அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஓபிஎஸ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவில் மீதான தீர்ப்பை டிவியில் பார்த்துக்கொண்டு இருந்தபோது ஆபீசுக்குள் நுழைந்தாள் ரகசியா.
“பாஜகவும் கைவிட்ட நிலையில நீதிமன்றத்தைத்தான் மலைபோல நம்பி இருந்தார் ஓபிஎஸ். இப்ப உயர் நீதிமன்றமும் தன்னைக் கைவிட்டதுல ரொம்பவே நொந்துபோய் இருக்கார். அவரும் எத்தனை நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்க முடியும். பேசாம தினகரனோட வேண்டுகோள்படி அவரோட அம்முக கட்சியில இணைஞ்சுடலாமான்னும் யோசிக்கறாராம்.அவரோட ஆதரவாளர்கள் நிலை இன்னும் மோசம். பேசாம திமுகவுக்கோ இல்லை அதிமுகவுக்கோ போயிடலாமான்னு யோசிச்சிட்டு இருக்காங்ளாம்.”
“இந்த தீர்ப்பினால எடப்பாடி தெம்பாகி இருப்பாரே?”
“ஏற்கெனவே மாநாட்டு வெற்றியால சந்தோஷமா இருந்த எடப்பாடிக்கு, இந்த தீர்ப்பு இரட்டிப்பு சந்தோஷத்தைக் கொடுத்திருக்கு. ஆனா அந்த சந்தோஷத்தை கெடுக்கற மாதிரி கோடநாடு வழக்கு குறுக்க வந்து நிக்குது. ஜெயலலிதாவோட கார் டிரைவரா இருந்த கனகராஜ் கோடநாடு கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி. இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த இவர் அப்புறம் சேலத்தில் நடந்த ஒரு விபத்தில் சிக்கி இறந்தார். அவர் விபத்துல சாகல. கொலை செய்யப்பட்டார்னு அப்பவே சிலர் சொல்லிட்டு இருந்தாங்க. சில நாட்கள் கழிச்சு கனகராஜோட சகோதரர் தனபால் சில ஆவணங்களை அழிச்சதா குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார். பிறகு அந்த வழக்குல ஜாமீன்ல வெளிய வந்தார். சமீபத்தில் நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட தனபால் ஜாமீனில் வெளிய வந்திருக்கார். கோடநாடு வழக்கில் எடப்பாடியை விசாரிக்கணும்னு அவர் பேட்டி கொடுத்திருக்கார். இது எடப்பாடிக்கு தலைவலியை கொடுத்திருக்கு. இது தொடர்பா செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்த இபிஎஸ், அம்மாவுக்கு டிரைவரே கிடையாது. சசிகலாவுக்குதான் டிரைவர் இருந்தாங்க. அதனால இனி யாராவது ஜெயலலிதாவோட டிரைவர்னு கனகராஜை குறிப்பிட்டா வழக்கு போடுவேன்னு மிரட்டி இருக்கார்.”
“தனபால் எடப்பாடியை மிரட்டினா, பதிலுக்கு எடப்பாடி பத்திரிகையாளர்களை மிரட்டறாரா?… நல்ல கதைதான். அதிமுக செய்தியாவே சொல்லிட்டு இருக்கியே… திமுக நியூஸ் ஏதும் இல்லையா?
“நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பா திமுக தலைமை 2 முக்கிய முடிவுகளை எடுத்திருக்கு. அமைச்சர்களோட வாரிசுகளுக்கு நாடாளுமன்றத் தேர்தல்ல சீட் கிடையாதுங்கிறது முதல் முடிவு. திமுக வாரிசு அரசியல் செய்யுதுங்கிற பாஜகவோட குற்றச்சாட்டை பொய்யாக்க இந்த முடிவை எடுத்திருக்காங்க. நாடாளுமன்ற தேர்தல்ல இளைஞரணியைச் சேர்ந்த 5 பேருக்கு சீட் கொடுக்கறதுங்கிறது ரெண்டாவது முடிவு. தேர்தல்ல போட்டியிடற 5 இளைஞரணி வேட்பாளர்களை உதயநிதி ஸ்டாலினும், அன்பில் பொய்யாமொழியும் முடிவு செய்வாங்களாம். இதுக்காக இப்பவே ஒவ்வொரு மாவட்டத்துலயும் செல்வாக்கா இருக்கிற இளைஞர் அணி நிர்வாகிகள் யார்னு உதயநிதியும் அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இப்பவே தேட ஆரம்பிச்சிருக்காங்க.”
“திமுக தலைமையோட ரெண்டாவது முடிவு ஓகே. ஆனா முதல் முடிவை சில அமைச்சர்கள் ஏத்துக்க மாட்டாங்களே?”
“ஆமாம். இதனால இப்பவே புகைச்சல் தொடங்கி இருக்கு. குறிப்பா தன்னோட வாரிசுக்கு இந்த முறையும் தேர்தல்ல போட்டியிடற வாய்ப்பு தந்தே ஆகணும்னு துரைமுருகன் ஒத்தக்கால்ல நிக்கறார்.”
“போலீஸ் எங்களை திமுக கூட்டணியில் இருந்து பிரிக்கப் பார்க்குதுன்னு நாங்குநேரியில நடந்த ஆர்ப்பாட்டத்தில விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியிருக்காரே?”
“முதல்வர் ஸ்டாலின் இதை அவ்வளவா ரசிக்கல. இவ்வளவு காலமா அரசியல்ல இருந்தும் பொது வெளியில என்ன பேசணும்ங்கிறது திருமாவளவனுக்கு தெரியலையே… திமுக சுயமா முடிவு எடுக்காம போலீஸ் சொல்றபடியா கட்சியை நடத்துகிறோம்னு பக்கத்துல இருந்தவங்க்கிட்ட முதல்வர் பொங்கியிருக்கார்.”
“அதனாலதான் திருமாவளவன் விஜய்கிட்ட நெருங்கறாரோ?”
“திருமாவளவன் பிறந்த நாளுக்கு விஜய் வாழ்த்து சொன்னதை வச்சு இப்படி ஒரு செய்தி பரவுது. ஆனா அதுல உண்மையில்லை. திமுக கைவிட்டா ஓபிஎஸ் அணிக்குத்தான் திருமாவளவன் போவார்னு அவருக்கு நெருக்கமானவங்க சொல்றாங்க.”
“அண்ணாமலையோட முதல் கட்ட நடைப்பயணம் முடிஞ்சுடுச்சே?”
“ஆமாம். இரண்டாம் கட்ட நடைப் பயணத்தை செப்டம்பர் 3-ம் தேதி தொடங்கப்போறார். முதல் கட்ட நடைப் பயணத்துல அண்ணாமலைக்கு திருப்தி இல்லையாம். மக்கள்கிட்ட நடைப்பயணம் பெரிசா போய்ச் சேர்ந்ததா தெரியலையே’ன்னு அவரே சொல்லத் தொடங்கி இருக்கார். அதோட அடுத்த கட்ட நடைப் பயணத்தில் முக்கிய தலைவர்களை கலந்துக்க வச்சு மக்களைக் கவர திட்டமிட்டு இருக்கார்.”