தேர்தல் ஆணையத்தின் மீது காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
பிஹாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அங்கு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்புப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. 22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்று வரும் இந்த பணியின் மூலம், வாக்காளர் பட்டியலில் உள்ள தகுதியற்ற பெயர்கள் நீக்கப்படும், ஒன்றுக்கும் மேற்பட்ட வாக்காளர் பதிவு இருப்பின் அது சரி செய்யப்படும், தகுதிவாய்ந்த வாக்காளர்களின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில், தேர்தல் நேரத்தில் மேற்கொள்ளப்படும் இந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை (எஸ்ஐஆர்) எதிர்த்து எதிர்க்கட்சிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன.
இந்நிலையில், அஜித் அன்ஜூம் என்ற யூடியூபர் தனது எக்ஸ் பக்கத்தில் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். மேலும், “பிஹாரில் ‘எஸ்ஐஆர்’ பெயரில் மோசடி நடக்கிறது. அதற்கான ஆதாரம் இந்த வீடியோவில் உள்ளது. அரசு பணியாளர்களே வாக்காளர் படிவங்களை நிரப்புகிறார்கள், அவர்களே வாக்காளர்கள் சார்பாக கையெழுத்திடுகிறார்கள், அரசு அலுவலகத்திலேயே இத்தகைய முறைகேடுகள் மிகவும் வெளிப்படையாக நடக்கின்றன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் பதில் அளிக்குமா? தொடர்புடையவர்களுக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்குமா?” என அஜித் அன்ஜூம் கேள்வி எழுப்பி உள்ளார்.