தூய்மைப் பணியாளர்கள், அவர்களுக்கு ஆதரவாக போராடியவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை நள்ளிரவில் கைது செய்து, காவல் துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.
சென்னை மாநகராட்சியின் 5, 6-வது மண்டலங்களில் தூய்மைப் பணிக்காக ரூ.276 கோடிக்கான ஒப்பந்தத்தை தனியாரிடம் ஒப்படைப்பதை எதிர்த்தும், திமுக அளித்த தேர்தல் வாக்குறுதியின்படி பணி நிரந்தரம் செயய்க் கோரியும் தூய்மைப் பணியாளர்கள் 13 நாட்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் முன்பாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனிடையே, போராட்டம் என்ற பெயரில் நடைபாதை, சாலையை மறித்து போராடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது என தெரிவித்த உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, ரிப்பன் மாளிகை முன்பாக போராட்டம் நடத்தி வரும் தூய்மைப் பணியாளர்களை உடனடியாக அங்கிருந்து அப்புறப்படுத்த போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதேநேரம், முறைப்படி போராட்டம் நடத்த அனுமதி கோரினால், அதற்கு சட்டப்படி பரிசீலித்து போலீஸார் அனுமதி வழங்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.
கலைந்துபோக மறுப்பு: உயர் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலும் கலைந்துபோக மறுத்து தூயமைப் பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, பி.கே.சேகர்பாபு ஆகியோர் தலைமையில், மேயர் ஆர்.பிரியா, துணை மேயர் மு.மகேஷ்குமார், நகராட்சி நிர்வாகத் துறை செயலர் தா.கார்த்திகேயன், ஆணையர் ஜெ.குமரகுருபரன் ஆகியோர் முன்னிலையில் ரிப்பன் மாளிகையில், தூய்மைப் பணியாளர்கள் தரப்பினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய முடிவு எட்டப்படவில்லை.
பின்னர் செய்தியாளர்களிடம் மேயர் பிரியா கூறும்போது, “போராடி வரும் தூய்மைப் பணியாளர்கள், பணிப் பாதுகாப்பு, ஊதிய பாதுகாப்பு ஆகிய கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். போராட்ட அமைப்புடன் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தன. அவர்கள் தரப்பிலும், மாநகராட்சி தரப்பிலும் நீதிமன்றம் சென்றனர். பொதுநல வழக்கில், ‘ரிப்பன் மாளிகை முன்பு உள்ள பகுதி போராட்டம் நடத்தக்கூடிய இடம் இல்லை. உடனடியாக போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தப்பட வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை ஏற்று தூய்மைப் பணியாளர்கள் அனைவரும் கலைந்து செல்ல வேண்டும்.
தூய்மைப் பணியாளர்கள் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் பணியில் சேர நீதிமன்றம் கால அவகாசம் வழங்கியுள்ளது. எனவே, அனைவரும் விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு என்றும் மாநகராட்சியில் பணிப் பாதுகாப்பு இருக்கும். போராட்டம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அந்த தீர்ப்பின் அடிப்படையில் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்கும்” என்றார்.
தூய்மைப் பணியாளர்களுக்கு சட்ட உதவி வழங்கிவரும் உழைப்போர் உரிமை இயக்கத் தலைவர் பாரதி கூறும்போது, “எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை ஒருபோதும் கலைந்து போக மாட்டோம். எங்கள் நிலைப்பாட்டிலிருந்து பின்வாங்க மாட்டோம். கைது செய்தாலும் பரவாயில்லை.
மக்களும், அரசியல் கட்சிகளும் கைவிட மாட்டார்கள். அருந்ததியர், ஆதிதிராவிடர் மக்களுக்கான சுதந்திரத்தை நோக்கி போராடுவோம். பகத் சிங், அம்பேத்கர் வழியில் தொடர்ந்து போராடுவோம். எங்கள் போராட்டத்தை அரசு ஒருபோதும் ஒடுக்க முடியாது. இந்த விவகாரத்தில் முதல்வர் உரிய தீர்வு காண வேண்டும்” என்று கூறினார்.
போலீஸ் கட்டுப்பாட்டில் ரிப்பன் மாளிகை: அதன்பின், உயர் நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை கலைந்து செல்லுமாறு காவல் துறையினர் புதன்கிழமை மாலை அறிவுறுத்தினர். அத்துடன், ரிப்பன் மாளிகை பகுதியில் சுமார் 400-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டனர். அதனால் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளர்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்ற சூழல் நிலவியது.
இந்நிலையில், புதன்கிழமை இரவு 11.30 மணி அளவில் கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இருந்தவர்கள் என 600-க்கும் மேற்பட்டோரை வலுக்கட்டாயமாக 15 அரசுப் பேருந்துகள் மூலம் ராயபுரம், வேளச்சேரி உள்ளிட்ட சென்னை நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். திருமண கூடங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் அவர்கள் அடைக்கப்பட்டனர்.
ஒரு சில பேருந்துகளில் நள்ளிரவு நடு ரோட்டிலேயே தூய்மைப் பணியாளர் இறக்கிவிடப்பட்டதாக கூறப்படுகிறது. வேளச்சேரி பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கும்போது தூய்மைப் பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் அவர்களை அங்கிருந்து காவல் துறையினர் அப்புறப்படுத்தினர்.
‘போலீஸ் அராஜகம் ஒழிக’, ‘எங்களது போராட்டம் நியாயமானது. அதனால் அறவழியில் இதைத் தொடருவோம்’ என கைது செய்யப்பட்டபோது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். மேலும், போலீஸார் கைது நடவடிக்கையின்போது பெண் ஒருவர் மயக்கமடைந்தார். அவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
கூடாரங்கள் அகற்றம்: போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்ட நிலையில், ரிப்பன் மாளிகை முன்பு நடைபாதையில் அமைக்கப்பட்ட கூடாரங்கள் அகற்றப்பட்டன.
மீண்டும் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டம் மேற்கொள்ளாத வகையில், அங்கு போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, சென்னை மாநகராட்சியின் பிற மண்டலங்களை சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அந்தப் பகுதியை சுத்தம் செய்தனர். அங்கிருந்த குப்பைகளை அவர்கள் அகற்றினர்.