No menu items!

சாட்டை துரைமுருகன் கைது – முதல்வர் ரியாக்ஷன் – மிஸ் ரகசியா

சாட்டை துரைமுருகன் கைது – முதல்வர் ரியாக்ஷன் – மிஸ் ரகசியா

“நாடாளுமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு எல்லாரும் எதிர்பார்த்தா மாதிரியே அதிமுகல புகைச்சல் ஆரம்பிச்சுடுச்சு” என்றபடி ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.

“அதிமுக மூத்த தலைவர்கள் சிலர் கட்சியை ஒன்றிணைக்கறதைப் பத்தி எடப்பாடிகிட்ட பேசினதைச் சொல்றியா?”

“ஆமாம். சில தினங்களுக்கு முன்ன எடப்பாடியைச் சந்திச்ச செங்கோட்டையன், வேலுமணி உள்ளிட்ட மூத்த தலைவர்கள், அதிமுக ஒருங்கிணைப்பு பத்தி பேசியிருக்காங்க. கட்சியை திரும்ப வெற்றிப் பாதைக்கு கொண்டு வரணும்னா அதை ஒருங்கிணைக்கறது அவசியம்னு அவர்கிட்ட சொல்லி இருக்காங்க”

“அதுக்கு எடப்பாடி என்ன சொன்னாராம்?”

“அவங்க சொன்னது எல்லாத்தையும் பொறுமையா கேட்ட எடப்பாடி, ‘இது உங்க கருத்தா… இல்லை இப்படி பேசச் சொல்லி வேறு யாராவது உங்களுக்கு அழுத்தம் தந்தாங்களா?’ன்னு கேட்டிருக்கார். அதுக்கு அவங்க, ‘அப்படியெல்லாம் இல்லை. இது எங்களோட கருத்துதான்’னு சொல்லி இருக்காங்க. இதைக் கேட்ட எடப்பாடி, ‘இப்ப கட்சியை ஒருங்கிணைக்க என்ன அவசியம் இருக்கு? சசிகலா ஏன் ஓபிஎஸ்சை சந்திக்க மறுக்கிறார்னு முதல்ல விசாரிங்க. அதுக்குப் பிறகு இதைப்பத்தி பேசலாம். நானா எப்பவும் எந்த முடிவும் எடுக்கறதில்லை. உங்க எல்லோரையும் கலந்து ஆலோசிச்சுதான் எடுக்கறேன். நாடாளுமன்ற தேர்தலில் நம் தோல்விக்கு காரணம், நாம சரியா வேலை பார்க்கத்துதான். இதுக்கு நானும் பொறுப்பு ஏத்துக்கறேன். இதை எப்படி சரி செய்யணும்னுதான் ஆலோசனை கூட்டம் நடத்தறோம்’னு அவங்ககிட்ட சொல்லி இருக்கார். எடப்பாடி இப்படி பேசின பிறகு அவர்கிட்ட ஒருங்கிணைப்பு பத்தி ஏதும் பேச வேணாம்னு அந்த தலைவர்கள் முடிவு எடுத்திருக்காங்க. எடப்பாடி முடிவு சரிதான்ங்கிற மனநிலைக்கு அவங்க வரத் தொடங்கி இருக்கிறதா தகவல்கள் வருது.”

“பொதுவா இதுமாதிரி விஷயங்கள்ல செங்கோட்டையன் ஆர்வம் காட்ட மாட்டாரே. ஆனா இந்த முறை அவர் எப்படி அதிருப்தி தலைவர்களோட சேர்ந்துகிட்டார்?”

“எடப்பாடிக்கும் இந்த சந்தேகம் இருந்திருக்கு. அவர் நினைச்ச மாதிரியே ஒருங்கிணைப்பு பத்தி எடப்பாடிகிட்ட பேச செங்கோட்டையன் தயங்கி இருக்கார். ஆனா கே.பி.முனுசாமியும், எஸ்.பி.வேலுமணியும்தான் அவரை வலுக்கட்டாயமா கூட்டிட்டு போனதா சொல்றாங்க.”

“இந்த விஷயத்துல இப்ப சசிகலாவோட நிலை என்ன?”

“அவர் இப்போதைக்கு யாரையும் நம்பறதா இல்லை. தானே எடப்பாடியை சந்திச்சு பேச திட்டமிட்டு இருக்கார். அதே நேரத்தில் அதிமுக இணைப்பு பற்றி ஜெயலலிதா பாணியில் ஜோதிடர்கள் கிட்டயும் ஆலோசனை கேட்கத் தொடங்கி இருக்கார் சசிகலா. அவங்க தொண்டர்களை சந்திக்கும் சுற்றுப்பயணத்தை தென்காசியில் இருந்து தொடங்கச் சொல்லி அட்வைஸ் கொடுத்திருக்காங்க. சசிகலாவும் அப்படியே தொடங்க திட்டமிட்டு இருக்கார்.”

“விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பத்தி ஏதாவது செய்திகள் இருக்கா?”

“விக்கிரவாண்டி இடைத் தேர்தல்ல ஜெயலலிதா படத்தை பாட்டாளி மக்கள் கட்சி பயன்படுத்தினதுக்கு அதிமுகவில் பெரிய அளவில் எதிர்ப்பு வரலை. இது பாஜகவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கு. ஒருவேளை சட்டமன்ற தேர்தலில் பாஜகவை கழற்றி விட்டுட்டு அதிமுகவோட பாமக கூட்டணி சேருமோன்னு அவங்க நினைக்கறாங்க. இது ஒருபுறம் இருக்க, நாடாளுமன்ற தேர்தல்ல போட்டியிட்ட 10 தொகுதிகள்லயும் பாமக தோத்ததுக்கு பாஜக கூட்டணிதான் காரணம்னு ராமதாஸ் நினைக்கறாராம். இதுபத்தி கட்சி நிர்வாகிகள்கிட்ட அவர் தொடர்ந்து பேசிட்டு இருக்காராம். இதையெல்லாம் வச்சு பார்த்தா பாஜக சந்தேகப்படறது நிஜமாகிடுமோன்னு தோணுது”

“தமிழக பாஜக தலைவர் மாற்றப்படலாம்னு ஒரு தகவல் கமலாலயத்துல பேசப்படுதே?”

“அண்ணாமலை படிக்கறதுக்காக லீவ் போடறதுதான் இந்த பேச்சு வர்றதுக்கு காரணம். அப்படி தமிழக தலைவரை மாத்தினாலோ, இல்லை இடைக்கால தலைவரை நியமிக்கறதா இருந்தாலோ தனக்கு அந்த பதவி கிடைக்கணும்னு சரத்குமார் விரும்பறாரு. அதுக்காக தன்னோட செல்வாக்கை அவர் பயன்படுத்தறாரு. அதே நேரத்துல நயினார் நாகேந்திரனும் அந்த பதவிக்கு ரூட் விடறார். தான் தலைவர் ஆனால் அதிமுக கூட்டணிக்கு உத்தரவாதம் கொடுக்கறதா அவர் டெல்லியில பேசிட்டு இருக்காராம்.”

“தமிழகத்துல தொடர்ந்து காவல்துறை அதிகாரிங்களை மாத்திட்டு வர்றாங்களே?”

“காவல்துறை அதிகாரிகள் நியமனம், மாற்றம் எல்லாம் முதல்வரே முடிவு செய்ததாம். சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைச்சு பேசின முதல்வர், ‘இனி ஆளுங்கட்சி பிரமுகர்களோட அரசியல் தலையீடு ஏதும் இருக்காது. நீங்க சுதந்திரமாக செயல்பட்டு சட்டம் ஒழுங்கை சரி செய்யுங்க’ன்னு கேட்டிருக்கார். அதனாலதான் சென்னை மாநகர புது காவல் ஆணையர் ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் நாங்கள் பதில் சொல்வோம் என்று சொல்லி இருக்கிறார். என்கவுன்ட்டர் பண்ணுவோம்கிறதைத்தான் அவர் இப்படி மறைமுகமா சொல்லி இருக்கார்னு சொல்றாங்க.”

“என்கவுண்டர்லாம் சரிதான் சோஷியல் மீடியாவுல விமர்சனம் பண்றவங்களையெல்லாம் போலீஸ் அரெஸ்ட் பண்ணுதே?”

“சாட்டை துரைமுருகன் அரெஸ்ட்டைதானே சொல்றிங்க. அவர் கருணாநிதி பத்தி பாடுன பாட்டு அவதூறின் உச்சக் கட்டம்.”

“அதுக்காக அரெஸ்டா?”

“நீங்க கேக்குறது கரெக்ட். இந்த விஷயத்துல முதல்வரும் இதே கேள்விதான் கேட்டாராம். ஆனா நம்ம தலைவரைப் பத்தி இவ்வளவு கேவலமா பேசுறவரை விட்டுவச்சா கட்சிக்காரங்க தப்பா நினைப்பாங்க. தலைமை மேலேயே அவங்களுக்கு சந்தேகம் வந்துடும். அதனால ஏதாவது ஆக்ஷன் எடுக்கணும்னு மூத்த கட்சிக்காரங்க சொல்லியிருக்காங்க. சாட்டை துரைமுருகனை அரெஸ்ட் பண்ணது கட்சிக்காரங்களுக்கா எடுக்கப்பட்ட நடவடிக்கைனு அறிவாலயத்துல சொல்றாங்க”

“அரெஸ்ட் பண்ணாலும் உள்ள வைக்க முடியலையே? கோர்ட் ரிலீஸ் பண்ணிடுச்சே”

“ஆமாம். அரசு நினைச்சிருந்தா வேற வழக்குகள் போட்டு அவரை உள்ளேயே வச்சிருக்க முடியும். ஆனா அப்படி வேண்டாம்னு முதல்வர் சொன்னதாகவும் தகவல் இருக்கு”

”அண்ணாமலை. செல்வபெருந்தகை மோதல் பத்தி ஏதாவது நியூஸ் இருக்கா?”

”இது தேவையில்லாத சண்டைனு காங்கிரஸ்காரங்களே சொல்றாங்க. அண்ணாமலையை வம்புக்கிழுத்து இப்போ இவரோட வண்டவாளம்லாம் வெளில வருதுனு காங்கிரஸ்காரங்களே பேசிக்கிறாங்க. வன்கொடுமை சட்டத்தில் அண்ணாமலையை அரெஸ்ட் பண்ணனும்னு திமுக மூத்த தலைவர்கள்கிட்ட அழுத்தம் கொடுத்திருக்கிறார். ஆனால் உங்க சண்டைல எங்களை இழுத்துவிடாதிங்கனு கழன்றுக் கொண்டார்கள்னு ஒரு செய்தி இருக்கு. இதுல செல்வப்பெருந்தகைக்கு வருத்தமாம். அவர் வருத்தப்படுறதுல மத்த காங்கிரஸ்காரர்களுக்கு மகிழ்ச்சியாம்”

”இவங்களையெல்லாம் பக்கத்துல வச்சுக்கிட்டு ராகுல் காந்தி எப்படி பிரதமர் ஆகப் போறார்னு தெரியல”

“அதான் அவர் இன்னும் ஆகல” என்று சிரித்துக் கொண்டே கிளம்பினாள் ரகசியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Wow அப்டேட்ஸ்

spot_img

வாவ் ஹிட்ஸ்

- Advertisement - spot_img

You might also like...