‘India: The Modi Question’ என்ற ஆவணப்படத்தை பிபிசி உருவாக்கியுள்ளது. இதன் முதல் பகுதி ஜனவரி 17 அன்று வெளியிடப்பட்டது. உடனே, அதனை இந்தியாவில் மத்திய அரசு தடை செய்தது. இந்நிலையில், இதன் இரண்டாம் பாகத்தையும் அறிவித்திருந்தபடி தற்போது பிபிசி வெளியிட்டுள்ளது. அரசின் தடையையும் மீறி இந்த ஆவணப்படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியாவில் பல இடங்களில் திரையிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் இப்படத்தைப் பார்ப்பதற்கும் டவுன்லோட் செய்வதற்குமான இணைப்புகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. ஏன் தடை? அப்படி என்னதான் இந்த ஆவணப்படத்தில் உள்ளது?
குஜராத்தில் 2002ஆம் ஆண்டு இஸ்லாமியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தை யாரும் மறந்திருக்க முடியாது. அரசின் கணக்குகளின் படியே அந்த கலவரத்தில் 790 இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆனால், குறைந்தது 2000 பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என பல்வேறு அறிக்கைகள் தெரிவிக்கின்றன. பல பெண்கள் பாலியல் வல்லுறவுக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
இந்த கலவரத்தில் அன்றைய குஜராத் மாநில அரசுக்கும் அப்போது குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடிக்கும் நேரடி தொடர்பு உள்ளது என புகார்கள் எழுந்தன. அந்த சமயத்தில் ஐரோப்பிய யூனியன் அமைத்த விசாரணைக் குழு, குஜராத் அமைச்சர்களே நேரடியாக வன்முறையில் பங்கேற்றதாகவும் மாநில காவல்துறை அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் தனது அறிக்கையில் குறிப்பிட்டது. இதனடிப்படையில் மோடியை பிரிட்டிஷ் அரசாங்கம் அக்டோபர் 2012 வரை ராஜதந்திர புறக்கணிப்பு செய்திருந்தது. அதேபோல், 2005 முதல் 2014 வரை மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசாங்கம் மறுத்திருந்ததும், 2014இல் இந்திய பிரதமராக மோடி பதவியேற்ற பின்னர்தான் அமெரிக்க தடை விலக்கிக்கொள்ளப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தில் இது தொடர்பாக பல வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம் இது தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்தது. அந்தக் குழு, மோடி மீது வழக்கு நடத்த போதிய ஆதாரமில்லை என்று 2012ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிக்கையை சமர்ப்பித்தது. அந்த அறிக்கையை 2013ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டது. சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி எஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்த வழக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனையடுத்து, குஜராத் கலவரத்துக்கும் மோடிக்கும் நேரடி தொடர்புள்ளதாக எழுந்த புகார்களை கிட்டதட்ட அனைவரும் மறந்துவிட்டனர். இந்நிலையில்தான், ‘இந்தியா: மோடிக்கான கேள்விகள்’ பிபிசி ஆவணப்படம் வெளியாகி குஜராத் கலவரத்தையும் அதில் மோடியின் தொடர்பையும் மீண்டும் விவாதப் பொருளாக்கியுள்ளது.
பிபிசி ஆவணப்படத்தின் முதல் பாகத்தில் மோடியின் ஆரம்ப கால அரசியல் வாழ்க்கை காட்டப்பட்டுள்ளது. அவர் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்து குஜராத் முதலமைச்சர் பதவியை அடைவது வரை சித்திரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, குஜராத் கலவரத்தில் மோடிக்கு நேரடி பங்குள்ளதாக பல தகவல்களையும் தொகுத்து இந்த ஆவணப்படம் கூறுகிறது. பிரிட்டிஷ் வெளியுறவு அலுவலகத்திலிருந்து பிபிசியால் பெறப்பட்ட வெளியிடப்படாத அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் கலவரம் குறித்து ரகசியமாக விசாரிக்க ஒரு குழுவை பிரிட்டிஷ் அரசாங்கம் குஜராத்திற்கு அனுப்பியுள்ளது என்றும், தண்டனை பயமின்றி இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டதற்கு அப்போதைய குஜராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்று அக்குழு அறிக்கை கூறுவதாகவும் பதிவு செய்துள்ளது. அந்த அறிக்கையின் பல பகுதிகள் ஆவணப்படத்தில் வருகின்றன. அதில் ‘குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி நேரடிக் காரணம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பது காட்டப்படுகிறது. ‘இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தாக்குதல்களை தடுக்க வேண்டாம் என்று குஜராத் காவல்துறைக்கு மோடி உத்தரவிட்டிருந்தார். அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறை இது. இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்களை முற்றிலுமாக வெளியேற்றுவதற்கான முயற்சி’ என்று அறிக்கை கூறுகிறது.
மேலும், ‘குஜராத் கலவரமானது, ஆர்.எஸ்.எஸ். துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்தால் திட்டமிடப்பட்டு மாநில அரசின் துணையுடன் நடைபெற்றது’ என பிரிட்டிஷ் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர் கூறுவதும் இடம்பெற்றுள்ளது.
பிபிசி ஆவணப்படத்தின் முதல் பாகம் வெளியானதும் அதன் யூடியூப் லிங்க்குகளை இந்தியாவில் மத்திய அரசு முடக்கியது. ஆவணப்படத்தை பகிரும் இணைய இணைப்புகளை நிக்குமாறு யூடியூப், ட்விட்டருக்கு உத்தரவிட்டது. இதனால், வெளியான அடுத்த நாளே பிபிசி ஆவணப்படம் யூடியூப்-இல் இருந்து நீக்கப்பட்டது. திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஒ ப்ரைன்னின் டிவிட் உட்பட இது தொடர்பான பல பதிவுகள் டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டன. தொடர்ந்து ஆவணப்படத்தை தடை செய்தும், இது தொடர்பான சமூக வலைதள பதிவுகளுக்கும் தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.
இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ”இந்தியாவுக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் நோக்கில் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சார்பான ஆவணப்படம் இது. காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை இது காட்டுகிறது” என கூறினார்.
ஆனால், தடையையும் மீறி இந்தியாவில் பல இடங்களில் இப்படம் திரையிடப்பட்டு வருகிறது. ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகம், கேரளாவில் உள்ள சில கல்வி வளாகங்களில் மாணவர்கள் இந்த ஆவணப்படத்தை திரையிட்டனர். மேலும், பல பல்கலைக்கழக வளாகங்களில் உள்ள மாணவர் சங்கங்கள் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளனர்.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க அலுவலகத்தில் 24-01-2023 அன்று இரவு 9 மணிக்கு இந்த ஆவணப்படம் திரையிடப்படுதாக அறிவிக்கப்பட்டது. உடனே, ‘ஆவணப் படத்தை திரையிட அனுமதி பெறப்படவில்லை, ஆகவே அந்நிகழ்ச்சியை மாணவர்கள் ரத்து செய்ய வேண்டும். மீறும் மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று ஜே.என்.யூ. நிர்வாகம் எச்சரித்தது. ஆனால், ஆவணப்படம் திரையிடப்படவிருந்த இடத்தில் இரவு 8 மணி முதலே மாணவர்கள் கூடத் தொடங்கி விட்டனர். சுமார் 300 மாணவர்கள் கூடியிருந்த நிலையில் 8.30 மணியளவில் ஒட்டுமொத்த வளாகத்திலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
உடனே, அங்கே கூடியிருந்த மாணவர்களுக்கு கியூஆர் குறியீடு அச்சிடப்பட்ட ஏ4 பேப்பர்களை மாணவர்கள் சங்கத்தினர் விநியோகிக்கத் தொடங்கினர். அதன் உதவியுடன், மாணவர்கள் அவர்களது செல்போனில் ஆவணப்படத்தை பார்த்தனர். சில மாணவர்கள் லேப்டாப், ஒலிபெருக்கிகளை கொண்டு வந்தனர். சிறுசிறு குழுக்களாக சேர்ந்து லேப்டாப்பில் மாணவர்கள் ஆவணப்படத்தை பார்க்கத் தொடங்கினர்.
இந்நிலையில், ஆவணப்படத்தை பார்த்துக் கொண்டிருந்த மாணவர்கள் மீது, அருகே அமைந்துள்ள டெஃப்லாஸ் உணவகத்தில் இருந்து கற்களும் செங்கற்களும் வீசப்பட்டன. இதனையடுத்து, அங்கே கூடியிருந்த மாணவர்கள் ஜே.என்.யூ. பிரதான நுழைவு வாயிலுக்கு ஊர்வலமாகச் சென்று முழக்கங்களை எழுப்பினர். அப்போது மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இது தொடர்பாக ஊடகத்தினருடன் பேசிய ஜே.என்.யூ. மாணவர் பிரவீன், “ஷூ அணிந்த காலால் அவர்கள் எட்டி உதைத்தார்கள். என்னையும் அவர்கள் உதைத்தனர். ஏன் அடிக்கிறீர்கள் என்று கேட்டேன். நீ போய்க் கொண்டே இரு என்று அவர்கள் கூறினர்” என்று கூறியுள்ளார்.
மற்றொரு ஜே.என்.யூ. மாணவர், “5-6 பேர் சேர்ந்து ஒரு பையனை அடித்துக் கொண்டிருந்தனர். அங்கே காவலாளிகள் நின்று கொண்டிருந்தார்கள். என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதைப் பாருங்கள் என்று அவர்களிடம் கூறினேன். ஒருவன் என்னிடம் ஓடி வந்தான். என் அருகில் வந்ததும் என் முகத்தில் குத்தினான்” என்று தெரிவித்தார். அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏபிவிபி) சங்கத்தினர் கற்களை வீசியதை தான் பார்த்ததாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
கல்வீச்சிலும் தாக்குதலிலும் காயமடைந்த மாணவர்கள் சஃப்தர்ஜங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆனாலும், ஆவணப்படத்தை மீண்டும் திரையிடப் போவதாக ஜே.என்.யூ. மாணவர் சங்கம் அறிவித்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான இந்திய மாணவர் சங்கமும் ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக் கழகத்தில் ஆவணப்படத்தை திரையிடப் போவதாக அறிவித்துள்ளது.
முன்னதாக, மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆவணப் படத்தை பார்க்க கூடியிருந்த ஜேஎன்யூ மாணவர்களிடையே, செல்போன் வெளிச்சத்தில் பேசிய ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ், “உண்மை வெளியே வந்துவிடும் என்று அவர்கள் பயப்படுகிறார்கள். நீங்கள் மின்சாரத்தை தடை செய்யலாம், எங்களிடம் இருந்து திரையை, லேப்டாப்பை பறித்துக் கொள்ளலாம். ஆனால், எங்களது கண்களையும் உத்வேகத்தையும் உங்களால் பறிக்கவே முடியாது. பொதுவெளியில் ஆவணப்படம் திரையீட்டை வேண்டுமானால் மோடி அரசு தடுக்கலாம். ஆனால், பொதுமக்கள் அதனை பார்ப்பதை தடுக்க முடியாது” என்றார்.
ஜே.என்.யூ. மாணவர் சங்க தலைவர் அய்ஷே கோஷ் கூறியது போல, இன்றைய இணைய யுகத்தில் ஒரு அரசு தடை மூலம் மக்களால் இந்த ஆவணப்படம் பார்ப்பதை தடுக்க முடியாது என்றே பலரும் கருத்து தெரிவித்துள்ளார்கள். நம்மூரில் ரஜினி, கமல், விஜய், அஜித் உட்பட பெரிய நடிகர்கள் படம் வரும்போதெல்லாம், ‘இந்த படத்தை திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியிட தடை’ என உயர் நீதிமன்றம் உத்தரவிடும். ஆனால், படம் வெளியாகி சில மணி நேரங்களிலேயே படம் இணையத்தில் வெளியாகிவிடும். அதுபோல், மோடி குறித்த பிபிசி ஆவணப்படத்தை பார்ப்பதற்கும் டவுன்லோட் செய்வதற்குமான இணைப்புகள் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுதான் வருகிறது. ஆவணப்படம் தொடர்பான கருத்துகளும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.