை பயணம் வருவோருடன் ஒன்றாக அமர்ந்து பேசுவது, சாப்பிடுவது போன்ற செய்கைகளால் மக்களில் ஒருவராக அவர் மாறிவிட்டார் என்று மகிழ்ச்சியடைகிறார்கள் கட்சித் தொண்டர்கள்.
நடைபயணத்தில் ராகுல் காந்திக்கு கிடைக்கும் அன்பும் ஆதரவும் வாக்குகளாக மாறி காங்கிரசை கரை சேர்க்குமா என்ற கேள்விக்கு ஆம் என்று நிச்சயமாக பதில் சொல்ல முடியாது என்பதுதான் இன்றைய நிலை.